
சென்னை: தமிழகத்தில் பாரத் பந்த்துக்கு 50 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடுகின்றன. தனியார் பேருந்துகள் பெருமளவில் ஓடவில்லை. கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்கள் ஸ்தம்பித்துள்ளன. பலஇடங்களில் கல்வீச்சு நடந்துள்ளது. சாலை மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடவில்லை. லாரிகள் முழுமையாக ஓடவில்லை. பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு முக்கிய கட்சிகள் சில ஆதரவு தெரிவிக்கவில்லை. குறிப்பாக பாமக,தேமுதிக பங்கேற்கவில்லை.
தொழிற்கூடங்கள் இயங்கவில்லை
மேலும் வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்திருப்பதால் சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தின் இதர பகுதிகளில், சில பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
திருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு
பாரத் பந்த்துக்கு கரூர் மாவட்டத்தில் பொது மக்கள் 75 சதவீத ஆதரவு அளித்துள்ளனர்.
கரூர் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த பகுதி. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பொது மக்களையும், வணிக நிறுவணங்களையும் , தொழிற்சாலைகளையும் கடுமையாக பாதித்து வந்தன. இதனால் மத்திய மாநில அரசுகள் மீது கரூர் மாவட்ட மக்கள் காட்டமாகவே இருந்தனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு கரூரில் 75 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது.
தனியார் பஸ்கள், வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை கம்பெனிகள், சாயப்பட்டறைகள், டீ கடை போன்றவை முழுவதுமாக மூடப்பட்டு இருந்தன.
ஆனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு பேருந்துகள், நீதிமன்றங்கள், அரசு அலுவகங்கள் போன்றவைகள் இயங்கி வருகின்றன.
மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கருதப்படும் குளித்தலை, பள்ளபட்டி, அரவாக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மாயனூர், தோகமலை, வேலாயுதம்பாளையம் போன்ற பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கின்றது.
பந்த்தை முன்னிட்டு கடைகளை திறந்து வைப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது. மேலும், பாதுகாப்பு கருதி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் நகரின் முக்கிய மையப்பகுதியான பஸ் நிலையம் அருகில் வஜ்ரா வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் பந்த் முழு அளவில் உள்ளது. அங்குபெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன.
2.5 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
அவிநாசியில் 1 லட்சம் பனியன் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். 500 தொழிற்சாலைகள் இயங்கவில்லை.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 10 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
வெள்ளக்கோவிலில் கழிவுப் பஞ்சு ஆலைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இங்கும் பந்த் முழு அளவில் உள்ளது.
கோவையில் கடைகள் அடைப்பு
கோவையிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்லன.
காங்கேயம், சின்னசேலம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை, சீர்காழி,குத்தாலத்தில் கிட்டத்தட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் மீது கல்வீச்சு
குமரி மாவட்டத்திலும் பந்த்துக்கு ஓரளவு ஆதரவு கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள்,வேன்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திருவட்டாறு, கொத்தியோடு, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் அரசு பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. திண்டுக்கல்லில் 2 அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.
வால்பாறை, கடலூர், கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. கேரள எல்லையில் உள்ள குமுளியிலும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, கரூர், திருப்பூர், ஈரோடு, கன்னி்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் பந்த் பெருமளவில் நடந்துவருகிறது.
சென்னையில்..
சென்னையில் அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.
முக்கியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
புறநகர்ப் பகுதிகளில் பெருமளவிலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திருமங்கலத்தில் மோதல்-6 பேர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு கோஷ்டியினரும், எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோஷ்டியினரும் திரண்டதால் அங்கு பெரும் மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் கற்களை வீசி சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
உசிலம்பட்டி சாலையில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்
ஒரு லாரியும் ஓடவில்லை
நாமக்கல்லிலிருந்து இயக்கப்படும் லாரிகள் எதுவும் ஓடவில்லை. தமிழகம் முழுவதும் லாரிப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
கேரளாவில் பந்த் முழு அளவில் நடைபெறுவதால் கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவை மாவட்டத்தில் வாலையாறு சோதனைச்சாவடியுடன் லாரிகள் அனைத்தும் நீண்ட அனுமார் வால் போல சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஒரு வாகனம் கூட செல்லவில்லை.
திருவாரூர்-திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியல்
திருவாரூர், திருத்துறைப் பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில் சிபிஐ எம்.எல்.ஏ உலகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் பாசஞ்சர் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
அதேபோல திருவாரூர் ரயில் நிலையத்தில், சிபிஐ கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ரயில்மறியல் செய்து கைதானார்கள்.
20 இடங்களில் சாலை மறியல்
திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 20 இடஙகளில் சாலை மறியல் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ் கட்சி செய்தது.
மன்னார்குடி அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சிபிஐ எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் தலைமை தாங்கி கைதானார்.
40,000 லாரிகள் நிறுத்தம்
பந்த்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டு உள்ளன.
நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறுகையில்,
தமிழகத்தில் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் 20 லட்சம் உள்ளன. இவற்றில் 40 ஆயிரம் லாரிகள் தினந்தோறும் வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்றன. வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் கர்நாடகா வழியாக தான் செல்ல வேண்டும். அங்கு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள பா.ஜனதா, ஆட்சி செய்கிறது. இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்கிறது.
எனவே பாதுகாப்பு கருதி இன்றே (நேற்று) வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளை நிறுத்திக் கொண்டோம். வெளிமாநிலங்களுக்கு ஏற்கனவே புறப்பட்டு சென்ற லாரிகளை ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்த டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழகத்தை பொறுத்தவரையிலும், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
பலத்த பாதுகாப்பு
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் ரயில் மறியல்-60 பேர் கைது
தென்காசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று காலை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து 55 ஆண்கள், 5 பெண்கள் என 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் பந்த் வெற்றி
காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு வெற்றி அடைந்தது. அங்கு கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. தனியார் பேருந்துள் ஓடவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே ஓடுகின்றன. ஆட்டோக்கள் ஓடவில்லை. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
காரைக்காலிலும் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. அங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தனியார் பள்ளிகள், பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இல.கணேசன் கைது
சென்னையில் இன்று பந்த்தையொட்டி பல இடங்களில் மறியல் நடந்ததால் சாலைப் போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டது.
அண்ணாசாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஎம் எம்.எல்.ஏ. மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில் சிபிஎம் எம்.எல்.ஏ பாலபாரதியும், குழித்துரையில் சிபிஎம்மின் லீலா எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் திமுக - அதிமுக மோதல்
தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் வழக்கம் போல் பரவலாக கடைகள் திறந்து இருந்தது. அப்போது அதிமுக நிர்வாகிகள் கடைகளை மூட சொல்லி வற்புறுத்தி கொண்டு வந்தனர். இதனால் பயந்து போன வணிகர்கள் கடைகளை உடனடியாக இழுத்து மூடினர்.
ஆனால், திமுக -வைச் சேர்ந்த நிர்வாகிகள் மீண்டும் கடைகளை திறக்க கோரி கடை உரிமையாளர்களை வற்புறுத்தி திறக்க வைத்தனர். மீண்டும் கடைகளை திறக்க கூடாது என அதிமுக- வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அங்கு திமுக - அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment