நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் நடந்த சோதனையில் 20 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பள்ளி மாணவ, மாணவிகளின் கவனம் சிதறாமல் இருக்கும் வகையில் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வர தடை உள்ளது. இதை மீறி, செல்போன்களை கொண்டு வரும் மாணவ, மாணவிகளை கண்டுபிடித்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகள் மத்தியில் செல்போன் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் வந்துள்ளது. குறிப்பாக இடைவேளை, சாப்பாடு வேளையில் பள்ளியில் உள்ள பாத்ரூம் அருகில் நின்று கொண்டு மாணவிகள் பலர் செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியைகள் சிலர் பள்ளி இடைவேளை நேரத்தில் மாணவிகள் சிலரை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 9, 10, 12ம் வகுப்பு மாணவிகள் சிலர் ரகசியமாக செல்போன்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சில மாணவிகளை அழைத்து ஆசிரியைகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மொத்தம் 20 மாணவிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் கொண்டு வரக்கூடாது என எச்சரிக்கை இருந்தும் அதையும் மீறி செல்போன் கொண்டு வருவது ஏன்? என்று சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சில மாணவி கள் '' வீட்டில் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறோம் என்று கூறினர். இந்த ஒருமுறை மன்னித்து விடுங்கள். இனி கொண்டு வர மாட்டோம்” என்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோரையும் பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து எச்சரித்தனர்.
பள்ளி மாணவிகளை தொடர்பு கொள்ள பள்ளியில் போன் வசதி உள்ளது. பள்ளி வேளை நாட்களில் எதுவும் அவசரமாக இருந்தால் பள்ளிக்கே தொடர்பு கொள்ளலாம். செல்போனால் மாணவிகளின் படிப்பு சிதறி விடக்கூடாது. பெற்றோரும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். முதல் தடவை என்பதால் எச்சரிக்கையுடன் மாணவிகள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment