திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது.
மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார்.
இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி காயல்பட்டினம் மொகதூம் தெருவை சேர்ந்த அப்துல் கபூர், அவரது கள்ளக் காதலி ரமலா பீவியை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரமலா பீவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் ஆண் குழந்தையை நரபலி கொடுத்து அதன் ரத்தத்தை குடித்தால் அவர் குணமடைவார் என்று அப்துல் கபூரின் கனவில் அசரீரீ கேட்டதாகவும், இதனால் இருவரும் சேர்ந்து குழந்தை காதர் யூசுப்பை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
பின்னர் ஏரலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து இருவரும் காதர் யூசுப்பின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்று அவனது ரத்தத்தை குடித்ததும் தெரிய வந்தது.
பின்னர் சிறுவனின் உடலை தனியாகவும், தலையை தனியாகவும் இரு தூக்கு வாளிகளில் அடைத்து உடலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தர்கா அருகே புதைத்தனர். பின்னர் தலையை திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரை ஓரத்தில் புதைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அப்துல்கபூர், ரமலா பீவியை நேற்று கல்லாமொழி கடற்கரைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தையின் தலை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டும்படி கூறினார்கள்.
திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ, வருவாய் ஆய்வாளர் கோபால், வி.ஏ.ஓ. பாலசுப்பிரமணியன், மதுரை அரசு மருத்துவமனை பேராசிரியர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. பாலிதீன் கவரில் தலை அழுகிய நிலையில் இருந்தது. மேலும் தலை வைக்கப்பட்டிருந்த தூக்கு வாளியின் கீழ்பகுதியில் தாயத்து, மந்திரிக்கப்பட்ட தாள் வைக்கப்பட்டிருந்தது.
அழுகிய நிலையில் இருந்த தலை பரிசோதிக்கப்பட்டு சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment