'அலட்சியம்... இது 9/11ஐ விட மோசமான தீவிரவாதம்!'

வட அமெரிக்காவின் லூஸியானா மாகாணக் கடற்கரை...

அலையின் நுரையை அமுக்கிவிட்டு கறுப்பாக கரையைத் தொட்டு நிற்கிறது மெக்ஸிகோ வளைகுடா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்பு.. மகா கறுப்பு. உலக சுற்றுச் சூழலின் மீது அடர்த்தியாகப் படிந்துள்ள இந்த பெட்ரோலியத்தின் மிச்சம், இப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மீதும்!

குற்றுயிரும் குலையுயிருமாக கரையொதுங்கும் கடற் பறவைகள், திமிங்கிலக் குட்டிகள், விதவிதமான மீன்கள்....பறவைகளும் மீன்களும் இந்த கறுப்பிலும் எண்ணெய் பிசுக்கிலும் மூச்சுத் திணறி செத்து கரையொதுங்கிக் கொண்டே இருக்கின்றன...

இன்று நேற்றல்ல... கடந்த 60 தினங்களாக நடக்கும் 'கொலை' இது. அலட்சிய அரசுகள், அக்கறையற்ற அதிபர்கள்... மோசடி அதிகாரிகள்... நேர்மையற்ற வர்த்தகர்கள்.. எல்லாருமாகச் சேர்ந்து செய்திருக்கும் பயங்கரவாதம் இது.

'9/11யைஐ விட படு மோசமான வர்த்தக தீவிரவாதம்' என நடுநிலையாளர்களும் அமெரிக்கர்களும் மனம் வெறுத்துக் கூறும் அளவுக்கு நிலைமை முற்றிப் போயிருக்கிறது. ஆனால், இன்னும் நடவடிக்கை தீவிர ஏதும் எடுத்தபாடில்லை...

அப்படி என்னதான் நடந்தது?:

மெக்ஸிகோ வளைகுடாவில் கடலுக்கடியில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். கடந்த ஏப்ரல் 20ம் தேதி, அதாவது இரு மாதங்களுக்கு முன் இந்த எண்ணெய் கிணற்றின் முக்கிய இரும்புக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏராளமான கச்சா எண்ணெய் கடலில் கசிய ஆரம்பித்தது. 11 தொழிலாளர்களும் இறந்தனர். ஆனால், அதை அப்படியே வெளியில் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம்.

அதற்குள் பல மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்துவிட்டது. ஒரு நாளைக்கு சராசரியாக 1.47 மில்லியன் காலன் முதல் 2.52 மில்லியன் காலன் வரையிலான (1 காலன் = 3.8 லிட்டர்) எண்ணெய் வெளியேறிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி இன்று வரை எத்தனை மில்லியன் காலன் கச்சா எண்ணெய் கடலுக்குள் கலந்திருக்கும் என்பதை ஜஸ்ட் கற்பனை செய்து பாருங்கள்...

விஷயம் வெளியில் தெரிந்து பெருமளவு விமர்சனங்கள் எழுந்த பிறகே அமெரிக்க அரசு தலையிட்டது. உடனே அடுத்த 24 மணி நேரத்தில், குழாய் வெடிப்பின் மீது ஒரு தொப்பி போல அமைத்து எண்ணெய் பீச்சிடுவதை நிறுத்தப் போவதாகக் கூறியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம். ஆனால், அதெல்லாம் ஒருசில நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்னும் வேகமாக கச்சா எண்ணெய் பீய்ச்சிக் கொண்டு வெளியேறியபடி இருக்கிறது.

இந்த நிமிடம் வரை எண்ணெய் கசிவு நிறுத்தப்படவே இல்லை. இன்றைய நிலவரப்படி, கடலில் கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான அடர்த்தியில் (density) கச்சா எண்ணெய் கலந்து நிற்கிறது.

அமெரிக்காவின் மூன்று பெரிய மாகாணங்களின் மொத்த பரப்பளவுக்கு (area) இணையான அளவு கடலில் எண்ணெய் தேங்கி நிற்கிறது. ஆனால் இதனை அப்படியே மூடி மறைத்தன பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள். ஒருநாளைக்கு 5,000 பேரல்கள்தான் கசிவதாக பிரிட்டனும், இல்லையில்லை 12,000 முதல் 20,000 லிட்டர்தான் என அமெரிக்காவும் கூறிவந்தது. ஆனால் விஞ்ஞானிகளும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் தன்னிச்சையாக நடத்திய ஆய்வின் முடிவில்தான் மேற்கண்ட உண்மை தெரியவந்தது.

இந்தக் கசிவை எப்படித்தான் அடைக்கப் போகிறார்கள்?:

அது இப்போதைக்கு சாத்தியமா என்றே தெரியவில்லை என்கிறார் டாக் ஹாமில்டன். எண்ணெய்க் கசிவின் தன்மையை ஆராய்ந்தவர்களில் இவரும் ஒருவர். "ஒரு இடத்தில் எண்ணெய்க் கசிவதாகத்தான் சொன்னார்கள். ஆனால் உண்மை அதுவல்ல... மெயின் குழாயின் மேல் பகுதியில் மட்டுமல்லாமல், பக்கவாட்டுப் பகுதிகளிலும் எண்ணெய்க் கசிந்து கொண்டிருக்கிறது. ரைஸர் எனப்படும் குழாயின் பல துளைகளிலும் கட்டுப்படுத்த முடியாத கசிவுகள் இருக்கின்றன. இதை அடைப்பது கஷ்டம்" என்கிறார் ஹாமில்டன்.

சரி எத்தனை நாளைக்கு இந்த எண்ணெய் கசிவு இருக்கும்...? அந்த கிணற்றின் இருப்பு எவ்வளவு?.

இந்தக் கேள்விகளுக்கு பிரிட்டிஷ் பெட்ரோலியம் தந்துள்ள பதில் 'தெரியாது'. இதுதான் விஞ்ஞானிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு இடத்தில் எவ்வளவு இருப்பு உள்ளது என்று தெரியாமலா பல பில்லியன் டாலர்களைக் கொட்டுகிறதா அந்த நிறுவனம்? பிரிட்டிஷ் பெட்ரோலியம் அப்பட்டமாக பொய் கூறுகிறது என்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஒபாமா நிர்வாகம் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், இதுவரை எந்த கடுமையான நடவடிக்கையையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் மீது எடுக்கவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

எப்படி சுத்தம் செய்யப் போகிறார்கள்?:

டிஸ்கவரர் என்டர்பிரைஸஸ் எனும் நிறுவனம் மூலம் கடலில் கசிந்துள்ள எண்ணெய்யை சுத்திகரிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 6,30,000 காலன் எண்ணெய்தான் கடலிலிருந்து சேகரித்து, எரிக்கப்பட்டு்ள்ளது. இந்தப் பணியில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் இரு ஒப்பந்ததாரர்கள் தங்கள் சொந்த கப்பலை ஈடுபடுத்தினாலும், இதற்கென தனி கட்டணத்தை எதிர்ப்பார்க்கிறார்களாம்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமோ இந்த சுத்திகரிப்புப் பணிக்காக 1.6 பில்லியன் டாலரை ஒதுக்கியிருப்பதாகக் கூறுகிறது.
நடந்துள்ள பெரும் சுற்றுச் சூழல் மாசுபாட்டுக்கு முன்னால் இந்தத் தொகை ஒரு தூசு!.

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் தொழிலில் 10 நிறுவனங்கள் பல டிரில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 2 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. 180 பில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளன. ஆனால் ஒரு எண்ணெய் கிணற்றின் கசிவை அடைக்க 1.6 பில்லியன் டாலர் மட்டுமே செலவிட முன்வந்துள்ளது எத்தனை பெரிய கொடுமை!.

எண்ணெய் பரவாமல் இருக்க தற்காலிக தடுப்பு அமைத்துள்ளனர் அமெரிக்க கோஸ்ட் கார்ட் மற்றும் கடற்படையினர். ஆனால் அது ஓரளவுதான் பலன் தந்தது. கசிவின் அளவு அதிகமாக உள்ளதால் தடையைத் தாண்டி கடலில் எண்ணெய் பரவிக்கொண்டே உள்ளது.

சுத்தப்படுத்துதல், மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக 17,000 ராணுவ வீரர்களை அமெரிக்கா நியமித்துள்ளது. பல தன்னார்வ நிறுவனங்களும் ஈடுபடத் தயாராகி வருகின்றன. ஆனாலும் உடனடிப் பலன் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

இந்த எண்ணெய்க் கசிவால் லூசியானா மற்றும் மெக்ஸிகன் வளைகுடா கரையோரங்களில் வசிக்கும் மக்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இந்த மக்களின் அடிப்படைத் தொழிலே மீன்பிடிப்பதுதான். இனி பல மாதங்களுக்கு அந்தத் தொழிலைத் தொடவே முடியாது. பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் அடர்த்தியாகக் காணப்படுவதால், இங்கெல்லாம் மீன்கள் சரளமாக வரவே பல ஆண்டுகள் மாதங்கள் பிடிக்குமாம்.

இயற்கை வளங்கள், அந்தப் பகுதி கடற்கரைகள் என சகலமும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பின் அளவைக் கூட இன்னும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் அது எந்த அளவாக இருந்தாலும் முழுமையாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் ஈடு செய்ய வேண்டும் என இப்போது அறிவித்துள்ளார் ஒபாமா.

பாதிக்கப்பட்ட பகுதியை முழுவதுமாகப் பார்த்தபின் அவர் கூறியது இது: "பெரும் புயல், இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட அமெரிக்கா இப்படியொரு மோசமான பாதிப்புக்கு உள்ளானதில்லை. இது நிச்சயம் மிகப் பெரிய சவால்தான். ஆனால், கடலில் கலந்துள்ள 90 சதவிகித எண்ணெயை சுத்தப்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்குக் காரணமான நிறுவனத்தை சும்மா விட முடியாது. முழுமையான நஷ்ட ஈடு தந்தாக வேண்டும்" என்றார்.

இனி ஆயில் நிறுவனங்களுடன் அமெரிக்கா பங்குதாரராக இருக்காது.. கண்காணிப்பாளராக இருந்து இனியொரு விபத்து நடக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் முழங்கியுள்ளார்.

ஆனால் அவரது இந்த வார்த்தைகள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சமாதானப்படுத்தியதாகத் தெரியவில்லை. 60 நாட்கள் வரை அமைதியாக வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இன்று அவர் கூறியிருப்பது வெற்று வார்த்தைகளே என்று எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர் மக்கள்.

இந் நிலையில் ஆர்டிக் கடல் பகுதியில் புதிய மெகா சைஸ் எண்ணெய் கிணறுகளைத் தோண்ட ஷெல் கார்ப்பரேஷனுக்கு இரு தினங்களுக்கு முன் அனுமதி தரப்பட்டுள்ளதையும், இந்த ஷெல் நிறுவனத்திடமும் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் மாற்றுத் திட்டம் இல்லை என்பதையும் என்னவென்று சொல்வது...!
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: