இந்திய அரசியல்

இந்திய அரசியல் இஸ்லாத்தை நோக்கி!


உலகிலேயே பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் என்பது தேசிய அரசியல் என்றும் மாநில அரசியல் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் விடுதலைப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய இரு தேசிய கட்சிகளே செயல்பட்டு வந்தன. முழு நாட்டுக்காக நடந்த விடுதலை வேள்வியில் வெற்றி கிடைத்ததென்னவோ பாதியாகத்தான். இந்திய சுதந்திரத்தின் போது "முஸ்லிம்களுக்கான பகுதி" என பாகிஸ்தான் பிரிக்கப்பட்டப் பின்னர், இந்திய தேசிய அளவில் முஸ்லிம் லீக் என்ற அமைப்பு, படிப்படியாகத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட காலம்வரை தேசிய அரசியலில் காங்கிரசுக்கு மாற்றாக மற்றொரு தேசிய கட்சி வலுப்பெற்று வராத காரணத்தால், மத்தியில் காங்கிரஸின் ஆட்சியே நடைபெற்று வந்தது. மாநிலங்களில் பிரதேச கட்சிகள் வளர்ச்சி பெறும்வரை மாநிலங்களிலும் காங்கிரசின் ஆட்சிதான் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் உள்ள பல குறைபாடுகளால் மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக எழுந்த சிந்தனைகள், பல பிரதேச கட்சிகளை வளர வைத்தன. 60களின் இறுதியில் மாநிலங்களில் காங்கிரசுக்கு இருந்த ஆதிக்கம் செயலிழக்கத் துவங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் பல பிரதேச கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க ஆரம்பித்தன. இருப்பினும் தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக அதே அளவுக்குச் சக்தியுடன் மற்றொரு கட்சி வளர்ச்சி பெறாத காரணத்தினால் அப்போதும் காங்கிரசின் கையே தேசிய அளவில் ஓங்கியிருந்தது.

80களின் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் அல்லாத பல கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு மாற்றாக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சி, நீண்ட காலத்துக்கு நிலைக்கவில்லை. 81ஆம் ஆண்டு ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து பாரதீய ஜனதா கட்சி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸின் ஜனசங்கம் தேசிய அளவில் மாற்று கட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

காங்கிரஸில் இருந்த கோஷ்டிச் சண்டை, பதவி வெறி, ஊழல், நிர்வாகத் திறமையின்மை, அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்குத் திட்டமிட்ட கொள்கையின்மை போன்ற காரணங்களைப் பட்டியலிட்டு திறமையான, நிலையான, வலுவான, ஊழலற்ற ஆட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தேசிய அரசியலில் களமிறங்கிய பாரதிய ஜனதா கட்சி, ஒரு கட்டத்தில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் அளவுக்கு முன்னேறியது.

அந்தோ, பரிதாபம்! இந்து மகாசபை, ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ். போன்ற பல அமைப்புகளால் உரமிடப் பட்டு வெறும் 20 ஆண்டு காலத்தில் அசுர வளர்ச்சியைப் பெற்ற பாஜக, தற்போது இலையுதிர் காலத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. உண்மையை நீண்டகாலத்திற்கு மூடி மறைக்க முடியாது என்ற வாசகத்துக்கு ஏற்ப, பாஜகவால் மூடி மறைக்கப்பட்டப் பல உண்மைகள் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களின் வாயிலிருந்தே வெளியேறிய வண்ணமிருக்கின்றன. எல்லாக் கட்சிகளுக்கும் முதல் மந்திரமான, "ஊழலற்ற ஆட்சி" என்ற கோஷம் பாஜகவைப் பொருத்தளவில், மீண்டும் ஒருமுறை அந்த இரு சொற்களையும் சொல்வதற்குக்கூட அக்கட்சி அருகதை அற்றுப் போய்விட்டது. அந்த அளவுக்குக் காங்கிரசோடு போட்டியிடும் விதத்தில் பாஜக தலைவர்களிடையே ஊழல் தலைவிரித்தாடியதோடு காங்கிரஸின் பதவி வெறியைவிடப் பன்மடங்கு, மத்தியில் நாற்காலியைப் பிடிப்பதற்காக எத்தகைய கேவலமான வேலைகளையும் பாஜக செய்யும் என்பது இப்போது நாட்டு மக்களுக்குப் புரிந்து விட்டது. "காங்கிரசுக்கு மாற்றாக" என்று சொல்லிக் கொண்டு முன்னெழுந்து வந்த பாஜக, எழுந்த வேகத்தில் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

பொய்யின் மீதும் அசத்தியத்தின் மீதும் கட்டியெழுப்பப்படும் கோட்டைகள் நீண்ட காலம் தாக்குபிடிக்காது என்பதற்கு இலக்கணமாக, மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவுக்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த படுதோல்வி, அக்கட்சி இதுவரை மறைத்து வைத்திருந்த பல உண்மைகள் திமிறிக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன் மூலம் அக்கட்சியின் செல்வாக்குச் சரிந்து, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது.

தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக முன்வைக்கப் பட்ட பாஜகவின் உருவாக்கத்துக்குப் பின்னால் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உறைந்து கிடப்பதை இன்று நாட்டு மக்கள் தெளிவாகப் புரியத்துவங்கி விட்டனர். அதுவும் அக்கட்சியின் மிக மூத்தத் தலைவரின்(ஜஸ்வந்த் சிங்) வாயாலேயே பாஜகவின் விடிவெள்ளியாகப் போற்றப்பட்ட அத்வானியின் பொய் முகத்திலிருந்து இந்திய சுதந்திர வரலாற்றின் மிக முக்கிய கட்டங்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியானதும் அக்காரணத்திற்காகவே அவரைக் கட்சியை விட்டே நீக்கியதன் மூலம் இதுநாளும் பாஜக தனக்கு, "கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்கள்" எனப் பூசி வந்த சாயம் வெளுத்துப் போனதைத் தெள்ளத் தெளிவாக நாட்டு மக்கள் புரிந்து கொண்டதோடு, இதுநாள் வரை இந்திய அரசியல் குறித்துத் தங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய வேண்டிய கட்டம் வந்து விட்டது என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: