பெட்ரோல், டீசல் விலை உயர்வு?: ஜூன் 25-ல் தெரியும்


புது தில்லி, ஜூன் 22: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து ஜூன் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தேவ்ரா கூறினார்.


சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள வகை செய்ய வேண்டும். இதற்கு அதன் மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று நீதிபதி கிரீட் பாரிக் குழு பரிந்துரைத்தது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை.


கடந்த முறை இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

தற்போது மீண்டும் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூடி முடிவு செய்ய உள்ளது.


தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலர் என்ற விலையில் பெட்ரோல், டீசல் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 77 டாலராக உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.


இதைத் தவிர்க்க பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை விலைக்கேற்ப நிர்ணயம் செய்வது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே பெட்ரோல் , டீசல் மீதான விற்பனை வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் தேவ்ரா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


மாநிலங்களில் மிக அதிகபட்சமாக ஆந்திரத்தில் 33 சதவீதமும் தமிழகத்தில் 30 சதவீதமும் விற்பனை வரி விதிக்கப்படுகிறது.


மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கும் பட்சத்தில் மத்திய அரசு உயர்த்தும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக அமைச்சர் அழகிரி ஆகியோரிடம் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: