டெல்லி: இந்திய கடற்படைக்காக ரூ. 50,000 கோடி செலவில் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை இந்திய பாதுகாப்புத்துறை மேற்கொண்ட ராணுவ கொள்முதலிலேயே மிகப் பெரிய 'டீல்' இது தான். இதற்கு முன் 126 சுகோய் ரக போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க ரூ. 42,000 கோடியை இந்தியா செலவிட்டது. ஒவ்வொரு சுகோய் 30 எம்.கே.ஐ ரக விமானமும் ரூ. 330 கோடி மதிப்புள்ளதாகும்.
இது தான் இதுவரை இந்தியா செய்த மிகப் பெரிய ராணுவ கொள்முதலாக இருந்தது. அதை தூக்கிச் சாப்பிடும் வகையில் தலா ரூ. 8,500 கோடி மதிப்புள்ள 6 டீசல்-எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய ராணுவ கொள்முதலாக இது அமையப் போகிறது.
இதற்கான ஒப்புதலை சமீபத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி தலைமையிலான ராணுவ கொள்முதல் குழு பாதுகாப்புத்துறைக்கு வழங்கியது.
இந்த 6 நீர்மூழ்கிகளில் 2 நீர்மூழ்கிகளை கட்டப்பட்ட நிலையில் வாங்கவும், மிச்சம் 4 நீர்மூழ்கிகளை இந்தியாவை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குத் தரும் உலகின் முன்னணி நீர்மூழ்கி தயாரிப்பு நிறுவன்ததுடன் இந்த கொள்முதல் ஒப்புதல் செய்யப்படும்.
இந்தியாவில் மும்பை மாஸகான டாக்ஸ் நிறுவனத்தில் 3 நீர்மூழ்கிகளை கட்டவும், இன்னொன்றை விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப் யார்ட் தளத்தில் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
'Project-75' என்ற பெயரிலான திட்டத்துக்கு ரூ. 50,000 கோடியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிரி நாட்டு கப்பல்கள், விமானங்களின் சோனார்கள், ரேடார்களில் சிக்காத, நெடுந்தூரம் நெடுநாட்கள் கடலுக்கடியில் பதுங்கியிருந்து தாக்கும், அணு ஆயுதங்களை ஏதும் திறன் கொண்ட அதி நவீனமான நீர்மூழ்கிகளாக இவை இருக்கும்.
வழக்கமான டீசல்-எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகள் தங்களது பேட்டரிகளை ரீ-சார்ச் செய்யவும், ஆக்ஸிஜனை சேகரிக்கவும், சில நாட்களுக்கு ஒருமுறை நீருக்கு வெளியே எட்டிப் பார்த்தாக வேண்டும். ஆனால், Air independent system என்ற தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கிகள் பல வாரங்கள் வெளியே வரத் தேவையில்லை. இதனால் அதிகம் செலவானாலும் இந்த வகையிலான நீர்மூழ்கியையே வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆனால், அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகள் வீரர்களின் உணவுத் தேவையைத் தவிர வேறு எதற்காகவும் பல மாதங்கள் கூட வெளியே வர வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
இந்த வகை நீர்மூழ்கிகளைத் தயாரிக்கும் ரஷ்யாவின் Rosoboronexport, பிரான்சின் அர்மாரிஸ், ஜெர்மனியின் எச்.டி.டபிள்யூ, ஸ்பெயினின் நவான்டியா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் இந்த ஆர்டரைப் பெற போட்டியில் இறங்கும் என்று தெரிகிறது. இந்தியாவுக்கு போர் விமானங்களைத் தரத் தயாராக உள்ள அமெரிக்கா நீர்மூழ்கிகளைத் தர இதுவரை தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்தியக் கடற்படையிடம் ரஷ்யாவின கிலோ ரகத்தைச் சேர்ந்த 10 நீர்மூழ்கிகளும், 4 ஜெர்மன் நாட்டு எச்டிடபி்ள்யூ ரக நீர்மூழ்கிகளும் ஒரு பாக்ஸ்ட்ராட் ரக நீர்மூழ்கியும் தான் உள்ளன. இவை மிகவும் பழையவை. இதன் வாழ்நாளை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிப்பது கஷ்டம்.
இதனால் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளைத் தயாரிக்க இந்திய கடற்படையின் மாஸகான் டாக்ஸ் நிறுவனம் முயன்று வருகிறது. ரூ. 20,000 கோடியிலான இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிதாக 6 நீர்மூழ்கிகளை உடனடியாக வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
மேலும் ரஷ்யாவிடமிருந்து அகுலா-2 ரகத்தைச் சேர்ந்த அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட K-152 Nerpa ரக நீர்மூழ்கியை 10 வருட குத்தகைக்கு எடுக்கவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்து. இந்த நீர்மூழ்கி இந்தாண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வந்து சேரும் என்று தெரிகிறது. இதை கையாளும் பயி்ற்சிக்காக இந்திய கடற்படையின் ஒரு பேட்ச் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளது.
இதைத் தவிர ஐஎன்எஸ் அரிஹான்ட் என்ற அணு சக்தியால் இயங்கும் ஒரு நீர்மூழ்கியை கட்டும் பணியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த நீர்மூழ்கி அடுத்தாண்டு தயாராக வேண்டும்.
சீனாவிடம் மொத்தம் 62 நீர்மூழ்கிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் 10 நீர்மூழ்கிகள் அணு ஏவுகணையை செலுத்தும் திறன் கொண்டவை.
அதே போல பாகிஸ்தானிடம் பிரான்ஸ் தயாரிப்பான Air independent system தொழில்நுட்பம் கொண்ட மெஸ்மா என்ற அகோஸ்டா-90 பி ரகத்தைச் சேர்ந்த 3 நீர்மூழ்கிகள் உள்ளன. இதைத் தவிர ஜெர்மனியிடம் 3 நீர்மூழ்கிகளை வாங்கவுள்ளது பாகிஸ்தான்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment