
தர்மபுரி : தர்மபுரி அருகே திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி, இன்னொரு லாரி மீது மோதி கவிழ்ந்ததில், 18 பேர் பலியாயினர்; 34 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா பெல்ரம்பட்டியை அடுத்த திருமல்வாடியைச் சேர்ந்தவர் கணேசன், சுகந்தி தம்பதி. இவர்களது மகள் நித்யா(22). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள இவருக்கும், பொம்மிடியை அடுத்த பில்பருத்தியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் அருள் என்பவருக்கும், நேற்று காலை பில்பருத்தியில் திருமணம் நடக்க இருந்தது.
நேற்று முன்தினம், இரவு 9 மணிக்கு திருமல்வாடியில் இருந்து பில்பருத்திக்கு, மணப்பெண் நித்யா, பெற்றோர் கணேசன், சுகந்தி மற்றும் உறவினர்கள் 65 பேர், ஐஷர் மினி லாரியில் புறப்பட்டனர். 75 சதவீதம் பெண்கள், மினி லாரியில் நின்றபடி பயணம் செய்தனர். கோட்டூரைச் சேர்ந்த டிரைவர் குமரவேல், லாரியை ஓட்டி சென்றார். பாலக்கோடு அடுத்த கடைமடை ரயில்வே கேட்டை மினி லாரி கடந்து சென்ற போது, கர்தாரப்பட்டி அருகே இரவு 10.30 மணிக்கு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது, எதிரில் பாலக்கோடு நோக்கி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
மினி லாரியின் வலது பக்கத்தின் தடுப்புகள் தனியாக கழன்று விழுந்தன. மினி லாரியில் வலது பக்கமாக நின்று பயணம் செய்தவர்கள் மீது, லாரி மோதி, சில அடி தூரம் இழுத்துச் சென்றது. இரவு நேரம் என்பதாலும், அந்த பகுதியில் குடியிருப்பு வீடுகள் குறைவாக இருந்ததாலும், உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. மினி லாரிக்கு பின், சரக்கு ஆட்டோவில் மணப்பெண்ணின் உறவினர்கள் வந்தனர். அவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தகவலறிந்த எஸ்.பி., சுதாகர், கலெக்டர் அமுதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மீட்பு பணியை துரிதப்படுத்தினர். சம்பவ இடத்தில் 13 பேரும், சிகிச்சைக்கு அழைத்து வரும் வழியில் நான்கு பேரும், நேற்று காலை மருத்துவமனையில் ஒருவர் உள்ளிட்ட 18 பேர், பரிதாபமாக இறந்தனர். 34 பேர் படுகாயம் அடைந்து தர்மபுரி, பாலக்கோடு, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான கொடுமை : திருமண கோஷ்டி சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாயினர். திருமல்வாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரூபாவதி, அவரது அண்ணன் மகள் தேவி, அன்ணன் மகன் ஸ்ரீதர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தேவி தர்மபுரியில் நர்ஸ் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். திருமணத்துக்காக நேற்று முன்தினம் மாலை திருமல்வாடி சென்று மணப்பெண்ணுடன் மினி லாரியில் வந்தார். ஸ்ரீதர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்ப படித்து வந்தான். ரூபாவதியின் அண்ணன் மகன் மணிவண்ணன் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
மணப்பெண்ணின் பெற்றோரும் காயம் : விபத்து நடந்த மினி லாரியின் முன் பக்கத்தில் மணப்பெண் நித்யா மற்றும் அவரது பாட்டி ஆகியோர் மட்டும் அமர்ந்து பயணம் செய்தனர். இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மணப்பெண்ணின் பெற்றோர், உறவினர்களுடன் மினி லாரியின் பின் பகுதியில் நின்றபடி பயணம் செய்தனர். மணப்பெண் நித்யாவின் தாய் சுகன்யாவுக்கு கண்ணில் பலத்த காயம் அடைந்து சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை கணேசன் காலில் பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
"கிடைத்த வரை அள்ளு!' : தர்மபுரி அருகே திருமண கோஷ்டியினர் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதில், உயிருக்கு போராடியவர்களின் உடைமைகளை பறித்த அவலம் நடந்துள்ளது. திருமண வீட்டுக்கு செல்வதால், பெண்கள் அனைவரும் அதிகளவில் நகைகள் அணிந்திருந்தனர். விபத்து நடந்த பகுதியில் இருள் சூழ்ந்து இருந்ததால், மீட்பு பணியில் ஈடுபடுவதோடு, சிலர் விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அணிந்திருந்த நகைகள், அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர்.
ஐ.ஜி., சிவனாண்டியிடம் கேட்ட போது, ""விபத்தில் சிக்கி பலியானவர்கள் அணிந்திருந்த நகைகளை போலீசார் பத்திரமாக மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நகைகள் திருடு போனது குறித்து, இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கோர விபத்தால் நின்ற திருமணம் : மணப்பெண்ணின் தந்தை கணேசன் கூறுகையில், "பஸ்சில் அழைத்துச் செல்ல வசதியில்லாததால், மினி லாரியில் அழைத்துச் சென்றேன். எதிர்பாராத விபத்தால், என் மகள் திருமணமும் நின்று, உறவினர்களையும் பலி கொடுத்தது மிகுந்த வேதனை அளிக்கிறது' என்றார்.
மணப்பெண்ணின் தாய்மாமா மாதப்பன் கூறுகையில், "இன்று (நேற்று) காலை 7.30 முதல் 8.30 மணியில் முகூர்த்தம் நடக்க இருந்தது. எதிர்பாராது நடந்த விபத்தால் பெரும் சோகத்தில் உள்ளோம். மணப்பெண் நித்யாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உறவினர்களுடன் கலந்து பேசி, சில நாட்கள் கழித்து திருமணம் செய்து வைப்போம்' என்றார்.
0 comments:
Post a Comment