வான்வெளியில் நமது வளர்ச்சியை பிரகடனப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள், "அஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். அதி நவீன கருவிகளுடன் செலுத்தப்படும் இந்த செயற்கைக் கோள் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில், நம் நாடு அடுத்த கட்டத்தை அடையும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, விண்வெளியில் பல சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. 1962ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணம் துவங்கியது. இதற்காக, "தும்பா'வில் முதல் ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அடுத்தபடியாக, 1969ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (ஐ.எஸ்.ஆர்.ஓ.,) நிறுவனம் துவக்கப்பட்டது.
இந்நிறுவனம் 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி, புகழ் பெற்ற, "ஆர்யபட்டா' செயற்கைகோளை ஏவியது. அதன்பின் நான்கு ஆண்டு இடைவெளியில், "பாஸ்கரா -1' செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.
அதன் பிறகு இந்தியாவின் விண்வெளி பயணம் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. எஸ்.எல்.வி., -3 , ஆப்பிள், பாஸ்கரா -11, இன்சாட் -1ஏ, இன்சாட் -1பி, ஆகியவை அடுத்த ஆறு ஆண்டுகளில் ஏவப்பட்டது. உலக நாடுகளின் கவனம் இந்தியா விண்வெளி ஆய்வு மையத்தின் மீது பதிய துவங்கியது. அதன் பின் பல செயற்கைகோள்களை இந்தியா விண்ணில் இருந்து செலுத்தி வருகிறது. பிரென்சு கயானாவில் இருந்தும், ஸ்ரீஹரிகோட்டா ஆய்வு தளத்தில் இருந்தும், சுயமாகவும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் துணையுடனும் இந்தியா விண்ணிற்கு செயற்கை கோள்களை செலுத்தி வருகிறது.
இயற்கை வளம், கால நிலை, தொலை தொடர்பு, ராணுவம், தகவல் தொழில் நுட்பம், ஆராய்ச்சி, மண்வளம், மீன் வளம், வனம், கடல், விவசாயம் உட்பட பல்வேறு தளங்களில் ஆய்வு செய்யும் செயற்கை கோள்களை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இதில் பல செயற்கைகோள்கள் வெற்றிகரமாக அமைந்தாலும், சில தோல்வியை எதிர்கொண்டுள்ளன.
நம் நாட்டு செயற்கைகோள்களை மட்டுமல்லாது, வெளி நாட்டு செயற்கைகோள்களையும் விண்ணிற்கு செலுத்தி வருகிறது. நமது சொந்த தயாரிப்பில் உருவான, ராக்கெட்களை பயன்படுத்தியது; ரஷ்யாவுடன் இணைந்து, நமது வானியல் நிபுணர் ராகேஷ்சர்மாவை விண்வெளிக்கு அனுப்பியது என அடுத்தடுத்த வளர்ச்சி ஏற்பட்டது.
முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஆரம்பித்து வைத்த பாதையில், தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பங்களிப்புடன், 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரயான் விண்கலத்தை அனுப்பி இந்தியா சாதனை படைத்தது.
மேலும் ஒரு சாதனையாக, சந்திரயான் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அனுப்பியுள்ளது. சந்திரனில் மேலும் ஆய்வு செய்ய வசதியாக, வரும் 2012 -13ம் ஆண்டு வாக்கில், சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பவும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள், "அஸ்ட்ரோசாட்' என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இந்த செயற்கைக்கோள் 1,500 கிலோ எடை கொண்டதாகவும், ஐந்து ஆண்டுகள் ஆயுள் உள்ளதாகவும் இருக்கும். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து செலுத்தப்படவுள்ளது.
இந்த செயற்கைக் கோளில் எக்ஸ்ரே டெலஸ்கோப், சி.சி.டி., கேமரா, ஸ்கை மானிட்டர், அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் உள்ளிட்ட அதி நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளன. அதன் மூலம், காஸ்மிக், எக்ஸ்ரே கதிர்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
இதற்கு மேல், இந்தியாவின் கனவுத் திட்டமான, "கிரையோஜெனிக்' தொழில் நுட்பதை முழுமையாக கண்டறிந்து அதை நாமே நம் சொந்த தயாரிப்பில் தயாரிக்க வேண்டும் என்ற கனவுடன் நமது விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment