லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு மசூதிகள் மீது இன்று தீவிரவாதிகள் பயங்கர தாக்கதல் நடத்தினர். இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பஞ்சாப்' என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
லாகூரில் உள்ள 'அகமதி' பிரிவு முஸ்லீம்களி்ன் மசூதிகளில் இந்தத் தாக்குதல் நடந்தது.
முதல் தாக்குதல் மாடல் டவுன் என்ற இடத்தில் உள்ள மசூதி மீது நடந்தது. வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் மசூதியில் குழுமியிருந்த நிலையில், தொழுகை முடிந்த அடுத்த சில வினாடிகளில், திடீரென கிரனைட்களை வீசி தாக்குதல் நடந்தது.
இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 10 பேர் பலியாயினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இரண்டாவது தாக்குதல் காரி சாகு என்ற இடத்தில் உள்ள மசூதி மீது நடந்தது. அங்கும் கிரனைட்கள் மற்றும் துப்பாக்கிகளால் தாக்கல் நடத்தப்பட்டது. இங்கு 20 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை நடத்திவிட்டு பலரை பிணைக் கைதிகளாகவும் தீவிரவாதிகள் பிடித்து வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
துப்பாக்கித் தாக்குதலை நடத்தியபடி தீவிரவாதிகளிடமிருந்து சுமார் 1,000 பேரை போலீசார் விடுவித்தனர்.
போலீசாருக்கு உதவியாக ராணுவ கமாண்டோக்களும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மாடல் டவுன் மசூதியில் இரு தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தற்கொலை ஜாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
காரி சாகு பகுதி மசூதியில் 7 தீவிரவாதிகள் வரை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment