பெட்ரோல் விலை உயர்வு: கேரளாவில் இன்று பந்த்-மாநிலம் ஸ்தம்பி்தது!
திருவனந்தபுரம் & டெல்லி: பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் இடதுசாரிகளும் பாஜகவும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்துகின்றன.
இதனால் மாநிலமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்புக்கு காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள், ஆட்டோ, கார்கள், லாரிகள் என எந்த வாகனமும் ஓடவில்லை.
இதனால் சாலைகள் வெறிச்சோடியுள்ளன.
கேரளாவில் இன்று நடைபெறுவதாக இருந்த அரசு தேர்வாணைய தேர்வுகள், பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.
கோழிக்கோடு, எர்ணாகுளம் பகுதிகளில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற பேருந்துகள் மாநில எல்லையுடன் திரும்பி வந்துவிட்டன. நாகர்கோவிலில் இருந்து சென்ற தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.
அதேபோல கேரளாவில் இருந்து எந்த பேருந்தும் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்துக்கும் வரவில்லை. தமிழகத்தில் இருந்து சென்ற லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
அதே போல மேற்கு வங்காளத்தில் லாரி, ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் இன்று காலை அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் குதிக்கும் எதிர்க் கட்சிகள்:
இதற்கிடையே பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இன்றும், நாளையும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. நேற்றே அக்கட்சியினர் நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறுகையில்,
விலைவாசியை குறைப்பதாக வாக்குறுதி அளித்து, காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மூன்றாவது முறையாக பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி, மக்களுக்கு கடுமையான அடி கொடுத்துள்ளது.
உணவு பண வீக்கம் ஏற்கனவே 17 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், வரிகளை குறைக்காமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது, மக்களின் சுமையை அதிகரிக்கவே செய்யும். மண்எண்ணை விலை உயர்வு, ஏழைகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெரும்பாலான மண்எண்ணை, டீசலிலும், பெட்ரோலிலும் கலப்படம் செய்யவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகேட்டை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே விலைவாசி உயர்வுக்கு எதிராக, 10 கோடி பேரின் கையெழுத்துகளை பா.ஜ.க திரட்டி வைத்துள்ளது.
வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது, இந்த கையெழுத்துகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலிடம் அளிப்போம்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜூலை 1ம் தேதி இடதுசாரிகள் அறிவிப்பு:
இந்த நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வருகிற ஜூலை 1ம் தேதி நடைபெறும் தேசிய மாநாட்டின்போது தங்களது போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என இடதுசாரிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசிலஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்பட்டுவரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கொடூரமான அடியாகும். பொதுவான பணவீக்கம் இரட்டை இலக்கமாகவும், உணவு பொருட்களின் விலையேற்ற விகிதம் 17 சதவீதமாகவும் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, இந்த விலை உயர்வு மூலம் தனது ஈவு இரக்கமற்ற, மக்கள் விரோத தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. நுகர்வோருக்கான விலையேற்ற விகிதம், உலகிலேயே இந்தியாவில்தான் மிகவும் அதிகமாக உள்ளது என்ற பெருமையும் அரசுக்கு கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் முடிவு, நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த விலை உயர்வை நியாப்படுத்துவதற்கு, பொய்யான வாதத்தையும் இந்த அரசு முன் வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டின் போது தான் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த கால கட்டத்தில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வு கணிசமான அளவில் உயரவில்லை.
பெட்ரோலிய பொருட்களுக்கான வரி விதிப்பு முறை அவற்றின் விலையை பெரிய அளவில் உயர்த்துவதற்கு காரணமாகி விடுகிறது. எனவே பெட்ரோலிய பொருட்களின் வரி விதிப்பு முறையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது வருந்தத்தக்கது.
பொதுத்துறை எண்ணை நிறுவனங்களை இழப்பில் இருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசின் விலைக்கட்டுப்பாடு மூலம் தனியார் நிறுவனங்கள்தான் உண்மையில் லாபம் அடையப்போகிறது.
சந்தை நிலவரத்துக்கேற்ற விலை நிர்ணயம் என்ற புதிய முடிவின் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயரப்போகிறது. பெட்ரோல், டீசல், மண்எண்ணை விலை உயர்வினால் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். சமையல் கியாஸ் விலை உயர்வு நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாகும் என்று தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment