லாகூர் மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: கொடூர சம்பவத்தில் 42 பேர் பலி


லாகூர்:பாகிஸ்தானின் புகழ் பெற்ற, "சூபி' மசூதி ஒன்றில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 42 பேர் பலியாயினர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர். இக்கொடூர சம்பவம், பாகிஸ்தான் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் சன்னி மற்றும் ஷியா ஆகிய இரு பிரிவு முஸ்லிம்களாலும் வணங்கப்படும் தலமாக, "தாதா தர்பார்' என்ற மசூதி அமைந்துள்ளது. இங்கு, "சூபி' ஞானியான செய்யது அப்துல் ஹசன் பின் உஸ்மான் பின் அலி அல் ஹஜ்வேரி என்பவரின் சமாதி அமைந்துள்ளது.



வியாழக்கிழமை தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வழிபாடு செய்வர். நேற்று முன்தினம் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடு செய்து கொண்டிருந்த போது, இரவு 11 மணியளவில் அடுத்தடுத்து மூன்று மனித வெடிகுண்டுகள் வெடித்தன.இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 42 பேர் பலியாயினர்; 180 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 25 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.வெடிகுண்டுகள் ஏற்படுத்திய பயங்கர சத்தத்தினாலும், கட்டடத்தின் மேல்பகுதி சிதைந்து விழத் துவங்கியதாலும் ஏற்பட்ட பீதியில் அங்கிருந்த மக்கள் சிதறியோடினர்.



இச்சம்பவத்தில் மனித வெடிகுண்டுகளாகச் செயல்பட்டவர்கள், 10 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை தங்கள் உடலில் வைத்திருக்கக் கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.மூன்று பேரில் ஒருவர், மசூதி வாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த இடத்திலும், மற்றொருவர் அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகேயும், மூன்றாமவர் மசூதிக்கருகில் உள்ள மார்க்கெட்டிலும் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.மேலும், மூவரில் இருவரது தலைகளும், உடல் பாகங்களும் கண்டறியப்பட்டு, தடயவியல் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



இச்சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், "சூபி' முறையிலான வழிபாட்டுக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும், பிரதமர் ரசா கிலானியும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிபர் சர்தாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இது போன்ற நடவடிக்கைகளால், தலிபான்களுக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. என்ன விலை கொடுத்தாவது தலிபான்களை அழிக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.



இச்சம்பவம், பயங்கரவாதிகளுக்கு மதம், நம்பிக்கை கிடையாது என்பதைக் காட்டியுள்ளது' என்று கூறியுள்ளார்.கடந்த மே மாதம், அகமதியா பிரிவைச் சேர்ந்த இரு மசூதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 82 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி மாதம், "பன்னு' என்ற இடத்தில் வாலிபால் விளையாட்டு நடந்து கொண்டிருந்த போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 101 பேர் பலியாயினர்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: