சோராபுதீன் வழக்கில் நரேந்திர மோடியையும் விசாரிக்குமா சிபிஐ?

அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் தற்போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. இதனால் மோடியையும் சிபிஐ விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சோராபுதீன் வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையில், நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையில், அமீத் ஷாவுக்கு சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கொலை சம்பவம் தொடர்பாக உள்ள தொடர்புகள் குறித்து நரேந்திர மோடிக்குத் தெரியுமா என்பது விசாரிக்கப்பட வேண்டும். சோராபுதீன் கொலை மற்றும் அதன் பின்னர் நடந்து வந்த வழக்கு விவகாரத்தில் அமீத் ஷாவின் தலையீடுகுறித்து மோடிக்குத் தெரியுமா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமீத் ஷாவைக் காக்க நரேந்திர மோடி முயன்றாரா என்பதும் அறியப்பட வேண்டிய ஒன்றாக உள்ளதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

இதனால் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ கோர்ட் அனுமதியைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமீத் ஷா, கடந்த வாரம் வரை குஜராத் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இவரது கட்டு்பபாட்டில்தான் இருந்து வந்தது.

அவரை சிறையில் வைத்து 3 சுற்று விசாரணைய முடித்துள்ளது சிபிஐ. ஆனால் அவர் அளித்த பதில்கள் எதுவுமே திருப்தி தரவில்லை என்று சிபிஐ தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 கேள்விகள் அமீத் ஷாவிடம் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மோடியின் பெயர் இதில் இடம் பெற்றிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோராபுதீன் வழக்கு தொடர்பாக அமீத் ஷா எடுத்த முடிவுகள் தெரியுமா, அல்லது தெரிந்தும் அதை மறைக்கும் வகையில் நடந்து கொண்டாரா என்பதுதான் தற்போது சிபிஐ மோடியிடமிருந்து எதிர்பார்க்கும் பதிலாக எழுந்துள்ளது.

சோராபுதீனைக் கொல்ல 3 அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஷா

இதற்கிடையே, சோராபுதீனை போலி என்கவுன்டர் மூலம் தீர்த்துக் கட்டுமாறு 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமீத் ஷா உத்தரவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

அமித் ஷா மீது கடந்த 23-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் சோராபுதீனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல 3 போலீஸ் அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சோராபுதீன் வர்த்தகர்களையும் மற்றவர்களையும் மிரட்டி வந்தார். இதனால் அவர் மீது அவர்களுக்கு பயம் இருந்தது. பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலும் கிரானைட் தொழில் அதிபர்களை மிரட்டி வந்தார்.

இதையடுத்து சோராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், அபய் சுடாஸ்மா ஆகியோரிடம் அமித் ஷா ஒப்படைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதை பகிரங்கமாக வெளியிட்டதற்கு பாஜக எம்.பியும், வக்கீலுமான ராம்ஜேட்மலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பே மீடியாக்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதான் சி.பி.ஐ. யின் வழக்கம். தினமும் குற்றப்பத்திரிகை தகவல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமித் ஷாவுக்கு ஒரு பேப்பர் கூட வழங்கப்படவில்லை என்றார்.

குஜராத் மாஜி டிஜிபிக்கு சிபிஐ சம்மன்

இதற்கிடையே, சோராபுதீன் கொலை வழக்கில், மாஜி குஜராத் டிஜிபி பி.சி.பாண்டேவுக்கு சிபஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் ஆஜராகுமாறு பாண்டே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை மாநில சிஐடி போலீஸார் விசாரித்த சமயத்தில் டிஜிபியாக இருந்தவர் பாண்டே. சோராபுதீன் வழக்கில் குழப்பம் விளைவிக்க சில அதிகாரிகள் முயன்றது குறித்து புகார்கள் உள்ளன. இதுதொடர்பாக அமீன் உள்ளிட்ட அதிகாரிகளும் சிக்கியுள்ளனர். எனவே இதுகுறித்து பாண்டேவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

பாண்டேவை சிபிஐ விசாரிக்கவுள்ளது இது முதல் முறையாகும்.

முன்னாள் விசாரணை அதிகாரிக்கும் சம்மன்

இதேபோல சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த குழுவின் தலைவரான கீதா ஜோஹ்ரிக்கும் சிபிஐ நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

இவர்தான் சோராபுதீன் வழக்கை முதலில் விசாரித்து வந்த அதிகாரி ஆவார். ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு கீதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

தற்போது கீதா ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.

ஏற்கனவே கீதாவை 2 முறை சிபிஐ விசாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீதா தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். ஆகஸ்ட்6ம் தேதிதான் அவர் திரும்பி வருகிறார்.

சோராபுதீன் வழக்கில் அமீத் ஷா, ஐபிஎஸ் அதிகாரி அபய் சுடாஸ்மா, சோராபுதீன் மனைவி கெளசர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்ஹாம் பண்ணையின் உரிமையாளர் ராஜேந்திர ஜிரவாலா ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: