கடையநல்லூர் மசூத் முதல் குவாண்டனாமோ யாஸர் அல் ஸஹ்ரானி வரை சித்திரவதைகளின் கொடூரங்கள்.
விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம். ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.
ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும், தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகவும் கிளம்பியவர்கள் மனித குலத்திற்கு எதிரியாக திகழ்ந்துவரும் அவல நிலையும் தொடர்கிறது.
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பது சில சமூகவியலாளர்களின் கருத்து. ஆனால் தனது இனத்தைச் சார்ந்தவர்களையே காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தி அல்லலுக்கு ஆளாக்கும் விநோதம் மனிதர்களிடையே மட்டுமே நாம் காண இயலும்.
நாகரீகமும், விஞ்ஞானமும் வளர வளர மனிதர்களை வதைச்செய்யும் உத்திகளும் நவீனமடைந்து வரும் அவலநிலையும் தொடர்கிறது.
சித்திரவதைகளின் கொடூர முகம் அடிக்கடி வெளிப்பட்டாலும் கூட பெரும்பான்மையான மனித சமூகம் இதனை மெளனமாக அங்கீகரித்து வருவதுதான் மிக துரதிர்ஷ்டவசமான நிலையாகும்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ஆம் நாள் உலகெங்கிலும் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளானோர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் International Day in Support of Torture Victims அதாவது சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இதன் மூலம் உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 200க்கும் மேற்பட்ட சிகிச்சை மையங்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டோருக்காக செயல்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதற்கெதிராக போராட்டங்களையும், கருத்தரங்குகளையும் நடத்தி வந்தாலும் கூட சித்திரவதையின் கொடூரங்கள் குறைந்தபாடில்லை.
நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசுகள் கூட இத்தகைய மனித இனத்திற்கெதிரான கொடூரச் செயல்களை மேற்கொண்டு வருவது வெட்ககேடானதாகும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழும் இந்தியாவில் கூட மனிதர்களை சித்தரவதைக்கு ஆளாக்கும் ரகசிய சித்திரவதைக் கூடங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுவதாக கடந்த ஆண்டு ‘தி வீக்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.குவாண்டனாமோ, அபுகரீப், பக்ராம் ஆகிய சித்திரவதைக் கூடங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முஸ்லிம் விரோதத்தையும், மனித இனத்திற்கெதிரான கொடூரங்களை யெல்லாம் பறைசாற்றுபவைகளாகும்.
சி.ஐ.ஏவின் தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதைச் செய்தல் போன்ற கொடூர உத்திகள் உலக முழுவதும் பிரபலமானவையாகும்.
சித்திரவதை என்றால் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைக்கெதிரான தீர்மானத்தில் சித்திரவதைக் குறித்து கீழ்க்கண்டவாறு வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது:
”உடலால், உள்ளத்தால் நோவினையும், வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்பதாகும்.
உலக வரலாற்றின் இருண்ட காலக்கட்டங்களிலும், மத்தியகால அடிமை முறையின் கீழும் சில மதங்களின் ஆதிக்கக் காலக்கட்டத்திலும் சித்திரவதைகள் நிகழ்ந்துள்ளதாக வரலாறு பதிவுச் செய்கிறது.
ரோமர்களின் சித்திரவதையின் கொடூரமுகம் அவர்களின் வரலாற்றை பயில்வோரை பீதிவயப்படுத்துவதாகும். அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆக்கிரமித்த பொழுது அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களை கொடூரமாக சித்திரவதைச் செய்து படுகொலைச் செய்த வரலாறு அமெரிக்காவின் இரத்தம் தொய்ந்த முகத்தை நம் முன்னால் கொண்டுவருகிறது.
சித்திரவதைகள் சாதாரண குடும்ப உறவுகளில் துவங்கி அரசாங்கம் வரை தொடரும் அவலத்தை நாம் கண்டுவருகிறோம்.
நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல்,ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை காழ்ப்புணர்வின் காரணமாகவும், மதவெறியின் காரணமாகவும் துன்புறுத்தி இன்னலுக்குள்ளாக்குவது எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக் கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமானதாகும்.
ஒரு குற்றம் தொடர்பாக கைதுச் செய்யப்படும் நபரிடம் தகவல்களை பெறுவதற்கு மாற்றுவழிகள் உள்ள பொழுதும் கூட மனிதர்களை உள, உடல்ரீதியாக சித்திரவதைக்கு உள்ளாக்கும் முறைகளை கையாள்வது மனிதர்களின் கொடூர மனோநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சாட்சி ஒருவரை சித்திரவதைக்குள்ளாக்கி அவர் உண்மையை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக அவரது உள்ளத்தையும், உடலையை அழித்துவிட சில அரசு அதிகாரவர்க்கம் முயலும் அநாகரீகமும் தொடரத்தான் செய்கிறது.
அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் இவர்களுக்கெதிராக சித்திரவதைகளை மேற்கொண்டு அவர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனப்படுத்தப்படுத்த அரசு, அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஐந்து பங்கு நாடுகளில் அரசு ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்று வருகின்றன என்கிறது.
உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சித்திரவதையானது இராணுவம், போலீஸ், உளவுத்துறை, அதிகாரவர்க்கம் மற்றும் முதலாளித்துவவாதிகளின் அடியாட்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நமது நாட்டின் உச்சநீதிமன்றம் உண்மை வெளிக்கொணரும் சோதனை என்றபெயரில் நடத்தப்படும் நார்கோடிக் அனாலிசிஸ், ப்ரெயின் மேப்பிங் முறைகளை தடைச்செய்துள்ளது பாராட்டிற்குரியது.
சித்திரவதை என்பது பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவை:
1.தாறுமாறான தாக்குதல்
2.திட்டமிட்ட தாக்குதல்
3.மின்சாரச் சித்திரவதை
4.மூச்சுத் திணறவைத்தல்
5.எரிகாயங்களை ஏற்படுத்துதல்
6.கட்டித் தொங்கவிடுதல்
7.உடற்பாகங்களை பிடுங்குதல்
8.பாலியல் ரீதியான சித்திரவதைகள்
9.உளவியல் ரீதியான சித்திரவதைகள்
10.அதீதமான பயமுறுத்தல்கள்
11.மத சின்னங்களையும், கலாச்சாரங்களையும் அவமானப்படுத்துதல்
என ஏராளமான முறைகள் கையாளப்பட்டு வருகின்றன.
Frederic Forsythe என்பவர் 'Fist of God' என்ற நூலில் பல்வேறு வகையான சித்திரவதை முறைகளை விவரிக்கிறார்.
இவ்வாறு சித்திரவதைகளை அனுபவிப்போர் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை வெளிக்கொணர்ந்தால் தங்களது தூய பிம்பம் (image) பாதிப்பிற்குள்ளாகும் எனக்கருதி பல அரசுகளும் அதிகார வர்க்கங்களும் சித்திரவதைக்குள்ளானோரை பயமுறுத்தி, தாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என வாக்குமூலம் அளித்து அவர்களின் கையொப்பமிட்ட மருத்துவ சான்றிதழ்களை வழங்குகின்றன.
சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவளிக்கும் நாள் என்ற அடிப்படையில் சித்திரவதைக் கொடூரத்திற்கு ஆளானோரின், சித்திரவதையின் கொடூரத்தால் உயிர் துறந்தவர்களுடைய் குடும்பத்தினரின் அவல நிலைக்குறித்து நமது பார்வையை செலுத்துவது அவசியமானதாகும்.
சித்திரவதைகளின் விளைவுகள் உடனடியாகவோ அல்லது நீண்ட காலத்திற்கு பிறகோ வெளிப்படுபவையாகவோ இருக்கலாம்.சில நிரந்தர விளைவுகளாகவும் மாறும். உடல் உறுப்புகள் சேதம், இனப்பெருக்க ஆற்றல் அழிவு போன்றவை நிரந்தர விளைவுகளாகும். இதய நோய், சுவாசகோளாறு, சிறுநீரக பாதிப்பு, எலும்பு முறிவுகள், மூட்டு நோய், வயிற்றுத் தொடர்பான நோய்கள் இவைகளும் சித்திரவதைக்கு ஆளானோரை பாதிப்பிற்குள்ளாக்குகின்றன.
நினைவாற்றல் பாதிப்பு, தூக்கமின்மை, தலைவலி போன்றவை பொதுவான நோய்களாக இவர்களை தாக்குகின்றன. மனோரீதியான பாதிப்புக்குள்ளாகும் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை பிறரிடம் வெளிப்படுத்துவதற்குகூட இயலாதவர்களாக மாறும் பரிதாபகர சூழல்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உஸாமாவை பிடிக்கப் போகிறோம் என்று கூறி அநியாயமாக போர்தொடுத்த பொழுது அந்த நிகழ்வுகளை சேகரிக்கச் சென்ற அல்ஜஸீரா தொலைக்காட்சியின் நிருபரை அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் கைது செய்து குவாண்டனாமோ சிறைக்கொட்டகையில் அடைத்தது.
தான் நிரபராதி என்றும், தன்னை விடுதலைச் செய்யுமாறும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பின்னர் விடுதலைச் செய்யப்படுகிறார்.
திடகாத்திரமாக செய்தி சேகரிக்கச் சென்ற சூடான் நாட்டைச் சார்ந்த அந்த செய்தியாளர் விடுதலையாகும் பொழுது வயதான தோற்றம் கொண்டவராக பல்வேறு நோய்களை பரிசாகப் பெற்று தனது வீடு திரும்பும் அவலநிலையை ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் மூலம் நாம் அறிந்திருப்போம்.
டாக்டர் ஆஃபியா சித்தீகி, பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தவர். வயது 37. வேலை நியூரோ சயிண்டிஸ்ட். குர்ஆன் முழுமையாக மனப்பாடம் செய்தவர். இஸ்லாமிய மார்க்க அறிஞர். 2003 மார்ச் மாதம் கராச்சியிலிருந்து குழந்தைகளுடன் அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றது.
அமெரிக்க ராணுவ வீரனை கொல்ல முயன்றதாகவும், தாக்குதலுக்கு முன்னரே திட்டமிட்டதாகவும்,இதர குற்றங்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அல்காயிதாவுடன் தொடர் எனக் குற்றஞ்சாட்டி பாகிஸ்தான் அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டார்.ஆண்களுடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மனோநிலை பாதித்த நிலை. மூத்த மகன் அஹ்மத் ஆப்கானிஸ்தானில் சிறையிலுள்ளார் என தகவல். இதர பிள்ளைகளைக் குறித்து எந்த தகவலுமில்லை. இவ்வாறு பெண்கள் கூட இத்தகைய அரச பயங்கரவாதிகளால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் கொடூரத்தின் சின்னமாக திகழும் குவாண்டனாமோ சிறையில் வைத்து யெமன் நாட்டைச் சார்ந்த ஸலாஹ் அஹ்மத் அல் ஸலமி(வயது 37), சவூதி அரேபியாவைச் சார்ந்த மனி ஷமான் அல் உதைபி(வயது 30), யாஸர் தலால் அல் ஸஹ்ரானி (வயது 17) ஆகியோர் தற்கொலைச் செய்துக் கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் இவர்களின் சக கைதியாக இருந்து விடுதலையான பிரிட்டனைச் சார்ந்த தாரிக் டெர்கோல் தெரிவிக்கையில், அவர்களிருவரும் அழகான சகோதரர்கள் என்றும்,குர்ஆனை அழகான இனிமையான குரலில் ஓதுபவர்கள், ஈமானில் உறுதியானவர்கள் அவர்கள் நிச்சயமாக தற்கொலைச் செய்ய வாய்ப்பே இல்லை. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக அவர்கள் ஒத்துழையாமை மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டதன் தண்டனைதான் இந்த மரணம். என்கிறார்.
உமர் திகய்யிஸ், லிபியாவைச் சார்ந்த இவர் ஆப்கானிஸ்தானில் வைத்து அமெரிக்காவால் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டவர். பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திகய்யிஸ் தனது சிறையில் நடந்த சித்திரவதை அனுபவத்தை விவரிக்கும் பொழுது குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைப் பாருங்கள்:
"சிறையில் எங்களை வெறும் அரைக்கால் ட்ரவுஸருடன் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்ட பொழுது அதற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இதனால் கோபமடைந்த சிறை அதிகாரிகள் போராட்டத்திற்கு தலைமைத் தாங்கினேன் எனக்கூறி என்னை சிறை அறையில் கைகளை பின்னுக்கு கட்டிவிட்டு முழங்காலிட வைத்தனர்.
இந்நிலையில் ஒரு அதிகாரி என்னருகில் வந்தார். நான் அவரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே திடீரென அவரது இரண்டு விரல்களை எனது இரு கண்களிலும் செலுத்தினார். எனக்கு இரு கண்களிலும் அதீத குளிர்பாய்ந்த உணர்வு. இரத்தம் இரு கண்களிலும் பீறிட்டது. கடும் வேதனைக்குள்ளானேன். அருகிலிருந்த மேலதிகாரி எனது கண்களை குத்திய அதிகாரியிடம் இன்னும் ஆழமாக குத்தியிருக்கலாமே என கண்டிப்புடன் கூறினார்.
எனது வேதனையைக் கண்டு அவர்கள் சந்தோஷமடையக் கூடாது என்பதற்காக நான் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனது இரு கண்களில் ஒரு கண் மட்டுமே சிகிட்சையின் மூலம் சரியானது. ஒரு கண்ணின் பார்வை பறிபோனது."
மேலே கூறப்பட்டவையெல்லாம் சித்திரவதைகளின் ஒரு சிறிய பகுதிகளே. இன்னும் வெளிவந்த வெளியே வராத எத்தனையோ சம்பவங்களும் கொடூரங்களும் உள்ளன. அவற்றையெல்லாம் இங்கு வர்ணிக்க இயலாது.
இந்தியாவில் வெடிக்குண்டு வழக்குகளில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களும், மாவோயிஸ்டுகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள ஆதிவாசி மக்களும் சிறையில் படும் அவஸ்தைகள் ஏராளம்.
அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் எனத் தெளிவான பின்னரும் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் அலைக்கழிக்கப் படுகின்றனர் முஸ்லிம் இளைஞர்கள்.
கஷ்மீரில் தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆளும் வர்க்கத்தினரால சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளம். காணமல் போன கஷ்மீரிகள் ஆயிரக்கணக்கில். அவர்களின் குடும்பங்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.
தமிழகத்தின் தென்மாவட்டமான திருநெல்வேலியில் கடையநல்லூரைச் சார்ந்தவர் மசூத் அலி. கடந்த 2005 ஆம் ஆண்டு இவர்களது நண்பர் ஒருவருக்கு சுமோ கார் ஒன்றை பயணத்திற்கு ஏற்பாடு செய்துக் கொடுக்கிறார்.மறுநாள் இவரது நண்பர் சுமோ காரை திருடிச் சென்றுவிட்டதாகவும்,தொழிலதிபர் ஒருவரின் பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்ததாகவும், அதற்கு மசூதும் உடந்தை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆரால்வாய்மொழி நிலைய போலீஸ் மசூதை கைதுச் செய்கிறது. அவரது மனைவி அசனம்மாளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுதலைச் செய்கின்றனர்.
கைதுச் செய்யப்பட்ட மசூதை கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுசென்று குற்றத்தை ஒப்புக்கொள்ளக் கூறி தலைக்கீழாக தொங்கவிட்டு கடுமையாக சித்திரவதைச் செய்துள்ளனர். சித்திரவதை அதிகரித்த பொழுது ஒருக்கட்டத்தில் மசூதின் உயிர் பிரிகிறது. பின்னர் இவரது கொலையை மறைத்த போலீசார், மசூதின் நண்பர்களாக கருதப்படும் கல்யாணியையும், கிருஷ்ண மூர்த்தியையும் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மசூத் தப்பிவிட்டதாக பொய் கூறியுள்ளனர்.
போலீசாரின் இந்த பொய்யை நம்பாத மசூதின் மனைவி அசனம்மாள் தமிழக முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் புகார் அனுப்பியதுடன், மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் (ஆள்க்கொணர் மனு) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
மசூது காணாமல் போய்விட்டார் எனக்கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவை நீதிமன்றத்தில் கடையல்நல்லூர் இன்ஸ்பெக்டர் பி.கே.ரவி தாக்கல் செய்யவே உயர்நீதிமன்ற விசாரணை அத்துடன் முடிவடைந்தது.
ஆனால் தலைமைச் செயலாளர் அசனம்மாள் அனுப்பிய புகாரின் அடிப்படையில் மசூத் என்ன ஆனார்? என விளக்கம் கேட்டு கடையல்நல்லூர் இன்ஸ்பெக்டருக்கு கடிதம் அனுப்ப அவர் இன்னொரு முதல் தகவல் அறிக்கையை தென்காசி ஆர்.டி.ஓக்கு அனுப்பி விட்டு அதனை தலைமைச் செயலாளருக்கு தெரியப்படுத்துகிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு முதல் தகவல் அறிக்கையின் குற்ற எண்களும் ஒன்றாகும். (குற்ற எண் 391/2006).
இவ்வழக்குத் தொடர்பாக அசனம்மாள் NCHRO என்ற மனித உரிமை அமைப்பை அணுகினார். NCHRO அமைப்பும் இவ்வழக்கை கையிலெடுத்து கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகின்றது. NCHRO வின் கடும் முயற்சியின் காரணமாக மசூதின் காவல்நிலைய மரணம் தொடர்பாக 10 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 12 போலீஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் தென்காசி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் குற்றப்பத்திரிகை குற்றவாளிகளுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டதாக கூறி இதனடிப்படையில் வழக்கை நடத்தினால் குற்றவாளிகள் தப்பிவிடலாம் எனக்கூறி அசனம்மாள் NCHRO மூலமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றமும் குற்றப்பத்திரிகைக்கு தடை விதித்துள்ளது.
இதில் பரிதாபகரம் என்னவெனில் மசூத் கொல்லப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் இதுவரை அவரது சடலம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதுதான். NCHRO தனது நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், ஏகாதிபத்தியம் போன்றவர்களால் மனித இனம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இன்னல்களை சந்தித்து வரும் வேளைகளில் ஆண்டிற்கொருமுறை மட்டும் இத்தினத்தை நினைவுக் கூறுவதுடன் நிறுத்திவிடாமல் சித்திரவதைக்குள்ளானோர் குறித்து தினந்தோறும் நாம் சிந்தித்து அவர்களது விடுதலைக்காகவும், மறு வாழ்வுக்காகவும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அத்தோடு சித்திரவதைக்கெதிரான நீதியை வேண்டிய போராட்டம் தொடரவேண்டும்.
இங்கு நமக்கு பிரபஞ்சத்தின் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் கூறிய ஒருக்கூற்றை இங்கு நினைவுக் கூறுவது சாலச் சிறந்ததாகும். ”அநீதத்திற்குள்ளானவனின் பிரார்த்தனையை பயந்து கொள்! ஏனெனில் அதற்கும், அல்லாஹ்விற்கும் இடையில் யாதொரு திரையும் இல்லை” (நூல்:புஹாரி, முஸ்லிம்).
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment