இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த "தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்'' முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உலக வங்கி 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பயனாக 564 கோடியே 94 லட்ச ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 7 லட்ச ரூபாயும் சேர்த்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய்ப்புற்று நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 10 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
TN.Gov.TNETஅதே போல 1670 கோடி ரூபாய் உலக வங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச் சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச் சாலைகளை மேம்படுத்துதல், 1033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதியுதவி வழங்கி 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதலமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக் கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக 1903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்டமதிப்பீட்டில் 31.3.2012 வரை இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று நடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு.சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா கையொப்பமிட்டனர்.
சாலை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறை செயலாளர் ஜி.சந்தானமும், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் ப்ரீத்தி குடேசியாவும் கையெழுத்திட்டனர்.
0 comments:
Post a Comment