காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம் – அது என்ன 370ஆவது பிரிவு?

அமர்நாத் செல்லும் யாத்ரீகர்களின் வசதிக்காக ஜம்மு-காஷ்மீர் அரசு நிலம் வழங்கியதற்கு கிளம்பிய எதிர்ப்பு, பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்து மாநில அரசையே கவிழ்த்து விட்டது. இந்துத்துவவாதிகளும் இந்துத்துவ சார்பு ‘அறிவுஜீவி’களும் பொத்தாம்பொதுவில் காஷ்மீர முஸ்லிம் அமைப்புகளை குற்றம் சாட்டி, பகை நெருப்பை மூட்டி குளிர் காய்கிறார்கள். முஸ்லிம்களுக்கான வக்ஃப் வாரியம், ஹஜ் மானியம் போன்றவற்றை அமர்நாத் விவகாரத்துடன் ஒப்பிட்டு, இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டும் பெரும் சலுகைகளையும் வசதி வாய்ப்புகளையும் அனுபவித்து வருவது போன்ற தோற்றமும் ஏற்படுத்தப் படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் படுகிறது.

அமர்நாத் யாத்ரீகர்களின் வசதிக்காக நிலம் வழங்கப் பட்டதை காஷ்மீர முஸ்லிம்கள் எதிர்த்திருக்கக் கூடாதுதான். ஆனால், வரலாற்றின் பக்கங்களை கொஞ்சம் பின்நோக்கிப் புரட்டிப் பார்த்தால், அந்த எதிர்ப்பின் பிண்ணனியில் இருக்கும் நியாயம் நமக்குப் புலப்படும்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…

கேள்வி: காஷ்மீர் விவகாரம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இந்திய யூனியனில் ஒரு மாநிலமாகிய காஷ்மீருக்கு மட்டும் என்ன தனி உரிமை? அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதானே?

காஷ்மீர்ப் பிரச்சினையையும் நீங்கள் கொஞ்சம் வரலாற்று ரீதியாய்ப் பார்க்க வேண்டும். 1846க்குப் பின்பு பிரிட்டிஷாரின் எடுபிடிகளான டோக்ரா மன்னர்கள் காஷ்மீரை ஆண்டு வந்தனர். இவர்கள் இந்துக்கள். ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் மொத்த சனத்தொகையில் 77 சதம் பேர் இஸ்லாமியர். டோக்ரா மன்னர்களின் கொடுமையான ஆட்சிக்கெதிராக 1931இல் காஷ்மீர மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக அரசியல் சீர்திருத்தத்திற்கான குழு ஒன்றை அன்றைய அரசு அமைத்தது.

இந்தப் பிண்ணனியில் 1939இல் ஷேக் அப்துல்லா தலைமையில் ‘தேசிய மாநாடு’ கட்சி தொடங்கப் பட்டது. இக்கட்சியின் சார்பாக பல்வேறு சனநாயகக் கோரிக்கைகளை உள்ளடக்கிய ‘புதிய காஷ்மீர்’ கோரிக்கை 1944இல் முன்வைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 1945இல் ‘டோக்ரா மன்னர்களே, வெளியேறுங்கள்’ போராட்டம் தொடங்கப்பட்டது. ராஜா அரிசிங்கின் அரசு கொடும் அடக்குமுறை மூலம் போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதற்கிடையில் 1947 ஆக.15இல் ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

மத அடிப்படையிலான நாட்டுப் பிரிவினையோடு இந்த ஆட்சி மாற்றம் அரங்கேறியது. ஜோத்பூர், ஜீனாகத், அய்தராபாத், காஷ்மீர் போன்ற சமஸ்தானங்களைப் பொறுத்தமட்டில் ‘மக்கள் விருப்பை அறியக் கணிப்புத் தேர்தல் ஒன்று நடத்தி அதனடிப்படையில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என இந்திய அரசு (அக்.5, 1947) அறிவித்தது.

ராஜா அரிசிங் இணைப்பு பற்றித் திட்டவட்டமாக முடிவு எதையும் அறிவிக்காத சூழலில் 1947 அக்டோபர் 26இல் வடமேற்கு எல்லைப் பகுதியிலிருந்த இனக்குழு மக்கள் பாகிஸ்தான் அரசாதரவோடு காஷ்மீர் மீது படையெடுத்தனர். சமாளிக்க முடியாத அரிசிங் இந்திய அரசின் உதவியை நாடினார். இணைப்புக்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே படைகளை அனுப்ப முடியும் என்ற நிபந்தனையோடு படைகளை அனுப்பி காஷ்மீரை இந்திய அரசு கைப்பற்றிக் கொண்டது. இணைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே அரிசிங் காஷ்மீரை விட்டே ஓடினார்.

சட்டம் ஒழுங்குப் பிரச்சினை சீரானவுடன் கணிப்புத் தேர்தல் நடத்துவதாக நேரு வாக்களித்தார். ஆனால் அந்த முடிவை நிறைவேற்றும் முயற்சியை அவர் மேற்கொள்ளவேயில்லை.

இந்த அடிப்படையில் இந்திய-பாக் போர் ஒன்று நிகழும் வாய்ப்பு வளர்ந்தது. இந்தப் பிண்ணனியில் இந்தியாவே இந்தப் பிரச்சினையை ஜன.1,1948 அன்று அய்.நா அவையின் பாதுகாப்புக் குழுவிற்கு எடுத்துச் சென்றது. ஜன.20,1948 அன்று பாதுகாப்புக் குழு காஷ்மீர் பிரச்சினையை ஆராயக் குழு ஒன்றை நியமித்து அந்த அடிப்படையில் ஆக.13,1948 அன்று காஷ்மீர் தீர்மானத்தை அய்.நா நிறைவேற்றியது. போர் ஓய்வு, இராணுவத்தைத் திரும்பப் பெறுதல், கணிப்புத் தேர்தல் நடத்துவது என்கிற மூன்று அம்சங்களை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

அய்.நா. இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும்போதே காஷ்மீருக்கான அரசியல் நிர்ணய அவை ஒன்றை இந்தியா அமைத்தது. “அரசியல் சட்ட உருவாக்கத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. மற்றபடி அந்த மக்கள் பிரிந்து போக விரும்பினால் அந்த விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். இந்த அரசியல் நிர்ணய சபை அதற்குத் தடையாக இராது” என இந்திய அரசு (நவ.21, 1949) வாக்களித்தது. 370ஆவது பிரிவு ஒன்றை உருவாக்கிக் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப் பட்டது. வெளியுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர பிற அம்சங்களில் சுயாட்சி உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட்டன.

அரசியல் நிர்ணய அவையில் 370ஆவது பிரிவு பற்றி என்.கோபாலசாமி அய்யங்கார் கூறியதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அவர் கூறினார்: “காஷ்மீரில் இன்னும் போர் நீடிக்கிறது. சில பகுதிகள் எதிரிகள் வசம் உள்ளன. அய்.நா. அவையும் இதில் தலையிட்டுள்ளது. காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசு சில உறுதிகளையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் 370ஆவது பிரிவின் மூலம் சில சிறப்புரிமைகளை காஷ்மீர மக்களுக்குத் தருவது தவிர்க்க இயலாதது.”

இதுதான் 370ஆவது பிரிவு உருவான கதை. கணிப்புத் தேர்தலை இந்திய அரசு வஞ்சகமாக முறியடித்ததுதான் தவறேயொழிய 370ஆவது பிரிவைச் சேர்த்ததை எப்படித் தவறாகச் சொல்ல முடியும்! சொல்லப் போனால் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட உரிமைகள் இந்திய யூனியனில் அடங்கியுள்ள சகல தேசிய இனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாமும் கோருவதுதான் நமது சனநாயக உணர்வுக்கு அடையாளமாக இருக்க முடியும்.

• காஷ்மீர மக்களுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டனவா?

இல்லவே இல்லை. முழுமையாக காஷ்மீர மக்கள் ஏமாற்றப் பட்டனர்.

நவ.5, 1951: அரசியல் நிர்ணய அவை கூட்டப்பட்டது
நவ.15, 1952: அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஆக.9, 1953: காஷ்மீர இணைப்பைச் சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்றாமல் பிரிவினை முயற்சியில் இறங்கினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 22 ஆண்டுக்காலம் அவர் சிறையிடப்பட்டார்.
பிப்ரவரி 1954: பலரும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு இணைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மார்ச் 27, 1957: கணிப்புத் தேர்தல் நடத்த முடியாது என நேரு அறிவித்தார்.

• இருந்தாலும் 370ஆவது பிரிவு இன்னும் நீடிக்கிறதே?

பெயருக்குத்தான் நீடிக்கிறது. அந்தப் பிரிவின் அத்தனை உரிமைகளும் இன்று பறிக்கப் பட்டுள்ளன. குறுக்கப் பட்டுள்ளன. 1954-ல் தொடங்கி இது படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. தனது கூட்டாட்சி அதிகாரத்தை மைய அரசு காஷ்மீர் மீது பரப்பத் தொடங்கியது. 1965இல் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு காஷ்மீர் முதல்வராவதற்கு ஒருவர் 25 ஆண்டுக்காலம் காஷ்மீரில் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது. 1984இல் 248ஆவது பிரிவு திருத்தப் பட்டது. இதன்படி காஷ்மீர் தொடர்பான போராட்ட எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றும் உரிமையை இந்தியப் பாராளுமன்றம் எடுத்துக் கொண்டது. ‘ஜம்மு – காஷ்மீர் கலவரப் பகுதிச் சட்டம்’ (ஜூலை 90), 1991 ஆண்டுப் ‘போராட்டத் தூண்டல் சட்டத் திருத்தம்’ ஆகியவற்றின் மூலம் கொடும் அடக்குமுறைக்கான உரிமைகளைக் காஷ்மீர மக்கள் மீது இந்திய அரசு எடுத்துக் கொண்டது. ‘பயங்கரவாதிகளை’ அடக்குதல் என்கிற பெயரில் காஷ்மீர மக்கள் ஊரடங்கு வாழ்வுக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: