
துபாய்: உலகிலேயே உயரமான கட்டிடமான, 'புர்ஜ் துபாய்' இன்று திறக்கப்படுகிறது. உலகின் எந்தவொரு கட்டிடமும் இல்லாத அளவுக்கு இதன் உயரம் 2,700 அடியை தாண்டும்.
தற்போது உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படுவது தைவானில் உள்ள 'தைப்பே 101'. தைப்பே நகரின் பொருளாதார மையக் கழகத்திற்கு சொந்தமான இந்த கட்டிடத்தில் 101 மாடிகள் உள்ளன. இதன் உயரம் ஆயிரத்து 671 அடியாகும். இதைவிட ஆயிரம் அடியாவது அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் 'புர்ஜ் துபாய்' அமைக்கப்பட்டது.
உலகின் உயரமான கட்டிடம் என்பது மட்டுமல்ல இந்த பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளிலும் உச்சத்தில் இருப்பது 'புர்ஜ் துபாய்' தான. டிவி சிக்னல்களுக்காக அமெரிக்காவின் வடக்கு டகோடாவில் அமைக்கப்பட்ட 'கேவிஎல்வி- டிவி' டவர் 2,063 அடி உயரமானது.
தற்போது இந்த உயரத்தையும் 'புர்ஜ் துபாய்' மிஞ்சியுள்ளது. தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நிலவரம் மோசமான நிலையில் இருந்தாலும், கட்டிட திறப்பு விழா திட்டமிட்டபடி (திங்கள் கிழமை) இன்று கோலாகல வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. ஒளி, ஒலி, நீர் மற்றும் பட்டாசுகளின் மூலம் வர்ணஜாலங்கள் நடத்தப்பட்டு திறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும்.
மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பாட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன.
பல்வேறு சிறப்புகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கிய இந்த கட்டிடத்தை கட்டி எழுப்புவதில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.
கட்டுமானப் பணிகளுக்கு அடிமைத் தொழிலாளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து அழைத்துவரப்பட்ட தொழிலாளிகளை முழு நாளும் வேலைவாங்கிவிட்டு 5 டாலர் மட்டுமே கூலியாக கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதோடு, இவ்வளவு பெரிய கட்டிடத்திற்கு தேவையான மின்சாரத்துக்கு எங்கே போவது என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் புகார் கூறிவருகின்றனர்.
ஒருநாளைக்கு இந்த கட்டிடத்திற்கு தேவைப்படும் 'ஏசி' வசதி, 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருக்குவதற்கு சமம் எனக் கூறப்படுகிறது.
இதற்காக பல மில்லியன் கேலன் தண்ணீர் தேவைப்படும். இவையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை உண்டாக்குவதாக பல தரப்பினரும் குறை கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment