
அலகாபாத்: உத்தரபிரதேச மாநில நீதிதுறையின் வரித்துறை பிரிவு அமைச்சர் நந்த கோபால் குப்தாவைக் கொல்ல நடந்த குண்டு வெடிப்பில் அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பாளர், பத்திரிகையாளர் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் அலகாபாத் நகரமே அதிர்ச்சியில் உறைந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தின் நீதித்துறையின் வரித் துறை பிரிவு அமைச்சராக இருப்பவர் நந்தி என்று அழைக்கப்படும் நந்தகோபால் குப்தா. இவரது வீடு பகதூர்கஞ்ச் என்ற பகுதியில் உள்ளது. நேற்று காலை 11 மணியளவில், தன் வீட்டிலிருந்து கோவில் ஒன்றுக்குச் செல்வதற்காக, ஒரு பத்திரிகையாளர் மற்றும், பாதுகாப்பாளர் இருவருடன் அமைச்சர் தனது காரில் ஏறினார். கார் சுமார் பத்து மீ., தூரம் நகர்ந்ததும் பயங்கர சத்தத்துடன் குண்டு ஒன்று வெடித்தது. இதில், காரில் இருந்த அமைச்சர், பத்திரிகையாளர் விஜய் பிரதாப் சிங் மற்றும் அமைச்சரின் பாதுகாப்பாளர் சஞ்சய் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக மூவரும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்களில் அமைச்சர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக கூறப்பட்டது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட துணை ஐ.ஜி.பி., எஸ்.கே.சிங் கூறுகையில், "வாசலில் அமைச்சரின் காருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் சக்தி வாய்ந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அருகிலிருந்த ஆறுக்கும் மேற்பட்ட வாகனங்கள், கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிமோட் மூலம் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்' என்றார். இச்சம்பவம் நடந்ததையடுத்து முதல்வர் மாயாவதி, அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டி உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு உத்தரவிட்டார். சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்ட அவர், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். பின்னர் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அவர், "அமைச்சர் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் தப்பிக்க முடியாது' என்று எச்சரித்தார்.
இதையடுத்து மாநில உள்துறை தலைமைச் செயலர் குன்வர் பதே பகதூர், டி.ஜி.பி., கரம்வீர் சிங் ஆகியோர் அலகாபாத்துக்கு விரைந்தனர். சம்பவம் குறித்து செய்திகள் வேகமாகப் பரவியதால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அமைச்சரின் ஆதரவாளர்கள் பெருந்திரளாக அவரது வீட்டின் முன்பு கூடி காவல்துறையினரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர். அமைச்சரின் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
குற்றவாளிகளைத் தேடி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். குண்டு வெடிப்பு நடந்த சில மணிநேரங்களில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த திலிப் மிஸ்ரா என்ற பிரமுகரின் வீட்டில் பதுங்கியிருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திலிப்புக்கும் அமைச்சருக்கும் நிலம் தொடர்பான பிரச்னை ஒன்று நீண்ட நாளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைது பற்றிய பிற விவரங்களைக் கூற அதிகாரிகள் மறுத்துவிட்டனர். காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார்..
0 comments:
Post a Comment