கட்டப்பஞ்சாயத்துக் கொடூரங்கள்!

'கட்டப்பஞ்சாயத்து செய்வோரைச் சட்டம் இரும்புக் கரம்கொண்டு அடக்கும்' என்று அவ்வப்போது அரசாங்கம் குரல் கொடுக்கும். ஆனால், அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கும்?

கட்டப்பஞ்சாயத்துகள்பற்றி விரிவான ஆய்வு நடத்தி ஆதாரங்களைத் திரட்டி இருக்கும் மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிரைச் சந்தித்தோம். அவர் அடுக்கிய விவரங்கள் எல்லாம், இதுவரை வெளியானதைவிடவும் கூடுதல் பகீர்தான்!

'மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 167 கிராமங்களில் ஆய்வு செய்தோம். அதில், 94 கிராமங்களில் சாதி வித்தி யாசமின்றி ஒரே பஞ்சாயத்து முறையும், மற்ற கிராமங்களில், சாதிக்கு ஒரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அடாவடித் தீர்ப்புகள் சொல்லப்படும் இந்தப் பஞ்சாயத் துகளில், பெண்களுக்காகப் பேசுவதற்கோ, கருத்து சொல்வதற்கோ உரிமை கிடையாது. இவர்கள் வழங்கும் தண்டனைகளும் வேடிக்கை, வேதனை!

பாலியல் வன்புணர்ச்சிக்கு எதிராக 88 கிராமங்களில் பஞ்சாயத்து கூடித்தான் தீர்ப்பு சொல் கிறார்கள். இதில் 12 கிராமங்களில்பெண்ணைக் கெடுத்தவனை ஊர்க் கூட்டத்தில் காலில் விழச் சொல் கிறார்கள். 50 கிராமங்களில் வெறுமனே அபராதம் மட்டும்தான். பலாத்காரம் செய்யப்பட்டவர் திருமணமாகாத இளம்பெண் என்றால், கெடுத்தவனே அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காட்டுமிரண்டித்தனமான தீர்ப்புகள், 35 கிராமங்களில் வழங்கப்படுகின்றன. இந்த தீர்ப்பு உயர் சாதிக்காரனுக்கு மட்டும்தான். இதுவே தலித் இளைஞன் ஒருவன் மேல்சாதிப் பெண்ணைக் கெடுத்துவிட்டால், கடுமையான தண்டனையும் போலீஸ் நடவடிக்கையும் நிச்சயம் உண்டு!

விவாகரத்துப் பிரச்னைகள் இந்தக் கட்டப்பஞ்சாயத்தில் நொடியில் தீர்க்கப்படுகின்றன. வேடசந்தூர்ப் பகுதியில் சாதி இந்துப் பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்தார். இதற்காக ஒரு மாதம் கழித்து, அவர்களைப் பிடித்து கிடா வெட்டி, அதன் ரத்தத்தை இருவரின் தலையிலும் தேய்த்து, இருவரையும் பிரித்துவிட்டார்கள். தற்போது, அந்தப் பெண்ணுக்கு வேறு திருமணம் செய்துவிட்டனர். இப்படி, சடங்குத்தனமான தண்டனைகள் இன்னும் உண்டு... ஊர்க் கூட்டத்தில் வைத்து உலக்கையைத் தாண்டினாலோ, இரு வீட்டுக் கூரையையும் எடுத்து வந்து முறித்துப் போட்டாலோ போதும், அவர் கள் விவா கரத்து ஆனதாக அர்த்தமாம்!

இவைபோன்ற சாதிப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளால் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தப் பஞ்சாயத்து களை எதிர்த்து, போலீஸுக்குப் போகிற வர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதாவது, 167 கிராமங்களில் இதுவரை இவர்களுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை வெறும் 18-தான். அதிலும் 10 புகார்களே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஆறு வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை நடந் துள்ளது!'' என்றார்.


''இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?''


'ஒவ்வொரு கிராமத்திலும் கட்டப்பஞ்சாயத்து முறை உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதனை ஒழிப்பதற்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு தாலுக்காவிலும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழுவை அரசு ஏற்படுத்த வேண்டும். கட்டப்பஞ்சாயத்துப் புகார்களுக்கான நடவடிக் கைக்காகவே மாவட்டத்துக்கு ஒரு சிறப்புக் காவல் நிலையம் தொடங்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பில் ஈடுபடுகிற கட்டப்பஞ்சாயத்துக் குழுக்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை தங்களது சொந்தக் கிராமத்துக்கு வர முடியாத அளவுக்குக் கடுமையான உத்தரவுகளை வெளியிட வேண்டும்!'' என்றார் கதிர்.

கற்பக விநாயகம் போன்ற எத்தனை நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டாலும், கட்டப்பஞ்சாயத்துகளின் வீரியம், வீறிடவைத்துக்கொண்டேதான் இருக்குமா?

நன்றி: ஜூவி
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: