'அவ்லியாக்களைப் போற்றுகின்றோம்' என்ற பெயரில், இன்று மாலை நம்மூர் முக்கியத் தெருக்களில் வலம் வந்த 'கொடியூர்வலம்' - இதைக் 'கொடிய ஊர்வலம்' என்றுகூடச் சொல்லலாம் - கீழ-மேலத்தெருவாசிகளின் வருடாந்திரக் கூத்தாட்டம் நடந்து முடிந்துவிட்டது. கீழ-மேலத்தெரு என்று ஒட்டுமொத்தத் தெருவாசிகளையும் நான் குறிப்பிடவில்லை. மாறாக, முக்கியஸ்தர்கள் என்று இருக்கக்கூடிய சிலரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, அந்த முக்கியஸ்தர்கள் குருமார்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலரைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, இத்தகைய அநாச்சார நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர், அறிவிலிகள் சிலர். கேட்டால், 'அவ்லியாக்களைப் போற்றுகின்றோம்' என்று கூறுகின்றனர். பாவம், அந்த அவ்லியாக்கள்!
இந்தக் கூத்தாட்டத்திற்கு எத்தனை முஸ்தீபுகள் தெரியுமா? நடுத்தெருவில் இப்போது ரோடு போடும் வேலைகள் 'துரிதமாக' நடந்துவருகின்றன. அதற்காகக் கருங்கற்கள் லாரிகளில் வந்து இறங்கின. அவை இங்குமங்கும் சிதறிக் கிடந்தன. நேற்றைக்கு முந்திய நாளன்று, அவசர அவசரமாகச் சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அச்செங்கற்கள் தெருவோரமாக ஒழுங்குபடுத்திக் குவித்து வைக்கப்பட்டன. இந்த முஸ்தீபைக் கண்ட ஒருவர், "நாளைக்கு வரவிருக்கும் கொடியூர்வலம் தங்கு தடையின்றிச் செல்ல, பெரியவர் இட்ட கட்டளைபோல் தெரிகிறது" என்று சொல்லிவிட்டு நடந்தார்.
நடுத்தெருவுக்குள் நுழைந்துவிட்டால், இந்தக் கொடிய ஊர்வலக்காரர்களுக்கு எங்கிருந்துதான் ஒரு விதமான வெறி வந்துவிடுகின்றதோ தெரியாது; அந்த அளவுக்கு, அக்கூட்டத்தினரின் ஆரவாரமும் சீட்டியடித்தலும் மேளதாளங்களின் காதைப் பிளக்கும் ஓசைகளும் வரம்பைக் கடந்துவிடுகின்றன. வீடுகளில் நோய்வாய்ப்பட்ட முதியவர்கள், புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தைகள் ஆகியோருக்கு இடைஞ்சல் தரும் விதத்தில் அவை தொந்தரவளித்ததை நான் உணர்ந்தேன்.
இந்தக் கொடிய ஊர்வலம் சென்று மறைந்த பின்னர் 'மங்ரிபு' தொழச் சென்ற எனக்கு, இதற்குப் பச்சைக்கொடி காட்டி வரும் முண்டாசுக்காரரிடம் இதுபற்றிப் பேசிவிடலாம் என்று காத்திருந்தபோது, அவரோ, இன்று பார்த்து நீண்ட தொழுகையில் நிலைத்துவிட்டார். பள்ளியைவிட்டு வெளியில் வந்தபோது, நற்சிந்தனை கொண்ட மவ்லவி ஒருவர் என்னிடம் அரபியில் கேட்டார்: "இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர் யார் தெரியுமா? அவர்தான்" என்று, நான் யாரை எதிர்பார்த்துக் காத்திருந்தேனோ, அவர் பெயரைச் சொன்னார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! 'அவர்' ஒரு ஜுமுஆவில் கூறியதாக இன்னொன்றும் சொன்னார்: "செய்யுங்கள்! நன்றாகச் செய்யுங்கள்! முறைப்படிச் செய்யுங்கள்!" என்றாராம், 'முறைப்படி' என்பதன் வரைவிலக்கணத்தைச் சொல்லாமல்.
வேலியே பயிரை மேய்கிறது என்று சொல்வதா? அல்லது வீணர்கள் ஆளுகை செலுத்துகின்றார்கள் எனச் சொல்வதா? "ஜாஅல் ஹக்கு, வ ஜஹக்கல் பாத்திலு. இன்னல் பாத்தில கான ஜஹூகா" என்ற மறைவசனம் 'ஓது' மொழி மட்டும்தானா? சிந்திக்க மாட்டார்களா இந்தச் சிந்தையை இழந்தவர்கள்?!
THANKS ADIRAI EXPRESS
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment