இந்தியக் கடற்படை இரகசியங்களை விற்ற முக்கிய குற்றவாளி லண்டனில் கைது

புதுடில்லி: இந்தியக் கடற்படையின் ஆயுதக் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்களை சில குறிப்பிட்ட ஆயுத வியாபாரிகளுக்கு கொடுத்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ரவிசங்கரன் லண்டனில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவிசங்கரன் முன்னாள் கடற்படைத் தலைமைத் தளபதி அருண் பிரகாஷின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 12 ஆம் திகதி லண்டன் பொலிஸாரால் ரவிசங்கரன் கைது செய்யப்பட்டார்.இருப்பினும் அவருக்கு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணை அளித்துள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ரவிசங்கரனுக்கு எதிராக இன்டர்போல் பொலிஸார் சிவப்பு அறிவிக்கையை வெளியிட்டனர்.இதையடுத்து கடந்த நான்கு வருடங்களாக ரவிசங்கரன் தேடப்பட்டுவந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ரவிசங்கரன் ஒரு தலைமறைவுக் குற்றவாளி என டில்லி நீதிமன்றம் பிரகடனம் செய்தது. அவரைக் கைது செய்து அனுப்புமாறு கோரி மத்திய அரசு இங்கிலாந்து நீதிமன்றையும் அணுகியது. இருப்பினும் லண்டன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பிய ரவிசங்கரன் பிரான்ஸ்,இத்தாலி, டென்மார்க் என ஓடிக்கொண்டிருந்தார்.

கடற்படை ரகசிய கசிவு வழக்கில் இதுவரை நான்கு கடற்படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து அப்போது கடற்படைத் தளபதியாக இருந்த அருண் பிரகாஷ் பதவி விலக முன்வந்தார்.ஆனால், அதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை விங்கொமாண்டர் எஸ்.எல்.சுர்வே ஓய்வு பெற்ற கடற்படைக் கொமாண்டர் குல்புஷன் பராஷார். இடைநிறுத்தம் செய்யப்பட்ட கடற்படைக்கொமாண்டர்கள் விஜேந்தர் ராணா, வி.கே.ஜா. ஆகியோராவர்.

2006 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி சுர்வே, ரவிசங்கரன், ஜா. ராணா மற்றும் ராஜ் ராணி, ஜெய்ஸ்வால், முகேஷ் பஜாஜ், ஓய்வு பெற்ற விங்கொமாண்டர் கோஹ்லி,காஷ்யப்குமார்,குல்புஷன் பராஷார் ஆகியோர் மீது அலுவலக ரகசியக் காப்புச்சட்டம் இந்திய குற்றவியல் சட்டத்தின் 120பி ஆகியவற்றின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.

தற்போது கைதாகியுள்ள ரவிசங்கரனை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் சி.பி.ஐ. இறங்கியுள்ளது.இதற்கு பல வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: