இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஐரோப்பாவின் மிக மோசமான இனப் படுகொலையாக வர்ணிக்கப்படும் செரப்ரெனிகா இனப்படுகொலை இடம்பெற்று 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பொஸ்னியா இச் சம்பவத்தை நினைவுகூருகின்றது. பொஸ்னிய சேர்பியர்கள் இதன் போது சுமார் 8000 முஸ்லிம்களை கொன்றுகுவித்தனர்.
இவ்வினப்படுகொலை பொஸ்னிய சேர்பிய படைகள் முஸ்லிம் பிரதேசமான செரப்ரெனிகாவை நோக்கி முன்னேறிய போது இடம்பெற்றது. பின்னர் செரப்ரெனிகா ஐ.நா படைகளின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டது.
சேர்பிய படைகள் செரப்ரெனிகாவை நோக்கி முன்னேறி வந்த போது நகரில் இருந்த ஆண்களும் பெண்களும் வளைத்திருந்த மலைக் குன்றுகளுக்குள் ஒதுங்கி தம்மை பாது காத்துக்கொள்ள முற்பட்டனர். இருந்தும் இவர்கள் சேர்பிய படைகளால் வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர்.
பின்னர் இவ்வினப்படுகொலையை மூடிமறைக்கும் முயற்சியில் சேர்பிய படைகள் ஈடுபட்டன. இதற்காக 70இற்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் படுகுழிகள் தோண் டப்பட்டு சடலங்கள் புதைக்கப்பட்டன.
சர்வதேச நீதிமன்றத்தினாலும் ஐ.நாவின் போர்க்குற்ற நீதிமன்றத்தினாலும் இச்சம்பவம் இனப் படுகொலைக் குற்றமாக இனங்காணப்பட்டது. இச்சம்பவம் 1990களில் இடம்பெற்ற யூகோஸ் லாவிய கூட்டரசின் பிளவின் இருண்ட தினமாகக் கருதப் படுகின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஞாபகார்த்த நிகழ்வு இவ் வினப் படுகொலையில் தனது இரண்டு தலைமுறைகளை இழந்த துயரத்திலிருந்து மீளப் போரா டிக்கொண்டிருக்கும் செரப்ரெனிகா வுக்கு ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாகக் கொள்ளப்படுகின்றது.
இச்சம்பவத்தில் சுமார் 6500 பேர் தமது உறவுகளை பறி கொடுத்தவர்களென இனங் கானப்பட்டுள்ளதுடன் சம்பவ தினத்திலிருந்து காணாமற்போனோர் பலரின் உடல்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
சேர்பியா இவ்வினப் படுகொலையின் அளவை பல வருடங்களாக மறுத்துவருவதுடன் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படும் தொகையினை விடக் குறைவு எனவும் கூறிவருகின்றது.
இருந்தும் கடந்த மார்ச் மாதம் சேர்பிய பாராளுமன்றம் இவ் வினப்படுகொலையை கண்டித்து பிரகடனம் ஒன்றை வெளி யிட்டதுடன் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களிடம் வெளிப்படையாக மன்னிப்பையும் கோரியது.
இதேவேளை இவ்வினப் படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் ரட்கோ மிடலாடிக் சேர்பியாவில் மறைந்திருப்பதாக நம்பப்படுவதுடன் சேர்பியர்கள் பலர் இவரை ஒரு போர் வீரராகவே இன்றுவரை நோக்குகின்றனர்.
மேலும் இவ்வினப்படுகொலையின் மற்றுமொரு சூத்திரதாரியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ராடொவான் கிராட்சிக் 2008இல் பெல்கிரேட்டில் கைது செய்யப்பட்டார். தற்பொழுது இவருக்கெதிராக போர்க் குற்றம், இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்திற் கெதிரான குற்றம் என்பவற்றுக்காக முன்னாள் யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நியாய சபையில் விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment