
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், நவீன எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்க வரி வசூல் மேற்கொள்ளப்படவுள்ளது. வரும் 2012ம் ஆண்டு முதல், இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு சுங்க வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில் நிறைய நடைமுறை குளறுபடிகள் நடைபெறுவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த நந்தன் நிலேகனி கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, சுங்க வரி வசூல் செய்வது குறித்து ஆராய்ந்து, நேற்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்க வரிச் சாவடிகளை ஒருங்கிணைத்து எலக்ட்ரானிக் வரி வசூல் செய்வதற்கு, இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
சுங்க வரி வசூல் செய்வது குறித்து சர்வதேச அளவில் கையாளப்படும் நவீன முறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் இந்தியாவிலும் புதிய நடைமுறையை கொண்டு வரலாம் என, இந்த கமிட்டி கூறியுள்ளது. அதன்படி ரேடியோ அதிர்வலைகளை அடையாளம் கண்டு, சேட்டிலைட் மற்றும் செல்லுலார் தொலைத்தொடர்பு இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி, குறிப்பிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களை அடையாளம் கண்டு வரி வசூல் செய்யும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், அமெரிக்கா, மெக்சிகோ, சிலி, அர்ஜென்டினா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, மொபைல் போன்களுக்கு இருப்பது போலவே ப்ரீபெய்டு சிஸ்டமும் சுங்க வரி வசூலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தொகைக்கு கூப்பனை வாங்கிக் கொண்டு சுங்கச்சாவடியை தாண்டும் போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் கருவியின் முன் காட்டினால், தேவையான பணம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த கார்டுகளை, "டாப் அப்'பும் செய்து கொள்ளலாம். இந்த கார்டை வைத்து பார்க்கிங் உள்ளிட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்ட்ரல் டோல் கிளியரிங் ஹவுஸ் என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கி, அங்கு சுங்க வரி வசூல் குறித்து அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்தப்படும். வாகன ஓட்டிகள், வரி வசூல் செய்பவர்கள், ஆகியோருக்கு ஏற்படும் தேவையற்ற காலவிரயம் தவிர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது, எரிபொருள் சிக்கனம் மற்றும் சுங்கச் சாவடிகளில் நீண்ட "கியூ'வில் காத்திருக்கவும் தேவையில்லை.
வரி வசூலில் தனிநபர் தலையிட்டு முறைகேடு செய்வது உள்ளிட்ட விஷயங்களுக்கும் வாய்ப்பு ஏற்படாமல் போகும். இந்த நவீன தொழில்நுட்பத்தை வரும் 2012ம் ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் அறிமுகப்படுத்த, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
0 comments:
Post a Comment