மணப்பாறை: மணப்பாறை அருகே ராணுவத்தினர் விட்டுச் சென்ற பயிற்சி வெடிகுண்டை உடைக்க முயன்ற வாலிபரின் கை மணிக்கட்டுடன் துண்டானது. கால்களும் சேதமடைந்தன. சிறுமிக்கு தலை, கைகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி அருகே மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்த மருதமுத்து செருப்பு தைக்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக மகன் ரவிச்சந்திரன் (15) வேலை செய்து வருகிறார். நேற்று மாலை மருதமுத்துவின் பேத்தி இந்துமதியும் (8) கடைக்கு வந்தார்.
கடை அருகே பிளாஸ்டிக் பையில் அலுமினிய பொருள் ஒன்று கிடந்தது. அதை எடுத்த ரவிச்சந்திரன் இரும்பும் கம்பியால் உடைத்தார். அப்போது அந்தப் பொருள் பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
இதில் ரவிச்சந்திரனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டானது. மேலும் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த இந்துமதிக்கும் தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
குண்டு வெடித்த சத்தம் கேட்டு அருகே உள்ள காவல் நிலைய போலீசார் ஓடி வந்து ரவிச்சந்திரன், இந்துமதியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து அறிந்த திருச்சி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, தாசில்தார் லீலாவதி ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மணப்பாறை அருகே விராமலையில் ராணுவத்தினர் ஆயுத பயிற்சிமேற்கொள்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் பயிற்சி நடந்தது.
அப்போது வெடித்து சிதறிய குண்டுகள் அப் பகுதியி்ல் உள்ள மைதானத்தில் சிதறி கிடந்துள்ளன. அதில் அலுமினியம் உள்ளதால் எடைக்குப் போட பலரும் எடுத்துச் செல்வது வழக்கம்.
அதில் வெடிக்காத 2 குண்டுகளை யாரோ மருதமுத்துவி கடை அருகே வைத்துள்ளனர். அதை ரவிச்சந்திரன் உடைத்தபோது தான் வெடித்துச் சிதறியுள்ளது.
வெடிக்காத மற்றொரு குண்டை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment