திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் தவிப்பு: எஸ்.ஐ., தேர்வு எழுத அனுமதி மறுப்பால் விரக்தி

சென்னை : திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் எஸ்.ஐ., தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தேர்வு எழுத வந்திருந்த போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., பணிகளுக்கு 1,095 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்காக, காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு நேற்றும், நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்றும் தேர்வுகள் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. காவல்துறையில் குறைந்தபட்சம் ஐந்து வருட பணி மற்றும் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்விற்கு தகுதியானவர்கள். இவர்களில் இருந்து 20 சதவீதமும், நேரடியாக விண்ணப்பித்தவர்களில் இருந்து 80 சதவீதம் பேரும் தேர்வு செய்யப்படுவர். காவல்துறையில் பணிபுரிபவர்களில் திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுத தேவையான கல்வித் தகுதிகள் குறித்து விளக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு தேர்வாணையத்தின் சார்பில், குறிப்பாணை அனுப்பி இருந்தனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிட்டிருந்தனர்.



தமிழகம் முழுவதும் 36 மையங்களில் எஸ்.ஐ., பணிக்கான தேர்வு நேற்று நடந்தது. "திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் எஸ்.ஐ., தேர்வு எழுத தேர்வாணையம் அனுமதித்துள்ளது' என, செய்தி வெளியானது. அதை நம்பி, தமிழகம் முழுவதும் தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத ஏராளமானோர் குவிந்தனர். திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற 700க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட காவலர்கள் கூறியதாவது: கடந்த 1999ம் ஆண்டு முதல் 2007ம் வரை எஸ்.ஐ., பதவிகளுக்கு ஆண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்போது திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பெண் காவலர்கள், எஸ்.ஐ., பதவிக்கான தேர்வில் அனுமதிக்கப்பட்டு பலர் தேர்வாகினர். பின், 2007ம் ஆண்டில் நடைபெற்ற தேர்வில் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பல ஆண் காவலர்கள், எஸ்.ஐ., தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு, இன்றும் பலர் எஸ்.ஐ., பணியில் உள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து, திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எங்களுக்கு மட்டும் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது. இவ்வாறு போலீசார் கூறினர்.



காரணம் என்ன? தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குனர் டி.ஜி.பி., திலகவதி கூறியதாவது: தமிழகத்தில் 1,095 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. இன்று(நேற்று) 32 மையங்களில், போலீஸ் பணியில் இருக்கும் 10 ஆயிரத்து 632 பேர் தேர்வு எழுதியுள்ளனர். நாளை (இன்று) பொதுப்பிரிவை சேர்ந்த 71 ஆயிரத்து 704 பேர், 56 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். விண்ணப்பித்தவர்களின் தகுதிகள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. எஸ்.ஐ., கல்வித் தகுதிக்கான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது. அதே போன்று பொதுப்பிரிவிலும் 2,015 பேரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திலகவதி கூறினார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: