
ராஞ்சி: எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபட முடியுமோ அந்த அளவிற்கு மாவோ., நக்சல்கள் தங்களுடைய வெறி ஆட்டத்தை நடத்தி வருகின்றனர் என்று சொன்னால் மிகையாக இருக்க முடியாது . கடந்த 24 மணி நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தல், ஆள்கடத்தல் என கடும் வன்முறையில் ஈடுபட்டனர். உள்துறை செயலர் ஆய்வு செய்து வந்துள்ள நேரத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. சில இடங்களில் ரயில் தண்டவாளத்தில் நாச வேலை நடத்தப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் மாவோ., நக்சல்கள் முக்கியப்புள்ளியை போலீசார் கொன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவோ., நக்சல்கள் 2 நாள் பந்த் க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையொட்டி சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம் மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. ஆனாலும் நக்சல்கள் வெறிச்செயல் தடுக்கப்பட முடியவில்லை. சட்டீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப்., முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.
தண்டவத்தா பகுதியில் உள்ள காங்., தலைவர் ஆவ்தேஸ் கவுதம் வீடு தாக்கப்பட்டது. இங்கு இருந்த இவரது நண்பர் மற்றும் காவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஒரிசாவில் உள்ள கியேஜர் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சில காவலர்கள் தப்பி ஓடி விட்டாலும், இருவரை நக்சல்கள் கடத்தி கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலின்போது சுமார் 90 நக்சல்கள் வந்திருந்தனர் என போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் போலீசாரால் எதிர்கொள்ள முடியவில்லை. வனத்துறை அலுவலகம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்கானது. ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில்வே ஸ்டேஷன் ஒன்று சூறையாடப்பட்டது. இதனால் மேற்கூறிய மாநிலங்களில் பதட்டம் நிலவுகிறது.
இதே நேரத்தில் அசாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள் கோல்கட்டா செல்லும் ரயில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தனர். இதில் 2 பேர் பலியாயினர். 10 பேர் காயமுற்றனர்.
0 comments:
Post a Comment