போபால் விஷவாயு வழக்கில் நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது: சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்து

புது தில்லி,​​ ஜூன் 7:​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழக்கில்,​​ நீதி குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ​ செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்த அவர் இது குறித்து மேலும் கூறியது:​ தாமதமாகக் கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்றே நான் கூறுகிறேன்.


இது போன்ற வழக்குகளில் விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணித்து,​​ விசாரணையை விரைவுபடுத்தவும் வேண்டும்.​ ​ இதுபோன்ற மிக நீண்ட கால வழக்கு விசாரணையும்,​​ தீர்ப்பும் இனிமேல் எப்போதும் வழங்கப்படக் கூடாது.

விரைவு நீதிமன்றங்களின் தேவை இப்போதுதான் உணரப்படுகிறது.​ போபால் விஷவாயு வழக்கில் குற்றவாளிகளை விரைவிலேயே நீதியின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தந்திருக்க வேண்டும் என்றார் மொய்லி.

இந்த வழக்கு ஏன் இவ்வளவு தாமதமானது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,​​ ""நடவடிக்கை எடுப்போம்.​ சரியான முறையில் விசாரணை நடத்தப்படாவிடில் எவ்வாறு நீதி வழங்க முடியும்'' என்றார் மொய்லி.

வலி தரும் தீர்ப்பு -​ பாஜக கருத்து:​​ ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளதாக பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்,​​ தில்லியில் திங்கள்கிழமை மேலும் கூறியது:

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் 25 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகளே சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.​ இந்தத் தீர்ப்புக்கு எதிராக சிபிஐ உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.போபால் விஷவாயு சம்பவத்திலும்,​​ அதற்குக் கிடைத்துள்ள நீதியிலும் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.​ அணு விபத்து இழப்பீடு மசோதாவை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார் அவர்.

"தாமதமாகக் கிடைத்த,​​ விரக்தியளிக்கும் தீர்ப்பு' ​ போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் மிகமிகக் காலதாமதமாகக் கிடைத்த விரக்தியளிக்கும் தீர்ப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

""வழக்கை விசாரித்த சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது.​ சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய இந்தியர்கள்தான் தண்டனை பெற்றுள்ளனர்.​ முக்கியக் குற்றவாளியான அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் தண்டனையில் இருந்து தப்பிவிட்டார்.​ விசாரணையின் போதே வழக்கின் தீவிரம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிட்டது.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகளே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு,​​ அவர்கள் ஜாமீனில் விடுதலையாகவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது'' என்று இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா கூறியுள்ளார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: