சென்னை: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நபர், தனது 11 மாத கைக்குழந்தையை சுவற்றில் வீசி அடித்து மிகக் கொடூரமாக கொன்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தேவராஜ் முதலி தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (30). இவர் பெசன்ட்நகரில் உள்ள ஒரு ஜிம்மில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (25). 4 குழந்தைகள் உள்ளனர்.
கடைசி குழந்தையான தனுஷ்காவுக்கு (11 மாதம்) கடந்த 1ந் தேதி உடல் நலம் சரியில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், குழந்தை இறந்ததாக கூறி கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தப் பின்னணியில் கடந்த 11ம் தேதி ஜாம்பஜார் காவல் நிலையத்தில் விஜயனின் மனைவி நித்யா ஒரு புகார் கொடுத்தார்.
அதில், 1ந் தேதி அன்று எங்களது 11 மாத கைக்குழந்தை தனுஷ்கா அழுது கொண்டிருந்தாள். அப்போது எனது கணவர் விஜயன் குழந்தையை தூக்கி சுவற்றில் வீசினார். அதில் குழந்தை இறந்துவிட்டது. ஆனால் அதை மறைத்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் விஜயனை பிடித்துவிசாரித்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின்னர்தான் குழந்தை இறந்ததாக விஜயன் கூறினார். இதையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தையின் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் இது இயற்கை மரணம் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து மீண்டும் விஜயனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் உண்மையை ஒத்துக் கொண்டார்.
போலீஸாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலம்:
சம்பவத்தன்று குழந்தை தனுஷ்காவுக்கு காய்ச்சல் இருந்ததால் அழுது கொண்டிருந்தது. அப்போது நான் என் மனைவி வித்யாவிடம் சாப்பாடு போடும்படி கூறினேன். அதற்கு வித்யா குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. அதற்கு மருந்து கொடுத்துவிட்டு தூங்க வைத்த பின்னர் சாப்பாடு போடுகிறேன் என்றார்.
தொடர்ந்து குழந்தை அழுது கொண்டிருக்கவே ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி வீசி எறிந்தேன். குழந்தை சுவற்றில் பட்டு கீழே விழுந்ததில் நெற்றியில் காயம்பட்டு மயக்கம் அடைந்தது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவரிடம் கொண்டு சென்றேன். குழந்தையை பரிசோதித்த அவர் சிறிது நேரத்திற்கு முன் குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.
இதையடுத்து குழந்தையை அடக்கம் செய்ய அவரிடம் சர்ட்டிபிகேட் கேட்டேன். குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் அவரும் சர்ட்டிபிகேட் கொடுத்தார். அதன் மூலம் குழந்தையை அடக்கம் செய்தேன் என்றார்.
இதையடுத்து போலீஸார் விஜயனைக் கைது செய்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment