வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !

இருபத்து நான்கு மணி நேரமும், தடையில்லா மின்சாரம், மாநிலம் முழுவதும் தண்ணீர் விநியோகம், அபரிமிதமான விவசாய வளர்ச்சி, வந்து குவியும் அந்நிய முதலீடுகள், அவை உருவாக்கும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் என மோடியின் குஜராத் குறித்து பொய்யானதொரு பிம்பம் உருவாக்கப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் குஜராத் குறித்த உண்மைச் செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 39.06% அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் தமிழ்நாடு, ஆந்திராவிற்குப் பின்னால் இந்தியாவிலேயே 11வது இடத்தில் குஜராத் இருக்கிறது.
ஆனால் வேறொரு விசயத்தில் உலகிலேயே முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கிறது குஜராத். பணத்திற்காகத் தாய்மையை விற்கும் பரிதாபத்துக்குரிய வாடகைத் தாய்களின் எண்ணிக்கையில் உலகளவில் குஜராத்துக்குத்தான் முதலிடம். கடந்த காலங்களில் ‘வெண் மைப் புரட்சி’யின் அடையாளமாக, அமுல் நிறுவனத்தின் பிறப்பிடமாக, அறியப்பட்ட ஆனந்த் நகரம் இன்று, வாடகைத்தாய் முறையின் மையமாகி விட்டது. ஆண்டுக்கு 30,000 குழந்தைகளையும் உற்பத்தி செய்து, ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்தத்துறையின், தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கு கருத்தரிப்பு மையங்கள் இந்நகரம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆனந்த் நகரம் மட்டுமன்றி, குஜராத்தின் அகமதாபாத், ஜாம்நகர், சூரத் என மற்ற நகரங்களிலும் இத்தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இன்விட்ரோ கருத்தரிப்புமுறை (IVF) என்ற அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சோதனைக்குழாய் குழந்தையை உருவாக்கியது. அதே முறையில் கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக் குழாயில் உருவாக்கப்படும் கருவை தனது கருப்பையில் சுமந்து, குழந்தையாகப் பெற்றுத்தரும் பெண்ணைத் தான் வாடகைத்தாய் என்கிறார்கள். பிறக்கும் குழந்தை தனது தாய் தந்தையின் மரபணுக்களைத்தான் கொண்டிருக்கும் என்பதும், அது பத்து மாதம் சுமந்த வாடகைத்தாயின் சாயலைக் கூடக் கொண்டிருக்காது என்பதும்தான் இந்த வாடகைத்தாய் முறை பிரபலமடைவதற்கு காரணம். இதனால்தான் வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு தம்பதியரும், பிள்ளைப்பேறுக்காகத் தேடி வரும் புனிதத் தலமாகியிருக்கிறது மோடியின் குஜராத்.
குழந்தைப் பேறு இல்லாத அமெரிக்க, ஐரோப்பியத் தம்பதிகள் தங்களது நாட்டில் இதுபோன்று குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மிக அதிகமாகச் செலவாகும். பல நாடுகளில் வாடகைத்தாய் முறையும் வாடகைத் தாய்க்குப் பணம் கொடுப்பதும் தடைசெயப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஆகும் செலவில் ஒரு சிறுபகுதியைக் கொண்டே குஜராத்தில் வாடகைத் தாய்களை அமர்த்திக் கொள்ள முடியும். இதனால் வாடகைத் தாய்களைத் தேடி வரும் வெளிநாட்டுத் தம்பதிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட பாலினத்தில் குழந்தை வேண்டும் எனக் கேட்கும் தம்பதிகளுக்காக வாடகைத் தாய்மார்கள் அத்தகைய குழந்தை உருவாகும் வரை மீண்டும் மீண்டும் கருத்தரிப்புச் சிகிச்சைக்கு உட்பட வேண்டும். குழந்தைப்பேறு காலம் முழுவதும் இந்த வாடகைத் தாய்மார்கள், குடும்பத்தைப் பிரிந்து மருத்துவமனை ஏற்பாடு செய்து தரும் கொட்டடியில் அடைந்து கிடக்க வேண்டும். குழந்தை பிறந்த பின், தாய்மையின் ஹார்மோன் மாற்றங்கள், ஏற்படுத்தும் உணர்ச்சிகளை எதிர்கொண்டு, குழந்தையுடனான பிணைப்பை அறுத்தெறிந்து, குழந்தையை ஒப்படைத்து விலகிவிட வேண்டும். இவ்வளவு துன்பங்களை எதிர்கொண்ட பிறகும் அவர்களுக்குப் பேசிய பணம் கிடைப்பதில்லை. வாடகைத்தாய் முறையில் குழந்தைபெறச் செலவாகும் மொத்த தொகையில் வெறும் 2% மட்டுமே வாடகைத்தாயாக வரும் பெண்ணிற்குக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2 முதல் 3 லட்சம் வரை தருவதாகக் கூறினாலும், குழந்தைப்பேறுக் காலத்தில் அந்தப் பெண்ணைப் பராமரிக்கும் செலவுகள் அனைத்தையும் அவளது பங்கிலிருந்தே கழித்துக்கொண்டு இறுதியில் 12,000 முதல் 15,000 வரை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். அதையும் கூட பல தவணைகளில் தருவதால் படிப்பறிவற்ற பல பெண்களுக்குத் தாங்கள் ஏமாற்றப்பட்டது கூடத் தெரிவதில்லை.
குஜராத்தின் இளம் பெண்கள், வாடகைத் தாயாக 2 முதல் 5 முறை வரை குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும், அபாயங்களும் ஏராளம். அறுவை சிகிச்சைதான் சுலபமானது, குழந்தைக்கு பாதுகாப்பானது என்பதால் எந்த வாடகைத்தாயும் இயற்கையாக பிரசவிக்க அனுமதிக்கப் படுவதில்லை. இதன் காரணமாக ஆரோக்கியமான பெண்களே இரண்டு குழந்தை பெற்றபின் நோயாளியாகி விடுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைவு, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலைமையோ ஆபத்தானது. குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, கடன்களை அடைப்பதற்காக, கணவனின் மருத்துவச் செலவிற்காக எனத் தங்களது குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே குஜராத் பெண்கள் தங்களது கருப்பையை வாடகைக்கு விட வேண்டிய அவல நிலையில் உள்ளனர். பத்தாண்டுகளில் குஜராத்தை பன்னாட்டு மூலதனத்தின் கருப்பையாக மாற்றியிருக்கும் மோடி, தனது மாநிலத்துப் பெண்களின் கருப்பையை அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் அதிசயமில்லைதான். Thanks. VINAVU.COM
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: