காஷ்மீரில் கலவரம் பரவுகிறது-ஸ்ரீநகரில் பதட்டம்-ராணுவம் வந்தது


ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம்ஒழுங்கு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. கலவரம் பரவி வருகிறது. ஸ்ரீநகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் விரைந்துள்ளது.

முதல்வர் உமர் அப்துல்லா ராணுவத்தை அனுப்புமாறு நேற்று இரவு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ராணுவம் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் ராணுவம் எந்த தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ரோந்து சுற்றுதல், கலவரக்காரர்களை கலைத்து விடுதல், கூட்டங்களை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் மட்டுமே ராணுவம் ஈடுபடும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. வன்முறையாளர்களுடன் ராணுவம் நேரடி மோதலில் ஈடுபடாதுஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத் தாக்குதலைப் பயன்படுத்தினால் அது அரசியல்ரீதியாக பிரச்சினையை தோற்றுவிக்கும் என மத்திய அரசு அஞ்சுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீநகரில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 2 பேர் உயிரிழந்தனர். காலையில் முதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் மூண்டது. இதில் இன்னொருவர் உயிரிழந்தார்.இதையடுத்து ஸ்ரீநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கலவரம் கட்டுப்படவில்லை.

நேற்று முன்தினம் கலவரத்தை தனது வீட்டுக்குள் இருந்தபடி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 25 வயது பேன்சி என்ற இளம் பெண் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்ததால் கலவரம் மேலும் பெரிதானது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், லச்மன்போரா என்ற இடத்தில் கலவரம் மிகப் பெரிதாக இருந்தது. போலீஸார் மீது கலவரக்காரர்கள் கற்களை சரமாரியாக வீசித்தாக்கினர். இதையடுத்து அவர்களை எச்சரிக்கும் வகையில் போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தனது வீட்டு ஜன்னல் வழியாக கீழே பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது துப்பாக்கிக் குண்டு தவறுதலாக பாய்ந்து விட்டது.

அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது முற்றிலும் எதிர்பாராத விபத்து என்று கூறியுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 15 பேர் சிஆர்பிஎப் மற்றும் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்திருப்பதால் காஷ்மீரில் மக்கள் பெரும் கொதிப்புடன் உள்ளனர். இதன் காரணமாகவே கலவரம் கட்டுக்குள் வராமல் பரவி வருகிறது.

மீடியாக்களுக்குத் தடை

ஸ்ரீநகர் உள்ளிட்ட பள்ளத்த்தாக்கு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்கள், டிவி கேமராமேன்களுக்கு கொடுக்கபப்ட்டுள்ள அனைத்து ஊரடங்கு பாஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த பத்திரிக்கையாளரையும் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஊரடங்கு போடப்பட்டுள்ள பகுதிக்குச் சென்ற ஒரு டிவி பத்திரிக்கையாளரை சிஆர்பிஎப் போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதேபோல மாநில அரசின் தகவல் துறை ஊழியர்கள் இருவர் ஊரடங்கு போடப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றபோது அவர்களை சிஆர்பிஎப் வீரர்கள் தாக்கி திருப்பி அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: