ஐ.பி.யை சுத்திகரிக்க வேண்டும்


மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் காவல்துறையில் ஐ.ஜியாக பணியாற்றி விருப்ப ஒய்வுபெற்றவரும், கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலின் ஆசிரியருமான எஸ்.எம். முஷ்ரிஃப் அப்புத்தகத்தின் மலையாலப் பதிப்பை வெளியிட கோழிக்கோட்டிற்கு வரிகைத் தந்தபொழுது தேஜஸ் பத்திரிக்கையின் செய்தியாளருக்கு அளித்த பேட்டி:

உள்நாட்டு பாதுகாப்பு முகமையான இண்டலிஜன்ஸ் பீரோவைக் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளுடன் காவல்துறையில் பணியாற்றிய ஒருவர் களமிறங்குவது இதுதான் முதல் முறையாகும். இத்தகையதொரு புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது?

ஐ.பிக்கும் இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கும் இடையேயான ரகசிய கூட்டணி குறித்து காவல்துறையில் பணியாற்றியபொழுதே கண்காணித்து வந்தேன். இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஐ.பி.யின் முஸ்லிம் விரோத திட்டங்களை வெளிப்படுத்தும் பத்திரிக்கைச் செய்திகளை பாதுகாத்து வைப்பது எனது வழக்கமாகும். நாட்டில் நடைபெறும் மதமோதல்களை மிக ஆழகமான ஆய்வுக்கு உட்படுத்தியதில் எனக்கு புரிந்த ஒரு விஷயம் என்னவெனில், இரு சமூகங்களுக்கிடையேயான தவறான புரிந்துணர்வின் மூலம் இம்மோதல்கள் நடைபெறவில்லை என்பதுதான். நூற்றாண்டிற்கும் மேலாக புலனாய்வுத்துறைக்கும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்குமிடையே நிலவும் ரகசிய கூட்டணியின் உருவாக்கம்தான் இக்கலவரங்கள் என்பதை பணியிலிருந்து நான் ஒய்வு பெற்றபொழுது தெரிந்து கொண்டது. நான் தெரிந்து வைத்திருந்த விஷயங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினேன். மதக்கலவரங்களைக் குறித்து எழுதத் துவங்கியபொழுது தான் மும்பை தாக்குதல் நடைபெற்றது. எனது ஊகங்கள் தவறில்லை என்பதை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்தான் பின்னர் நடந்தேறியது. இது தான் கர்கரேயின் கொலை குறித்த புத்தகம் எழுதும் ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது என்று வேண்டுமானால் கூறலாம்.

கர்கரேயின் கொலைக்கு பின்னணியில் ஐ.பி - ஹிந்துத்துவா கூட்டணி உள்ளது என்பது ஊகம் மட்டும்தானா?

இல்லை தெளிவான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலேயே நான் கூறுகிறேன். ஒரு முன்னள் காவல்துறை அதிகாரி என்ற நிலையில் எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு இதனை உறுதியாக கூற இயலும். மும்பை தாக்குதலின் திரைமறைவில் உள்ளூர் கும்பலை பயன்படுத்தி கர்கரே உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை கொலை செய்துள்ளார்கள் என்பதற்கான பத்துக்கும் மேற்பட்ட ஆதரங்களை நான் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளேன். மும்பையை தாக்குவதற்கு ஒரு குழு காராச்சியிலிருந்து படகு வழியாக புறப்பட்டுள்ளது என்ற தகவல் "ரா" மூலமாக ஐ.பிக்கு முன்னரே கிடைத்த பிறகும் பாதுகாப்பு பொறுப்பை வகிக்கும் மும்பை காவல்துறைக்கோ கடற்படையின் மேற்கு கமாண்டிற்கோ அதனை அளிக்க அவர்கள் (ஐ.பி) தயாரில்லை பெயரளவிற்கு சில தகவல்களை கடலோரக்காவக்படைக்கு கொடுத்துவிட்டு ஹிந்துத்துவாதிகளுக்கு ரகசியமாக அளித்துள்ளனர். சிவாஜி டெர்மினலில் தாக்குதல் நடத்தியவர்கள்தாம் காமா மருத்துவமனைஅனைந்துள்ள இடத்திற்கு சென்று கர்கரேயைக் கொன்றதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் இவ்விரு இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதற்கான ஆதாரங்களை நான் பட்டியலிட்ட பிறகும் அதில் ஒன்றைக்கூட மறுக்க எவரும் முன்வரவில்லை. அதாவது உளவு தகவல்களை போலீஸிற்கும், வெஸ்டர்ன் கமாண்டிற்கும் அளித்து மும்பை தாக்குதலை தடுப்பதற்கு பதிலாக கர்கரேயைக் கொல்வதற்கு ஏற்ற வகையில் மும்பைத் தாக்குதல் நடந்தேறட்டும் என அவர்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர்.

ஹிந்துத்துவவாதிகளின் விருப்பங்கள்தான் தேசப்பாதுகாப்பை விட ஐ.பிக்கு முக்கியம் என்றா தாங்கள் கூறுகிறீர்கள்?

நிச்சயமாக! அவ்வாறில்லையெனில் உளவுத் தகவல்களை அவர்கள் முறையாக உரிய பாதுகாப்பு படையினருக்கு அளித்து தாக்குதலை தடுத்திருப்பார்கள். அந்தளவுக்கு ஹிந்துத்துவா மயமாக்கப்பட்டதுதான் ஐ.பி. ஆர்.எஸ்.எஸ்சை விட அபாயகரமானது ஐ.பி என்று நான் நம்புகிறேன். காரணம் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற பெயரால் ஆட்சியாளர்களை தவறான புரிந்துணர்வுக்கு கொண்டுசெல்லும். உண்மையான தீவிரவாதிகளான ஹிந்துத்துவ வாதிகளின் செயல்பாடுகளை மறைக்காசெய்வதும் தான் ஐ.பி.யின் வேலை. உதாரணமாக உளவுத்துறையின் அறிக்கைகள் என்ற பெயரில் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகளை கவனித்துப்பாருங்கள் நாட்டில் தீவிரவாதத் தாக்குதல் பீதியை ஏற்படுத்தும் வகையில் கட்டிக்கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு, சினிமாத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கும், அணுசக்தி நிலையங்கள், பாதுகாப்பு மையங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கெதிராகவும் தாக்குதல் நடக்கப்போவதாக கூறும் அச்செய்திகள். இதில் பெரும்பாலும் போலியான தகவல்களாகும் என்பது அனுபவமாகும்.சரி இந்த அறிக்கைகள் உண்மை என்றே கருத்தில் கொள்வோம்;

அவ்வாறெனில் ரசசிய புலனாய்வு ஏஜன்சிகள் என்ன செய்ய வேண்டும்? அவற்றை பகிரங்கப்படுத்தி தாக்குதல் நடத்துபவர்களுக்கு தப்பிக்க வழி வகைச்செய்வதா? அல்லது தகவல்களை ரகசியமாக வைத்து அவர்களை பிடிப்பதா? மக்களுக்கிடையே தேவையற்ற பீதியையும், பகை உணர்வையும் அதிகரிக்கத்தான் ஐ.பியின் இத்தகைய போலித்தகவல்கள் உதவும் என்பதுதான் உண்மை. இந்த செய்திகள் அனைத்தும் சரியானது என்றுதான் பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

ஐ.பி ஹிந்துத்துவா சக்திகளின் ஊதுகுழலாக மாறிய சூழல் எவ்வாறு உருவானது?

இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல ரகசிய புலனாய்வு ஏஜன்சியின் மதரீதியான சிந்தனை பிரிட்டீஷாரின் காலத்திலிருந்தே பார்ப்பணர்கள் கடைப்பிடித்துவந்ததுதான் இது. மதராஸ் கவர்னர் பிரிட்டீஷ் அரசுக்கு இதைக்குறித்து கடிதம் எழுதியிருந்தார் என சுப்ரீம் கோர்ட் நீதிபதியொருவர் என்னிடம் சமீபத்தில் தெரிவித்தார். பிராமணர்களிடமிருந்துதான் தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கின்றன என்பது அவருடைய குற்றச்சாட்டு. சுதந்திரத்திற்கு பிறகு ஐ.பி இதனை பின்பற்றி வந்தது. அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை ரகசியமாக தேர்வு செய்தார்கள். 1993 வரை ஒருமுஸ்லிமுக்கு கூட ஐ.பியில் அதிகாரி பதவி கிடைத்ததில்லை என்பதே இவ்விஷயத்தின் தீவிரத்தை எடுத்தியம்புகிறது. முஸ்லிமான முன்னாள் உள்துறை செயலாளருக்கு சட்டபடி தகவல்களை வழங்க தயங்கிய வரலாறு ஐ.பிக்கு உண்டு. ஐ.பி.யின் அதிகாரப்பூர்வ தலைவர்தான் உள்துறை செயலாளர். இது பின்னர் சர்ச்சையானது. அரசால் கூட கட்டுப்படுத்த முடியாத சக்தியாக ஐ.பியின் சாம்ராஜ்யம் வளர்ந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. கர்கரே கொல்லப்படும் வரை மாலேகன் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா சக்திகளின் பங்கைக்குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் பின்னர் அவ்வாறான செய்திகள் வரவில்லை.

வழக்கின் தற்போதைய நிலை என்ன?

மாலேகான் உள்ளிட்ட ஏராளமான குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் செயல்பட்ட அபினவ் பாரத் மற்றும் கர்னல் காந்த் புரோகித் போன்ற தலைவர்களைக் குறித்து அதிர்ச்சி தரத்தக்க செய்திகள் வெளியாகவிருந்த நிலையில் தான் கர்கரேயை இந்த பூமியிலிருந்து அவர்கள் துடைத்து நீக்கிவிட்டார்கள். வழக்கில் கைது செய்யப்பட்ட தயானந்த பாண்டேயின் லேப்டாப்பிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விபரங்கள் நடுங்கச்செய்பவையாகவிருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைவர்களின் பெயர்களிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை நன்கொடையாக வழங்கிய சில பணக்கார முதலைகளின் பெயர்களும் அதில் இடம்பெற்றிருந்தன. கர்கரே கொல்லப்பட்ட பிறகுதான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. லேப்டாப்பில் இருந்த அனைத்துவிபரங்களையும் குற்றப்பத்திரிக்கையில் உட்படுத்த கர்கரேக்குப் பிறகு மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப்படைக்கு தலைமையேற்ற ரகுவன்ஷி தயாராகவில்லை.

கர்கரேயை நேரடியாக சந்தித்துள்ளீர்களா?

தனிப்பட்ட ரீதியாக கர்கரேயுடன் எனக்கு நெருங்கிய நட்பு இல்லை. என்னைவிட மிகவும் ஜூனியர் அதிகாரியாக இருந்தார் அவர். ஒன்றிரெண்டு முறை அவரை கூட்டங்களில் நேரடியாக சந்தித்த பழக்கம் உண்டு. சில ரிப்போர்ட்டுகளுக்காக அவருடன் பேசியபொழுது கர்கரே நேர்மையான, துணிச்சலான அதிகாரி என்று எனக்கு புரிந்தது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் செய்தது மற்ற எவரும் செய்யத் துணியாத பணியாகும். நான் அந்த வழக்கை விசாரித்திருந்தால் கூட கைதுச் செய்யபபட்டவர்களிடமிருந்து கிடைத்த விபரங்களை வெளியிட துணிந்திருக்கமாட்டேன். அவ்வளவு ஆபத்தை விளைவிக்கும் தகவல்கள் அவை அத்தகையதொரு துணிச்சலும், தேசத்தின் மீதான அபிமானத்திற்கும் தனது உயிரை அர்ப்பணிக்க வேண்டியதாயிற்று; அந்த நேர்மையான அதிகாரியான கர்கரே இந்நாட்டின அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஹிந்து ராஷ்ட்ரம் உருவாக்க முயற்சித்த ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடமிருந்து நமது அரசியல் சட்டத்தை பாதுகாக்கத்தான் அவர் முயன்றார்.

உங்களுடைய புத்தகத்தால் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

உறுதியாக என்னால் கூற இயலாவிடினும், சில நல்லமாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது எனக் கூறலாம். புனே குண்டுவெடிப்பு நடந்தபிறகு அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம். குண்டுவெடிப்பு நடந்து சில மணிநேரங்களுக்குள்ளாகவே ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பு அல்லது தனிநபர்களின் பெயர்களையோ வெளியிடும் வழக்கம் இம்முறை அரசு வட்டாரத்திலிருந்தோ காவல்துறையிடமிருந்தோ ஏற்படவில்லை. விரும்பத்தக்க மாற்றம் இது. மேலும் புலனாய்வு விசாரனையில் ஏ.டி.எஸ் தலைவர் ரகுவன்ஷியின் பெயர் இதுவரை முன்னிலைப் படுத்த்ப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும். (இப்போது ரகுவன்ஷி ஏ.டி.எஸ் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்) பத்திரிகைகள் தான் உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி யூகங்களை பிரசுரிக்கின்றன இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கரின் பெயரைக்குறிப்பிடுகின்றவர்கள் அபினவ் பாரத் அல்லது இதர ஹிந்துத்துவா இயக்கங்களை சந்தேகிப்பதில்லை. அபினவ் பாரத்தின் மையம்தான் புனே. ஹிந்துத்துவ வாதிகளின் ஏராளமான பயிற்சிகள் நடந்தது புனேயிலிலுள்ள மையங்களிலாகும். குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் பிடிப்பட்டவர்கள் என்ற நிலையில் இத்தகைய இயக்கங்களின் பெயர்களையும் பாரபட்சமற்ற முறையில் செயல்படுவதாக கூறும்பத்திரிக்கைகள் வெளியிடவேண்டும். அனால் அது நடக்கவில்லை தேசிய பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து எம்.கே. நாரயணனை மேற்குவங்காள கவர்னராக்கியது மத்திய அரசிடம் ஏற்பட்ட கொள்கை மாற்றத்தின் அடையாளம் என்று பிரபல தலித் சிந்தனையாளரும், எழுத்தாளருமான வி.டி. ராஜசேகர் குறிப்பிட்டிருந்தார். எம்.கே. நாராயணன் ஐ.பியின் தலைவர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். என்னவாயினும் அதிரடியான மாற்றம் என்பது சாத்தியமில்லை மத்திய அரசு நினைத்தாலும் கூட ஐ.பியை உடனடியாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாது. பத்திரிக்கைகல் ஐ.பியின் பக்கம் சார்ந்துள்ளதுதான் அதற்கு காரனம் அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை கைப்பற்ற பத்திரிக்கைகளின் உதவி தேவை புனே குண்டுவெடிப்பில் பாரபட்சமற்ற முன்னரே திட்டமிடாத புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை குற்றவாளிகள் யாராக இருக்கலாம் என்பதை முன்னரே தீர்மானித்துவிடக்கூடாது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி சமீபத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உங்கள் கவனத்தில் பட்டதா?

நிச்சயமாக அச்சம்பவம் குறித்து நான் மிகவும் கவலைகொண்டுள்ளேன். காரணம், அவ்வழக்கின் விசாரணையும், குற்றவாளிகளை கைது செய்ததும் மிகுந்த சந்தேகங்களை உண்டாக்குகிறது. இத்தகைய வழக்கினை அவ்வளவு எளிதாக தீர்க்கவியலாது என்பது மட்டுமல்ல அவ்வழக்கினை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன. சில நாட்களுக்குள்ளாகவே குற்றவாளிகள் பயன்படுத்திய ரைஃபிள்களை கைப்பற்றியது, குற்றவாளிகளை கைது செய்தது, பணம் பட்டுவாடா செய்யப்பட்ட வழியை கண்டறிந்தது ஆகியவற்றை முன்னாள் போலிஸ் அதிகாரி என்ற முறையில் என்னால் நம்ப இயலவில்லை. நிழலுலக தாதாக்கள் தான் இக்கொலைக்குப் பின்னால் செயல்பட்டுள்ளது என போலீஸ் கூறுகிறது. வெளிநாட்டில் வாழும் நிழலுலக தாதா ஹாவாலா வழியாக கொலையாளிகளுக்கான பணத்தை அனுப்பிக் கொடுத்ததாகவும் போலீஸ் கூறுகிறது. 25ஆயிரம் ரூபாய்க்காக மும்பை போன்ற நகரத்தில் ஒருவர் ஒரு கொலையைச் செய்வது என்பது நடக்கக்கூடிய காரியம் அல்ல. அதுமட்டுமல்ல நிழலுலக தாதாக்கு வெறும் ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாக லட்சக்கணக்கான பணத்தை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சேர்க்கலாம் என்றிருக்க ஒரு லட்சம் ரூபாயை ஹவாலா வழி அனுப்பினார் என்பதை எவ்வாறு நம்ப இயலும்? உண்மையில் இதன்மூலம் பொதுமக்களுக்கு புதியதொரு எண்ணத்தை உருவாக்குவதற்கான சம்பந்தப்பட்டவர்களின் முயற்சி இது என்பது எனது உறுதியான சந்தேகம். அதாவது ஹிந்துத்துவா பயங்கரவாதத்தை எதிப்பதற்கு புதியதொரு நிழலுலக கும்பல் ஒன்று உருவாகி வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களுடைய முயற்சி. இது உறுதியாக்கப்பட்டால் எதிர்காலத்தில் தங்களுக்கு தடையாக இருக்கக்கூடியவர்களை நிழலுலக கும்பலின் போர்வையில் எளிதாக தீர்த்துக்கட்ட இயலும். கர்கரேயைக் கொன்றவர்கள்தான் ஆஸ்மியின் கொலைக்குப்பின்னணியிலும் செயல்பட்டுள்ளார்கள் என்று நான் கருதுகிறேன். ஒரு வேளை நானும் அவர்களுடைய ஹிட் லிஸ்டில் (கொலைப்பட்டியலில்) இடம் பெற்றிருக்கபாட்டேன் என்று என்ன நிச்சயம் உள்ளது?

உங்களுடைய புத்தகம் போதுமான விவாதத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறதா?

நிச்சயமாக இல்லை. எனது புத்தகத்தைப் பற்றி விவாதிக்க எவருக்கும் துணிவில்லை என்பதுதான் உண்மை. எனது புத்தகம் வெளியானவுடன் ஒரு பத்திரிக்கையின் புனே பதிப்பில் அதைக் குறித்த விமர்சனம் ஒன்று இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் மறுதினம் எனது பேட்டியை பிரசுரித்தார்கள். 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி இது நடந்தது. அடுத்த நாள் எனது வீட்டில் தொலைக்காட்சி அலைவரிசைகளின் செய்தியாளர்கள் மற்றும் கேமரா மேன்களின் கியூவாக இருந்தது. இந்தியாவில் பிரபலமான சேனல்களின் செய்தியாளர்களெல்லாம் என்னைக் காண வந்தவர்களில் அடங்கும். பதினைந்து இருபது நிமிட பேட்டியை எடுத்துவிட்டு அவர்கள் சென்றனர். ஆனாலெவருமே அதனை ஒளிப்பரப்பவில்லை. டெல்லியில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து நடந்த சம்பவத்தைக் கூறினார். ஐ.பி. தான் இதில் தலையிட்டுள்ளது. எனது புத்தகத்தைக் குறித்து ஆதரவாகவோ அல்லது எதிராகவோ ஒரு கருத்தைக் கூட கூறக்கூடாது என மத்திய அரசு வாயிலாக தொலைக்காட்சி அலைவரிசைகளின் முதலாளிகளுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்னுடனான பேட்டி முடிந்ததும் ஐ.பி.யின் பதிலை அறிவதற்காக சென்ற சேனல்களின் செய்தியாளர்களிடமிருந்து தான் ஐ.பிக்கு எனது புத்தகத்தைப் பற்றி தெரியவந்துள்ளது.

புத்தகத்தின் உள்ளடக்கத்தின் அபாயத்தைப் பிரிந்த அவர்கள் அது விவாதமாகாமலிருக்க முடிந்தவரை முயற்சி செய்துள்ளார்கள். உண்மையில் நாட்டில் பெரிய பயங்கரவாதிகளை பயமுறுத்திய மிகப்பெரிய பயங்கரவாதியாக நான் தற்பொழுது மாறிவிட்டேன். மும்பை காவல்துறையில் சிலருக்கு என்னை தொலைபேசியில் அழைக்கக்கூட இப்பொழுது பயம். எனது தொலைப்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுகிறது என்ற எண்ணம் அவர்களுக்குண்டு. என்னுடன் தொடர்கொள்பவர்கள் பணியில் தொடர முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

பொதுமக்களிடமிருந்து போதுமான ஆதரவு உங்களுக்கு கிடைத்துள்ளதா?

துவக்கத்தில் மக்கள் தயங்கி நின்றாலும், தற்பொழுது ஆதரவு தெரிவிக்கின்றனர். மஹாராஷ்ட்ரா மாநிலத்திலேயே மும்பை, நாக்பூர் ஆகிய இடங்களில் எனது புத்தகத்தைக் குறித்த விவாதங்கள் நடந்துள்ளன. இந்தியாவின் வேறு சில இடங்களிலும் இதுகுறித்து விவாதம் நடை பெறுகிறது.

ஐ.பியை சுத்திகரிக்க என்ன வழி?

அதற்கு குறுக்கு வழிகள் ஒன்றுமில்லை ஐ.பியை முற்றிலும் மறுகட்டமைக்கவும், சுத்தப்படுத்தவும் மத்திய அரசு தயாராக வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் அது எளிதாக நடக்ககூடியது அல்ல. எனினும் ஆட்சியாளர்களின் புறத்திலிருந்து சில சுப அறிகுறிகள் தெம்படுகிறது. அரசு நடவடிக்கையை விட குடிமக்களின் பங்குதான் முக்கியமானது.

ஐ.பி. மற்றும் பிராமணவாதிகளின் கொடூரதந்திரங்களுக்கு ஊதுகுழலாக செயல்படும் பத்திரிக்கைகளின் மீது சமூக ரீதியான கட்டுப்பாடுகள் தேவை. அதனைவிட தங்களைக் குறித்த தவறான புரிந்துணர்வை நீக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும். தேசத்தின் சாதாரணமக்களான ஹிந்து மக்களின் உள்ளத்திலிருக்கும் சந்தேகங்களை நீக்க தலைவர்களும் முன்வரவேண்டும். இவ்வகையிலான கூட்டு முயற்சியின் மூலமாகவே இத்தகைய சவால்களைசந்திக்க முடியும்.

நன்றி: தேஜஸ்
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: