
புது தில்லி, ஜூன் 22: நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளில் ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரிசா, பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்ஸல்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைகளில் மத்திய ரிசர்வ் படை போலீஸôர் (சி.ஆர்.பி.எஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸôர் (பி.எஸ்.எஃப்), மாநில போலீஸôர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் நக்ஸல் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸôர் மீதும் பயங்கரத் தாக்குதல்களை அவ்வப்போது நக்ஸல்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது பயங்கரத் தாக்குதல்களை நக்ஸல்கள் நடத்தி வருகின்றனர். தந்தேவாடா பகுதியில் 2 மாதங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் நக்ஸல் வேட்டையில் ராணுவ அதிகாரிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராணுவம் யோசனை தெரிவித்துள்ளது. இதையடுத்து ராணுவ அதிகாரிகளை தேடுதல் வேட்டைக்குப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
நக்ஸல் வேட்டையில் ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு ராணுவத் தலைமையகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் ராணுவத்திலுள்ள மேஜர் ஜெனரல்களை பயன்படுத்த முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த யோசனை கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்னல் அல்லது பிரிகேடியர் நிலையிலுள்ள ராணுவ அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
எத்தனை அதிகாரிகள் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவர் என்பதை மத்திய அரசு விரைவில் தீர்மானிக்கும் என்று தெரிகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்த ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுடன் திறம்பட சண்டையிட்டு அவர்களைக் கொன்ற ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நக்ஸல் தேடுதல் வேட்டையில் தீவிரத்தைக் காட்டுவதற்காக மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. நக்ஸல் வேட்டையில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎஃப் படை வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், மாநில போலீஸôர், அதிரடிப் படை வீரர்களுக்கு தேவையான ஆலோசனைகள், போர் தந்திரங்கள், தாக்குதல் வியூகங்களை கர்னல், பிரிகேடியர் அதிகாரிகள் வழங்குவர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய போர் முறைகள், நக்ஸல்களை ஒடுக்க பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.
மேலும் நக்ஸல்கள் ஆங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்துவைத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காகவும் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தப்படுவார்கள்.
புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றுதல், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல் போன்ற பணிகளில் சிறந்து விளங்கும் ராணுவ அதிகாரிகள் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்.
சாலை வழியாக செல்ல முடியாத இடங்களுக்கு தேடுதல் வேட்டைக்குச் செல்லும் போலீஸôரை, அங்கு கொண்டு செல்ல வசதியாக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமானப் படை தளபதிக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீஸôர் உடனடியாக அந்தப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியும். ஆப்பிரிக்க நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றி வரும் இந்திய விமானப் படையின் 15 ஹெலிகாப்டர்களை திரும்ப அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கைக்கு ராணுவ அதிகாரிகளை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுக்க உள்ளது.
0 comments:
Post a Comment