தமிழை வழக்கு மொழியாக்குவதற்காக உயர் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கைதான வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ராஜு, பார்த்தசாரதி, அங்கையற்கண்ணி, சக்திக்கனி உட்பட 7 பேர் உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 17ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரண்டாவது நாளில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொற்கொடி, செய்யாளன் உட்பட 7 பேரையும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலிடம் 2 நாட்களுக்கு முன்பு கைதான வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு கோரிக்கை விடுத்தார்.
சில உத்தரவாதங்களை குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தால் பிணை வழங்க முடியும் என்று தலைமை நீதிபதி கூறினார். அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் ஏற்கவில்லை. கைது சம்பவத்தை சட்ட விரோதமாக காட்டியதால் அதை அவர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் தலைமை நீதிபதியிடம் பிணை கேட்டு வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, பிரபா ஸ்ரீதேவன் ஆகியோரை கொண்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமர்வு அளித்த உத்தரவில், நீதிமன்ற வளாகங்களில் போராட்டங்கள் நடத்தக் கூடாது என்பது பற்றி சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
எனவே இந்த வளாகத்துக்குள் மனுதாரர்கள் நடத்திய போராட்டங்கள் எதுவும் ஏற்புடையதல்ல. 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட மற்றவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது நிலவும் சூழ்நிலையையும், அவர்களது உடல்நிலையையும் கணக்கில் கொண்டும், எந்தவித நிபந்தனைக்கும் கட்டுப்படுவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்தும், அவர்களை நிபந்தனை பிணையில் விடுவிக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
இந்த சிறப்பு வழக்குக்காக மட்டும் சில நிபந்தனைகளை விதிக்கிறோம். அது மற்ற வழக்குகளுக்கு பொருந்தாது. இவர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் உண்ணாவிரதம் இருப்பது, கோஷங்கள் எழுப்புவது, பதாகைகளை தூக்கிக் கொண்டு ஊர்வலம் செல்வது, பிட் நோட்டீஸ் கொடுப்பது, அரசியல் தொடர்புடையவர்களை கொண்டு வந்து பேசச் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. வழக்கறிஞர் தொழிலை மட்டும் செய்ய வேண்டும்.
மதுரையில் கைது செய்யப்பட்டவர்கள் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் முன்னிலையிலும், சென்னையில் கைதாவர்கள் புழல் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையிலும் ஆஜராகி, சொந்த பிணை பெற்று வெளியே வரலாம். உண்ணாவிரதத்தை தொடர மாட்டோம் என்ற அவர்களின் உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது. இந்த நிபந்தனைகளையும் உத்தரவாதத்தையும் இவர்கள் மீறினால் எப்போது வேண்டுமானாலும் பிணை உத்தரவு ரத்தாகும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 வழக்கறிஞர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 வழக்கறிஞர்களும் விடுதலை ஆனார்கள். இவர்களின் உடல் நிலை குன்றியிருந்ததால் 6 பேரும் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment