இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை

லண்டன்: இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் நிதி பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அரசின் சர்வதேச வளர்ச்சிக்கான இணை அமைச்சர் ஆண்ட்ரூ மிட்சல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் சர்வ சிக்ஷா அபியான் கல்வித் திட்டத்திற்காக இங்கிலாந்து அரசு பல கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது.

ஆனால் இதில் பெருமளவில் ஊழல்நடந்திருப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இவை அதிர்ச்சிகரமான புகார்கள். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். இங்கிலாந்து அளித்த நிதி முறைகேடு செய்யப்பட்டதா, இல்லையா என்பதை கண்டறிய உத்தரவிட்டுள்ளேன்.

ஊழலை எந்த ரூபத்திலும் இங்கிலாந்தின் புதிய அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார் மிட்சல்.

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற பணத்தை வைத்துக் கொண்டு திட்ட அதிகாரிகள் பலர் சொகுசு கார்களை வாங்கியுள்ளதாகவும், புதிய வீடுகளை வாங்கியுள்ளதாகவும், பலர் வங்கிகளில் ரகசியக் கணக்கு தொடங்கி அதில் இந்தப் பணத்தை போட்டு வைத்து வருவதாகவும் சமீபத்தில் இங்கிலாந்து செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகின.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்து அரசின் சர்வதேச உதவித்துறை, இத்திட்டத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த உதவித் தொகையின் அளவு 1500 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சர்ச்சை குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் புகார் வியப்பளிக்கிறது. விசாரணை தொடர்பாக இங்கிலாந்து அரசிடமிருந்தோ அல்லது சர்வதேச உதவித் துறையிடமிருந்தோ எங்களுக்கு எந்தவிதத் தகவலும் இதுவரை வரவில்லை.

அவர்கள் நமக்கு தருவது உதவித் தொகை அல்ல, மாறாக அதை அவர்கள் திரும்பப் பெறப் போகிறார்கள். எனவே இதை இலவச உதவியாக கூற முடியாது. அவர்கள் கொடுத்த தொகையை நாம் செலவிடுகிறோம். அதற்கு கணக்கு வைத்துள்ளோம். அந்தத் தொகையை நாம் படிப்படியாக திருப்பித் தரப் போகிறோம். எனவே இதில் முறைகேடு என்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் புகார்கள் குவிந்துள்ளனவாம். பலர் மோசடி செய்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளதாகவும், பலர் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: