
சென்னை: விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலைய ரயில் பாதை தகர்ப்பு வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. முக்கியக் குற்றவாளி விரைவில் கைதாவார் என தமிழக உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டிக்கும், பேரணி ரயில் நிலையத்துக்கும் இடையே சித்தணி என்ற இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
இதில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டது. சேலம் எக்ஸ்பிரஸ் அப்பாதையை கடந்த சில நிமிடங்களில் குண்டு வெடித்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு சத்தம் கேட்டு என்ன என்று பார்த்தபோது குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பேரணி ரயில் நிலையத்தை உஷார்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் உஷார்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மலைக்கோட்டை ரயில் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
குண்டு வெடித்த இடத்தில் ராஜபக்சேயின் இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் கிடந்தது. இதனால் தமிழீழ ஆதரவாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
சந்தேகத்தின் அடிப்படையில் தமிழர் தேசிய கட்சியைச் சேர்ந்த 10 பேரை அழைத்து விசாரித்து வருகின்றனர் போலீஸார். அவர்கள் வசம், ஒரு தனியார் டிவியின் செய்தியாளரும் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் பழைய குற்றவாளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விழுப்புரம் சரக டிஐஜி மாசாணமுத்து, ரயில்வே டிஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஜாபர்சேட் பேசுகையில், விழுப்புரம் ரயில் தண்டவாள தகர்ப்பு வழக்கில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. முக்கிய குற்றவாளி விரைவில் பிடிபடுவான். முக்கிய துப்பு கிடைத்துள்ளது. ரயில் தண்டவாளம் தகர்ப்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையை தொடங்கி விட்டனர் என்று தெரிவித்தார்.
மாறன், ரேடியோ வெங்கடேசனுக்குத் தொடர்பு?
இந்த நிலையில் குண்டு வெடித்த நாளுக்கு முதல் நாளன்று தமிழர் விடுதலைப் படை தலைவர் மாறனும், ரேடியோ வெங்கடேசனும் சித்தணி கிராமத்தில் நடமாடியதாக ஒரு தகவல் கூறுகிறது. எனவே அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
ஓரிரு நாட்களில் உறுதியான முடிவு-டிஜிபி
முன்னதாக நேற்று காலையில், கியூ பிரிவு எஸ்.பி அசோக்குமார் விசாரணையை முறையாக தொடங்கினார். அவர் விழுப்புரம் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
வழக்கு குறித்து நேற்றிரவு டிஜிபி லத்திகா சரண் கூறுகையில்,
தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் பற்றி துப்பு துலக்கி வருகிறோம். குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் துண்டு பிரசுரம் ஒன்று கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உள்ள வாசகங்கள் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்ததை எதிர்க்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கருதுகிறோம்.
துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தம்பிகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், குற்றவாளிகள் பிரபாகரனின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என்றும் கருதுகிறோம்.
இதுவரை சந்தேகத்தின் பேரில் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்து உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கியூ பிரிவு போலீசார் அனைவரும் இந்த விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். குற்றவாளிகள் பிடிபடும் வரை அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். விசாரணையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கியூ பிரிவு போலீசாருக்கு உதவியாக உள்ளூர் போலீசாரும், ரயில்வே போலீசாரும் செயல்படுவார்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட துண்டு பிரசுரத்தில் உள்ள கையெழுத்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சம்பவத்தில் நக்சலைட்டுகள் தொடர்பு இல்லை என்று ஏற்கனவே கூறி விட்டேன். விழுப்புரம் பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிராக ஏற்கனவே பலர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களிடமும், விசாரணை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவாளிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரமுடியும் என்று கருதுகிறேன்.
பொதுமக்களும், ரயில் பயணிகளும் அச்சப்படத் தேவையில்லை. இந்த சம்பவத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தண்டவாளங்களில் டிராலி மூலம் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான பணியில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் வருவாய்த்துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பாதுகாப்பு இன்னும் ஒரு மாதத்துக்கு தீவிரமாக இருக்கும்.
பாதுகாப்புப் பணிக்கு உதவி செய்யும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 36 பெரிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை செம்மொழி மாநாட்டுக்கும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 19ம் தேதியன்று ஊட்டிக்கு ஜனாதிபதி வருகிறார். அவர் அங்கு சில நாள்கள் தங்கி இருக்கிறார். அவரது சுற்றுப் பயணத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்றார் லத்திகா சரண்.
குடோன்களில் சோதனை:
இந் நிலையில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதின் எதிரொலியாக போலீசார் விழுப்புரம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வெடிமருந்து குடோன்களில் திடீர் சோதனை செய்து வருகின்றனர்.
வெடிமருந்து வாங்கியவர்களின் விபரம் மற்றும் ஸ்டாக் உள்ளிட்டவை குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் கல்குவாரிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment