
சென்னை: மத்திய அரசின் சுங்கவரி முறைகேட்டை சீரமைக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை ராயபுரத்தில் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம், தென்இந்திய மோட்டார் அசோசியேஷன் தலைவர் கோபால், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் சுங்கவரி வசூலிப்பில் நடந்து வரும் முறைகேடுகளை சீரமைக்கவும், இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் நாளை மறுதினம் (ஆக., 2) முதல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் தென்மாநில மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, வரும் 5ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், 6ம் தேதி முதல் அகில இந்திய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த டேங்கர், டிப்பர் லாரி மற்றும் வேன் ஆகியவற்றின் உரிமையாளர்களும் கலந்து கொள்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி, பொன்னேரி செல்லும் நெடுஞ்சாலையை இதுவரை சீரமைக்காத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன. வாகனங்கள் ரிப்பேராகி இயக்க முடியாமல் தொழில் பாதிக்கப்படுகிறது.
கலந்தாய்வு கூட்டத்தில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா பேசியதாவது: இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து, சுங்கவரி வசூலிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. 200 கோடி ரூபாய் சுங்கவரி வசூலிப்பிற்காக தனியாரிடம் 25 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரு நாளைக்கு 20 லட்சம் ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இத்தொகை மாதத்தில் ரூ.6 கோடி வீதம் ஆண்டுக்கு 72 கோடி ரூபாய் என 25 ஆண்டுகளில் 1,800 கோடி ரூபாயாக வசூலாகிறது. இந்திய சாலைகளை மத்திய அரசு, தனியார் நிறுவனங்களுக்கு "தாரை' வார்த்து கொடுத்துள்ளது. இதனால், இந்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு 52 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுங்கவரியாக நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஓசூரிலிருந்து தொப்பூருக்கு 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு 330 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் 45 காசு என்று சுங்கவரி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ரூபாய் 45 காசு வசூலிக்கப்படுகிறது.
இது போன்ற முறைகேடுகளை அரசு உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 2ம் தேதி முதல் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால், 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது. அதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். பெட்ரோல், டீசல் விலை உயர்வும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் அவற்றின் விற்பனை வரி 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 8 சதவீதமாகத்தான் உள்ளது. இதையும் குறைக்க அரசு முன்வரவேண்டும். இவ்வாறு சண்முகப்பா கூறினார். கூட்டத்தில், மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment