கண்ணிவெடிகள் கண்டறிய புதிய தொழில்நுட்பம்
நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய தொழிநுட்பத்தை பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஹோலோகிரபிக் ராடார் முறை மூலம் நிலக்கண்ணிவெடிகளை மிக துல்லியமாக கண்டறிந்துவிடமுடியும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் படி உலகில் எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் புதைக்கப்பட்டுள்ள சுமார் 100 மில்லியன் வரையிலான நிலக்கண்ணிவெடிகளை கண்டறிந்து அவற்றை அகற்றும் முயற்சிகளில் மெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகங்களை கண்டறியும் கருவிகளே பயன்படுத்தப்படுகின்றன.
நிலக்கண்ணிவெடிகளில் சிக்கி ஒவ்வொரு மாதமும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்றில் கொல்லப்படுகின்றனர் அல்லது உடல் அவயங்களை இழந்து ஊனமடைகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
உலோகங்களை கண்டறியும் கருவிகள், பொதுவாக எந்தவொரு உலோகத் துண்டுகளையும் கண்டறியக்கூடியவை என்பதால், பாதிப்புகளை ஏற்படுத்தாத உலோகத்துண்டுகளை கண்டறிவதிலேயே சுமார் 90 வீதமான வளங்களையும் நேரத்தையும் பொதுவாக அவை வீணடித்து விடுகின்றன.
ஆனால் தற்போது லேசர் கதிர்களைப் பாய்த்து பொருளொன்றின் முப்பரிமான பிம்பத்தை கண்டிறியும் ஹோலோகிரபிக் ராடார் என்ற முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக் உள்ளிட்ட எந்தவகையான பொருட்களால் ஆன நிலக்கண்ணிவெடிகளையும் மிக இலகுவாக கண்டிறிந்துவிடமுடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
வழமையான ராடார் கருவிகள் நிலத்தினுள்ளே கதிரை அனுப்பி அது தரும் சமிக்ஞைகளை பெறுகின்றன.
ஆனால் பத்தாயிரம் யூரோக்கள் பெறுமதியான ராஸ்கான் ரக ராடார் கருவிகள் கதிர்களை தொடர்ச்சியாக அனுப்புவதன் மூலம் நிலத்தில் புதைந்துள்ள பொருட்களின் தெளிவான நிழற்படத்தை நாம் காண வகை செய்கின்றன.
பேராசிரியர் கொலின் வின்ட்ஸர், தனது ஒய்வு நேரத்தில் சுமார் 12 வருடகாலத்தை இந்த கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் செலவிட்டு வந்துள்ளார்.
இந்தக் கருவியுடன் ஏனைய தொழிநுட்பத்தையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியில் மனிதர் ஈடுபட தேவையில்லாத தானியங்கி முறையையும் கைக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
0 comments:
Post a Comment