15 ஆயிரம் பேரின் வாழ்க்கையை சிதைத்த நச்சு வாயு...

போபால் /​ புது தில்லி,​​ ஜூன் 7:​ ​ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயுக் கசிவு ஏற்பட்டு 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.​ இந்த சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.​ புகையின் தாக்கத்தை விட,​​ நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக அங்கு கூடியிருந்த பொதுமக்கள் குமுறினர்.​ பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை சிதைத்த நச்சு வாயுவின் வரலாறு:​​

1984,​ டிசம்பர் 2 நள்ளிரவு,​​ டிச.3 அதிகாலை:​​

யூனியன் கார்பைடு இந்தியா ஆலையிலிருந்து நச்சுவாயு மீதைல் ஐசோசயனைடு வெளியேறல்.​ 15 ஆயிரம் பேர் உயிரிழப்பு;​ 5 லட்சம் பேர் பாதிப்பு.

டிசம்பர் 4:​ நிறுவனத் தலைவர் வாரென் ஆண்டர்சன் உள்ளிட்ட 9 பேர் கைது.​ ஆனால் 2,000 டாலர் ஜாமீன் தொகை கட்டி,​​ மீண்டும் இந்தியா வருவதாகக் கூறி அமெரிக்கா சென்றார் வாரென் ஆண்டர்சன்,​​ ஆனால் அவர் வரவேயில்லை.​ 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு நிறுவனம் சேர்ப்பு.

1984-ல் போபாலில் விஷவாயுக் கசிவால் பார்வை இழந்து மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்படும் சிறுவர்கள்.​ ​(பைல் படம்).

1985,​ பிப்ரவரி:​​ அமெரிக்க நீதிமன்றத்தில் 330 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு.

1986: அமெரிக்க மாவட்ட நீதிமன்றம்,​​ யூனியன் கார்பைடு நிறுவனம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இந்தியாவுக்கு மாற்றல்.

1987,​ டிசம்பர்:​​ வாரென் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு.​ பெருமளவு மக்கள் படுகொலைக்குக் காரணமானதற்காக ஆண்டர்சனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

1989,​ பிப்ரவரி:​​ இந்திய அரசுடன் யூனியன்

கார்பைடு நிறுவனம் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச உடன்படிக்கை செய்தது.​ இதன்படி 43 கோடி டாலர் இழப்பீட்டை யூனியன் கார்பைடு அளித்தது.

1989,​ பிப்ரவரி-மார்ச்:​​ மிகக் குறைவான இழப்பீட்டைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.​ உயர் நீதிமன்றம்,​​ உச்ச நீதிமன்றத்தில் பல ரிட் மனுக்கள் தாக்கல்.

1992:​ இழப்பீட்டுத் தொகையான 43 கோடி டாலரில் பகுதியளவு போபால் மக்களுக்கு வழங்கப்பட்டது.

1992,​ பிப்ரவரி:​​ நீதிமன்ற நோட்டீûஸ புறக்கணித்ததாக வாரென் ஆண்டர்சன் மீது குற்றச்சாட்டு.

1994,​ நவம்பர்:​​ வாயுக் கசிவில் உயிர்பிழைத்தவர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த போதிலும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்குகளை கோல்கத்தாவைச் சேர்ந்த மெக்லாய்ட் ரஸ்ஸல் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு விற்க அனுமதி.

1996,​ செப்டம்பர்:​​ இந்திய அதிகாரிகளுக்கெதிரான வழக்கின் தீவிரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்தது.​ ​

1999,​ ஆகஸ்ட்:​​ யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தோடு இணைக்கப்பட்டதாக அறிவிப்பு.

1999,​ நவம்பர்:​​ அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தொண்டு நிறுவனம் கிரீன் பீஸ் அமைப்பினர் இப்பகுதியில் நிலம் மற்றும் தண்ணீரை சோதித்ததில் பல்வேறு நச்சு ரசாயனப் பொருள் மற்றும் பாதரசத்தின் அளவு வழக்கத்தைவிட 60 லட்சம் மடங்கு அதிகம் இருப்பதாக சோதனையில் கண்டறிந்தனர்.

1999,​ நவம்பர்:​​ விஷவாயு தாக்குதலில் உயிர் பிழைத்தோர்,யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு எதிராகவும்,​​ அதன் தலைவர் வாரென் ஆண்டர்சனுக்கு எதிராகவும் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் குற்ற வழக்குப் பதிவு.

2001,​ பிப்ரவரி:​​ இந்தியாவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் நேர்ந்த வாயுக் கசிவுக்கு பொறுப்பேற்க அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகம் மறுப்பு.

2002,​ ஜனவரி:​​ சிருஷ்டி என்ற அமைப்பு நடத்திய சோதனையில் இப்பகுதியில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் பாதரசம் மற்றும் காரீய அளவு அதிகமாக இருப்பதை சோதனை மூலம் கண்டறிந்தது.

2002,​ ஜூன்:​​ வாரென் ஆண்டர்சனுக்கு எதிரான வழக்கை மத்திய அரசு கைவிடப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2002,​ ஆகஸ்ட்:​​ வாரென் ஆண்டர்சனுக்கு இந்திய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.​ ​ ​ இதனிடையே வாரென் ஆண்டர்சனைக் காணவில்லை என அமெரிக்கா தெரிவித்த நிலையில் அவர் நியூயார்க்கில் இருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

2002,​ அக்டோபர்:​​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை சுத்தப்படுத்த கடும் எதிர்ப்பு.​ அதில் மேலும் பல ஆயிரம் டன் நச்சுக் கழிவுகள் இருப்பதாக புகார்.

2003,​ மே:​​ வாரென் ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவிடம் இந்திய அரசு கோரிக்கை.

2004,​ மார்ச்:​​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையை இந்திய அரசு அனுமதித்தால் சுத்தப்படுத்தித் தரலாம் என்று டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.​ ​

2004,​ ஜூன்:​​ இந்திய அரசிடம் வாரென் ஆண்டர்சனை ஒப்படைக்க அமெரிக்கா மறுப்பு.​ இருதரப்பு ஒப்பந்தத்தில்,​​ குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து ஒப்பந்தத்தில் சில பிரிவுகள் வாரென் ஆண்டர்சனை ஒப்படைப்தற்கான வரையறைக்குள் வரவில்லை என தெரிவித்தது.

2004,​ ஜூலை 19:​ ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 47 கோடி டாலர் இழப்பீட்டைத் தவிர ரூ.​ 15 கோடி கூடுதலாக தரவேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.​ 1992-ம் ஆண்டிலிருந்து யூனியன் கார்பைடு நிறுவனம் வழங்கிய 47 கோடி டாலரை வைத்தருந்ததற்கு வட்டியாக இத்தொகையை வழங்க உத்தரவு.

2004,​ அக்டோபர் 25:​ இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டம்.

2004,​ அக்டோபர் 26:​ யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த 47 கோடி டாலர் இழப்பீட்டுத் தொகையை நவம்பர் 15-க்குள் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

2010,​ ஜூன் 7:​ வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பு.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: