
ஸ்ரீஹரிகோட்டா : 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 5 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
இதற்கான 51 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. நாளை ஏவப்படவுள்ள பிஸ்எல்வி-சி15 ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்ன.
இந்த ராக்கெட் மொத்தம் ஐந்து செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்கிறது. அதில் ஒன்று இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக் கோளான கார்டோசாட்-2பி. அதேபோல அல்ஜீரியாவின் அல்சாட், கனடா, சுவிட்சர்லாந்தின் 2 நானோ செயற்கைக் கோள்கள், அந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தயாரித்த மிகச் சிறிய அளவிலான ஸ்டுட்சாட் எனப்படும் ஒரு செயற்கைக்கோள் ஆகியவற்றை பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தவுள்ளது.
மே 9ம் தேதியே இது விண்ணில் செலுத்தப்படவிருந்தது. ஆனால் அப்போது ராக்கெட்டின் 2வது நிலையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தள்ளி வைக்கப்பட்டு நாளை ஏவப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டை இந்தியா செலுத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ள கார்டோசாட்-2பி செயற்கைக் கோளின் எடை 694 கிலோவாகும்.
நகர்ப்புறத் திட்டமிடல், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகிய பணிகளுக்கான ஆய்வு தொடர்பாக இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலைகளைத் திட்டமிடும் பணி, ரிங் ரோடுகள் அமைக்கும் பணி ஆகியவற்றை திட்டமிடவும் இந்த செயற்கைக் கோள் உதவும்.
இதில் பொருத்தப்பட்ட கேமிரா மிகவும் அதி நவீனமானது. துல்லியமாக படம் எடுக்கக் கூடிய திறமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment