பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது: 7ம் தேதி முடிவு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்றவாறு அவ்வப்போது மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை சில நாட்களுக்கு முன் 2 மடங்கு உயர்த்தப்பட்டது. 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


இதனால் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மின்சாரத்துக்கான கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

மேலும் டெல்லி, மும்பையில் வாகனங்களுக்கான கேஸ் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.6 உயர்ந்துள்ளது.

இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கிரித் பாரிக் கமிட்டியும் ஏற்கனவே பெட்ரோல், டிசல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு தக்கவாறு அவ்வப்போது மாற்றியமைக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சமையல் கேஸ் விலையை சிலிண்டருக்கு ரூ.100, மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.6ம் உயர்த்தவும் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

இதற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், திட்டக் கமிஷனும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தற்போது பெட்ரோல், டீசல் விலையை தற்போது அரசே நிர்ணயித்து வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல சமையல் கேஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு மத்திய அரசு பெருமளவில் மானியம் வழங்கி வருவதால் அரசுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்று வருவதால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ரூ.46,000 கோடி இழப்பை சந்தித்தன. இப்போது நாள் ஒன்றுக்கு ரூ.225 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.

இதனால் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைக்குமாறு கிரித் பாரிக் கமிட்டி கூறியுள்ளது.

இது குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர்களின் கூட்டம் வரும் ஜூன் 7ம் தேதி நடக்கிறது.

அதில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்க்காக அளிக்கும் மானியத்தைக் குறைப்பது ஆகியவை குறித்து இறுதி முடிவெடு்க்கப்படவுள்ளது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயரும் என்று தெரிறது. மேலும் கேஸ், மண்ணெண்ணெய் விலையும் உயரக் கூடும்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: