பயங்கரவாதிகளை தப்ப வைக்க சதி!
மாலேகானில் அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்ற இந்துத்துவ தீவிரவாதிகளான பிரக்யா சிங், புரோகித் உட்பட 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்திய இத்தீர்ப்பு, சங்பரிவார் கும்பல் நாட்டிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதை படம்பிடித்துக் காட்டுகிறது.

காவியை விட காங்கிரஸ் ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது நெடுங்காலமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி தகர்க்கப்பட்டதும் காங்கிரஸ் ஆட்சியில் தான். முஸ்லிம்கள் விஷயத்தில் மனித உரிமை கமிஷன் விலைபோவது, பாபர் மஸ்ஜித் வழக்கிற்கான ஆவணங்கள் திருடு போனது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதையே நமக்கு சொன்னது. மாலேகான் குண்டு வெடிப்பிற்கான சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பும் இந்துத்துவவாதிகளை காப்பற்ற கூறப்பட்டதாகவே உணரமுடிகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் மாலேகான் என்ற இடத்தில் குண்டு வைக்கப்பட்டு ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பை முஸ்லிம்கள்தான் செய்தனர் என காண்பிப்பதற்காக வெடிகுண்டு வைக்க பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் திருக்குர்ஆன் பிரதிகளையும் சதிகாரர்கள் வைத்து சென்றனர். எனவே இந்த குண்டு வெடிப்பை முஸ்லிம்கள் நிகழ்த்தியதாகவே காவல்துறையும் பத்திரிகைகளும் கூறிவந்தன.
ஆனால் தேசிய பாதுகாப்பு படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே என்பவர் மேற்கொண்ட விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்க பட்டனர். பிரக்யா சிங் என்ற பெண் சன்னியாசிதான் இந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு காரணம் என்று அவரது விசாரணையில் தெரிய வந்ததோடு, அதற்கு உடந்தையாக இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி புரோகித் உட்பட 'அபினவ் பாரத்' என்ற இந்து அமைப்பை சார்ந்த பலர் பயங்கர எதிர்ப்புகளுக்கிடையில் கைது செயயப்பட்டனர். இவர்கள் மீது மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்தது. அந்த விசாரணையில் இந்த கொடுஞ்செயல்களை செய்தவர்கள் தாங்கள் தான் என்று அவர்களால் வாக்குமூலமும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பயங்கரவாதிகளை துணிச்சலுடன் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்களால் தேசிய பாதுகாப்பு படையின் தலைவரான ஹேமந்த் கர்கரேக்கு பல மிரட்டல்கள் வந்த வண்ணமிருந்தன. அவர் தாக்கப்படலாம் என பயந்தது போலவே மும்பை தாக்குதலில் ஹேமந்த் கர்கரே குறிவைத்து படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் கொலையில் சந்தேகம் உள்ளது என பாராளுமன்றத்தில் அந்துலே கேள்வி எழுப்பிய போது துள்ளிக்குதித்தனர் பாஜகவினர். கர்கரேயின் மரணத்திற்கு பின் இந்த விசாரணையும் மரணமடைந்து விடும் என்பதுதான் பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது. அதை உண்மைப்படுத்தும் விதமாக சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அபினவ் பாரத் என்ற அமைப்பினர் தான் என்பதற்கான ஆதாரத்தை போலீசார் சமர்பிக்கவில்லை என்ற சப்பைக்கட்டு காரணத்தை கூறி கடும் சட்டபிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதி ஷிண்டே, சாதாரண கோர்ட்டில் இந்த வழக்கு நடைபெறும்; என்று கூறியுள்ளார்.
நீதித்துறையில் அடிமட்டத்திலிருந்து அதிகாரமட்டம் வரை காவிக்கூட்டம் புகுந்துள்ளதை இது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. நாட்டையே அச்சுறுத்திய இந்த குண்டு வெடிப்பு, நாட்டுக்கு ஏற்பட்ட சவாலாக கருதப்படாமல் சிறுபான்மை, பெரும்பான்மை என கருதப்பட்டதே இதற்கு காரணம். பயங்கரவாத தடுப்பு சட்டத்திலிருந்து இந்த பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டதால் இவர்கள் இனி ஜாமீனில் வெளிவருவது சுலபம். அத்துடன் பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை நடந்ததால் இனி அந்த வாக்குமூலங்களும் விசாரணை தகவல்களும் செல்லாததாகிவிடுமாம். தேசவிரோத சக்திகளை காப்பாற்ற இந்திய நீதித்துறை சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. நீதித்துறைக்கும் நீதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேக்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என பயந்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே அவர்கள் இந்த தீர்ப்பினை கூறியிருக்கலாம். ஆனால் இத்தகைய பயங்கரவாதிகளை தப்ப வைப்பது இந்திய நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை நீதிபதி உணர வேண்டும். அவர்களை அடக்கி ஒடுக்கத்தான் அரசு முனையவேண்டுமே ஒழிய அடிபணிந்தால் பயங்கரவாதிகளால் வன்முறை வெறியாட்டம் மிகைத்து, அமைதி குலைந்துவிடும்.
0 comments:
Post a Comment