மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு-2வது நாளாக குளத்தில் குடியிருக்கும் மக்கள்
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே நயினாரகரத்தில் தனியார் மினரல் வாட்டர் தொழி்ற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக வள்ளியம்மாள்புரம் கிராம மக்கள் கண்மாயில் குடியிருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. பக்கத்து கிராம மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடையநல்லுர் சட்டமன்ற தொகுதி நயினாரகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வள்ளியம்மாள்புரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று நேற்று மினரல் வாட்டர் தொழிற்சாலையை துவக்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் முதல்வரின் சிறப்பு பிரிவு, மாவட்ட நிர்வாகம் உள்பட பல்வேறு அதிகார மையங்களுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் தங்கள் முயற்சி பலன் அளிக்காததால் நேற்று வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் ஆடு, மாடுகளுடன் உடைமைகளை எடுத்து கொண்டு மறிச்சிகட்டி கண்மாயில் குடியேறினர். நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாது கண்மாயில் கூரைகள் வேய்ந்து தங்கினர். இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
0 comments:
Post a Comment