மெரீனா கடற்கரையில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: வாகனங்களுக்கு தீவைப்பு
சென்னை, வியாழன், 17 செப்டம்பர் 2009( 13:35 IST )
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை அயோத்தியாகுப்பத்தில் வசிக்கும் மக்கள் இரவில் மெரீனா கடற்கரை மணலில் தூங்குவது வழக்கம். நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தூங்குவதற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இரவு தொழுகையை முடித்து விட்டு தங்கசாலை, மண்ணடி, வண்ணாரப்பேட்டை, அமைந்தகரை பகுதிகளில் இருந்து கடற்கரைக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது சில இளைஞர்கள் வேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளனர்.
அப்போது அயோத்தியாகுப்பம் ஊர்த் தலைவர் ஜெயபால் மீது ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்துடன் மோதியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் இந்த பகுதி மக்கள், ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள். மெதுவாக செல்ல கூடாதா? என்று சத்தம் போட்டுள்ளனர்.
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், நாங்கள் சாலையில் செல்கிறோம். நீங்கள்தான் பார்த்து வரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். அப்போது அந்த வாலிபருக்கு ஆதரவாக இன்னொரு பிரிவினர் செயல்பட்டுள்ளனர்.
அப்போது இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதில் அயோத்தியாகுப்பம் ஊருக்குள் செல்லும் முகப்பில் அமைந்துள்ள செங்கழு நீரம்மன் கோயில் மீது ஒரு பிரிவினர் கல்வீசி தாக்கினர். இதில் கோபுரகலசமும், மின் விளக்குகளும் உடைந்தது.
இதனால் ஆவேசம் அடைந்த அயோத்தியாகுப்பத்தை சேர்ந்தவர்கள் எதிர்தரப்பினரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். இதில் 2 வாலிபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலை பார்த்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் வாகனங்களை போட்டு விட்டு ஓடிவிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஒரு கும்பல் 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தது. இந்த வன்முறையால் கடற்கரை சாலை போர்க்களம் போல் காட்சி அளித்தது.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். எரிந்து கொண்டிருந்த வாகனங்களை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய கலவரம் அதிகாலை 2 மணி வரை நீடித்தது.
ஆட்கள் நடக்க முடியாதபடியும், வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலைகளில் எரிந்த இரு சக்கர வாகனங்களும், கற்களும், பாட்டில் சிதறல்களுமாக காட்சியளித்தன. எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை என்பதால் உடனடியாக அனைத்தும் அப்புறப்படுத்தி, லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து விடிவதற்குள் சாலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 50 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நிகழ்விடத்தை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் பார்வையிட்டார். மேலும் வன்முறை ஏற்படாமல் இருக்க கலங்கரை விளக்கம் முதல் அண்ணா சதுக்கம் வரை ஏராளமான காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment