குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்» தமிழ்நாடு

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.



மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

‘திற' (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

படம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அது ஏற்படுத்தும் தாக்கமோ மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் நீள்கிறது.

‘திற’ குறும்படம், ஒட்டுமொத்த தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது என்றால் மிகையில்லை.

குஜராத் கலவரத்தில், தாயைப் பறிகொடுத்து, தந்தையிடமிருந்தும் பிரிக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண் சகீனா, சங்பரிவாரக் கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் படம் பதிவு செய்கிறது. இது, மதவெறியால் தெறித்த ரத்தத்தின் ஒரு துளி என்கிறது.

திற படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார். சாக்ரடீஸ் பெரியார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ராஜசேகர் சிறப்பாகத் தொகுத்து வழங்க, தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நக்கீரன் கோபால், தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, பேரா.சுபவீ, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, திரைப்படக் கல்லூரி பேரா. வி.எம். ரவிராஜ், பட இயக்குநர் ஃபாத்திமா பீவி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர்.

நன்றியுரை ஆற்றிய குறும்பட இயக்குநர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், “பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வைப்போம். படம் பார்த்த உடனேயே ‘அருமையாக இருக்கிறது’ என்று தொலைபேசி வரும். பிறகு என்ன நடக்குமோ நடக்குமோ தெரியாது. நடுவர்கள் இப்படத்தைத் திரையிடவே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தகவல் வரும். இப்படி ஏராளமானப் புறக்கணிப்புகள், தடைகளைத் தாண்டி இந்தக் குறும்படம். தமிழக அரசின், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றிருக்கிறது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி, “55 ஆண்டுகளுக்கு முன்னால் உருது எழுத்தாளர் மண்டோ எழுதிய மூலக்கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. பெண்கள் மீதான கொடுமைகளை இப்படம் உள்ளத்தை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது என்றார்.

தலித் முரசு புனிதப் பாண்டியன், ‘பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மக்களுக்கும் இடையில் கூர்மைப்படுத்தப்படும் சாதி ஆதிக்க உணர்வை எடுத்துரைத்து, அதை அடியோடு களைய அணிதிரள வேண்டும் என்றார்.

பேராண்மை, ஈ, இயற்கை ஆகிய படங்களின் மூலம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களால் வெற்றி பெற்றுள்ள இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், படத்தை வெகுவாகப் பாராட்டினார். ‘இளம் வயதில் எனக்கு எழுத்தாளர் மண்ட்டோவைத் தெரியவில்லை. பிரின்சுக்குத் தெரிந்திருக்கிறது. சினிமா எடுப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. இதுபோன்ற குறும்படங்களை எடுப்பதுதான் சிரமம். வளரும் தலைமுறையை வாழ்த்துகிறேன் என்றார்.

இப்படத்தை எடுக்க அனுமதியளித்த திரைப்படக்கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், “எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைப் பார்வையிட வந்தவர்கள் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் வசதிகளைக் குறை சொன்னார்கள். அவர்களிடம் ‘திற’ படத்தைப் போட்டுக் காட்டினேன். வியந்து போனவர்கள், திரைப்படக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த படைப்பு இது” என்றார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுபவீ, “படம் எடுப்பது மட்டுமல்ல, மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, நடிப்பது என எதுவுமே சிரமமானதில்லை. அதை மனிதநேயத்தோடும், கொள்கைக்காகவும் செய்வதுதான் சிரமமானது. தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரத்தினர் மக்கள் தொகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்கின்றனர். கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. சூலம் வழங்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களையும் சேர்த்தே அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள். இத்தகையக் கொடியவர்களை உயிருள்ளவரை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இத்திரைப்படம் தெருத்தெருவாக பாராட்டப்பட வேண்டும்' என்றார்.



தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, “திற என்ற இத்திரைப்படம், மனதைத் திறப்பதாகவும், மௌனப் பூட்டுக்களைத் திறப்பதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகளைச் செய்தவர்கள், நாங்கள்தான் இதைச் செய்தோம் என்று பெருமைபொங்க பேட்டி கொடுத்தார்கள். தெஹல்கா இதழ், அதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. அவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனைக் கொடுத்தது?

பாபரி மஸ்ஜிதை இடிக்க ரதயாத்திரை போன அத்வானியையும், அந்த இடத்தை சமப்படுத்துங்கள் என்று இடிப்பதற்கு ஆணையிட்ட வாஜ்பாயையும், பாபரி மஸ்ஜித் இடிப்பை முன்னின்று நடத்திய குற்றவாளிகளையும் சட்டத்தால் தண்டிக்க முடிகிறதா?

மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த சூத்ரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரேவைத் தண்டிக்க முடிந்ததா? உச்சநீதிமன்றம் ராகவன் கமிட்டி என்ற கமிட்டி அமைத்து மோடியின் கொடுமைகளை விசாரித்ததே, மோடி சிறையிடப்பட்டாரா?

இல்லை. சட்டத்தால் சங்பரிவாரத்தின் சல்லிவேரைக் கூட கிள்ளிப்போட முடியவில்லை. ஆனால், செய்த குற்றம் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கூட, கூட்டு மனசாட்சியின்படி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை அளிக்கிறது நீதிமன்றம். நாங்கள்தான் செய்தோம் என்று குற்றவாளிகளே கூறினாலும், நீதிமன்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே உறங்குகின்ற நாட்டின் மனசாட்சி உலுக்கி எழுப்பப்பட வேண்டும். அதை இப்படம் திறம்படச் செய்துள்ளது'' என்றார்.

நக்கீரன் கோபால்-“இந்தப் படத்திற்குக் கைதட்ட வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு இது உள்ளத்தை பாதித்தது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? என்று பேரா. ஹாஜாகனி கேட்டார். அந்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. ஆனாலும் இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கு இறங்குகாலம் தொடங்கிவிட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விழுந்த அடி, அந்தக் கூட்டத்தையே ஆட்டிவிட்டது (கூட்டத்தில் சிரிப்பு). இப்போதுவரை அவரது சீடர்களின் லீலைகளை நாங்கள் சீரியலாக எடுத்து வருகிறோம். இந்தக் கொடியவர்களின் முகமூடியைக் கிழிப்பதில் தெஹல்கா பத்திரிகை முக்கியப் பங்காற்றியது. எங்களுக்கு அதில் பெருமை. ‘திற' படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குடும்பமே படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றதால் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

தலைமையுரை ஆற்றிய கி.வீரமணி, “தீவிரவாதம் என்றவுடனேயே அதை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுகிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டக் கொடிய பயங்கரவாதிகள் என்பதைத்தான் நாம் குறும்படத்தில் பார்த்தோம். எங்கள் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியாரும் அவரது குழுவினரும் இதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களை அந்நியர்கள் என்று செல்பவர்கள்தான் எங்கோ இருந்து வந்த வந்தேறிகள் என்பதுதான் உண்மை. இங்கே உண்மை தலைகீழாக ஆகியுள்ளது.

மாலேகானில் குண்டுவைத்தது இந்துத்துவ தீவிரவாதிகள்தான். அதை அம்பலப்படுத்திய ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியைக் கொன்றததும் அவர்கள்தான்.

‘கர்கரேவைக் கொன்றது யார்? என்ற புத்தகம் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முஹ்ஷி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

ஊடகத்துறையிலும், காவல்துறையிலும், ஐ.பி. எனப்படும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது. கலை ஊடகங்களைக் கைப்பற்றி மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் லட்சியத்தை அடையலாம் என சங்பரிவாரக் கும்பல் சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியும் வருகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் நாம் இறங்க வேண்டும்.

ஒரு கலைப்படைப்பு மக்கள் மனங்களில் எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அதை மதிப்பிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். - என்றார் கி.வீரமணி.

மதவெறிக்கு எதிரான உணர்வையும், மனிதநேயத்தையும் உருவாக்கும் இந்தக் குறும்படக் குழுவினரை வாழ்த்துகிறேன்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: