"பாரத் பந்த்' தீவிரத்தால் ரூ.10,000 கோடி உற்பத்தி இழப்பு


புதுடில்லி : "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., உட்பட, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, "பாரத் பந்த்'தால், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது' என, "அசோசெம்' என்ற வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் சார்பில், நேற்று, "பாரத் பந்த்' அறிவிக்கப்பட்டது.இந்த, "பந்த்'தால் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பீகார், குஜராத், ஒரிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்திலும், இடதுசாரி கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், கேரளாவிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சி ஆளும் மகாராஷ்டிராவிலும், "பந்த்'தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆந்திரா, அரியானாவில், "பந்த்'தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில், "பந்த்' பிசுபிசுத்தது."பந்த்'தின் பாதிப்பு அதிகமாக இருந்த மாநிலங்களில், பஸ், ரயில்கள் மீது தாக்குதல், போராட்டக்காரர்கள் மீது தடியடி, போலீசார் மீது கல்வீச்சு என, ஆங்காங்கே பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. பல இடங்களில் சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டதோடு, டயர்களும் எரிக்கப்பட்டன. பல இடங்களில் போராட்டக்காரர்கள் ரயில்களை தடுத்து நிறுத்தினர். பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
டில்லி மற்றும் லக்னோவில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏ.பி.பரதன், டி.ராஜா ஆகியோரும் கைதாகினர். இதுதவிர வேறு பல தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். "பந்த்'தால் பல மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.இதுவரை இல்லாத வகையில், "பந்த்' பெரு வெற்றி பெற்றதாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி கூறினார். நாடுமுழுவதும் உள்ள பல்வேறு கட்சிகள், "பந்த்'தில் ஈடுபட்டதால், இதன் தாக்கம் பெரிய அளவில் தெரியும் அளவிற்கு வெற்றியாகி விட்டது என்று தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர் அத்வானி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "இடது சாரிக்கட்சிகள், "தங்கள் நண்பர்களான அதிதீவிர வலதுசாரிகளுடன் சேர்ந்து, ஒரே நாளில் எதிர்ப்பைக்காட்ட முன்வந்ததற்கு நன்றி; ஆனால், "பந்த்' என்பது சட்ட விரோதம், இது பெரிய வெற்றியை பெறவில்லை' என்றார்.
இதற்கிடையில், இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளன (அசோசெம்) பொதுச் செயலர் ரவாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நாட்டின் பொருளாதாரத்தை, "பாரத் "பந்த்' முடக்கி விட்டது. ஒரு நாளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.""பெரும்பாலான மாநிலங்களில் உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். அதாவது வளர்ச்சி வீதம் 8 சதவீதத்திற்கு மேல் இருக்கும்,'' எனக் கூறியுள்ளார்.
"ஏசி' அறைக்காக கட்சிகள் மோதல் :: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஒற்றுமையாக "பாரத் பந்த்' நடத்திய பா. ஜ., மற்றும் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் உத்தரப்பிரதேசத்தில் "ஏசி' அறைக்காக மோதிக்கொண்டனர். மத்திய அரசை கண்டித்து லக்னோவில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தால் அருண்ஜெட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் போலீஸ் லைன் பகுதியில் உள்ள "ஏசி' அறையில் அடைக்கப்பட்டனர். இதை கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் "கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி தலைவர்களான சிவபால் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் "ஏசி' அறையில் அடைக்க வேண்டும்' என கோஷமிட்டனர்.
இதைக் கண்டித்து பா. ஜ., தொண்டர்கள் சமாஜ்வாடி கட்சியை எதிர்த்து கோஷமிட்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீஸ் அதிகாரிகள் "ஏசி' அறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்ஜெட்லியையும், முக்தார் அப்பாஸ் நக்வியையும் வெளியேற்றினர். இதையடுத்து சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் அமைதியானார்கள்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: