'அவதாரை' நோக்கி ஆஃப்கன்- உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய ஆஃப்கன் கனிம புதையல்


உலகின் கவனத்தை இன்று தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்காவின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1ட்ரில்லியன் டாலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'மோப்பம் பிடித்தவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.

இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.

'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி.

லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது.ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து,ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும்" என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?
இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் ஜிடிபியே 1.23 ட்ரில்லியன்தான்!!.

இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டாலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டாலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் வெற்றிபெறும் நிலை. நாட்டின் பல பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.

இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டாலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.

ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

mohamedali jinnah said...

அமெரிக்க தலையீடும் மற்ற நாடுகளின் வரவும் பின் எதற்கு?
அள்ளிச் செல்லத்தானே.