அக்னி உருவாக்கத்தைவிட ஊனமுற்றோருக்கு எடைகுறைந்த கால்கள் தயாரித்ததே சாதனை: கலாம்


எஸ்.எல்.வி-3 ராக்கெட், `அக்னி' ஏவுகணை போன்றவற்றை உருவாக்கியதை விட ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்ததே எனக்கு பேரானந்தம் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்புவிழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் சனிக் கிழமையன்று நடந்தது. பல்கலைக்கழக இணைவேந்தரும், சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 10 ஆயிரத்து 955 பேர் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திப் பேசும்போது அப்துல் கலாம் கூறியதாவது:-

தற்போது அனைத்து விதமான நோய்களுக்கும் ஒரே மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால்தான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு ஒரே மருத்துவ முறையை பின்பற்றுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால கட்டத்தில் ஒரு நோயாளிக்கு எந்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தால் அந்த நோயை முற்றிலும் குணமாக்க முடியும் என்பதை ஆராய வேண்டும். இந்த ஆய்வை மேற்கொள்ள வெவ்வேறு மருத்துவ முறைகளை கையாளும் டாக்டர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம்.

எஸ்.எல்.வி-3 ராக்கெட்டை விண்ணில் ஏவியபோது நானும், எனது குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தோம். அதன்பிறகு அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்திய போதும், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோதும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் விட எனக்கு பேரானந்தம், ஆத்ம திருப்தி தரக்கூடியது ஊனமுற்ற குழந்தைகளுக்கு குறைந்த எடையில் செயற்கை கால்கள் தயாரித்து கொடுத்ததுதான். முன்பு 4 கிலோ எடை கொண்ட செயற்கை கால்களைத்தான் ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். அவற்றை மாட்டிக்கொண்டு அவர்கள் நடந்து செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். துயரமான அந்த காட்சியை நானே ஐதராபாத்தில் ஒரு மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன். 4 கிலோவுக்கு பதிலாக நாங்கள் வெறும் 400 கிராம் எடையில் செயற்கை கால்களை தயாரித்துக்கொடுத்தோம். அந்த சாதனைதான் எனக்கு பேரானந்தம் தரக்கூடிய சாதனை.

இளம் மருத்துவர்களாகிய நீங்கள், இந்த சமுதாயத்திற்கு தொண்டாற்றிய மருத்துவர்களை முன்மாதிரியாகக் கொண்டு சேவை செய்திட வேண்டும். ஏழைகளுக்கு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: