
தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் விவாதம் துவங்கிவிட்ட நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில், எந்தக் கட்சியினரும், "தில்லுமுல்லு' செய்ய முடியாத அளவிற்கு, தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியினர் மொத்தமாக விண்ணப்பங்களை கொண்டு வந்தால் ஏற்க முடியாது என்பது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தி.மு.க., அரசின் ஆட்சிக் காலம் சுளையாக நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததும், தடபுடலாக கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் முதல்வர் கருணாநிதி. மாநாடு முடிந்துள்ள நிலையில், சட்டசபை தேர்தலுக்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க., தலைமையும், தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், சட்டசபை பொதுத்தேர்தல் ஆர்வம் இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது. கூட்டணிக் கணக்கு குறித்து, இப்போதே பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. கடந்த கால தேர்தல்களில், வாக்காளர்கள் பெயர் கொத்து கொத்தாக மாயமான விவகாரம், கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தலில், முறைகேடுகளை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் கமிஷன் பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் அரசியல் கட்சியினர் எந்தவித தில்லுமுல்லுகளையும் செய்து விடாதபடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளுக்கும், திருத்தப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடும் வாக்காளர்கள், தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். "புகைப்படம், பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள அதிகாரிகளிடம் 6, 7, 8, 8ஏ ஆகிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கலாம். வரும் 16ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் இதற்கான வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி துவங்கி, 2010 ஜனவரி 1ம் தேதியை தகுதியாகக் கொண்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று, 18 வயது பூர்த்தியடைந்தவர்களை இந்த பட்டியலில் சேர்த்துள்ளனர். ஒவ்வொரு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னரும், 18 வயது பூர்த்தியாகி ஓட்டளிக்கத் தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்கவும், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள் மற்றும் தகுதியின்றி போலியாக இணைக்கப்பட்டவர்களை நீக்கவும் இந்த சரிபார்ப்பு பணி உதவுகிறது. ஆனால், இந்த கணக்கெடுப்பின் போது பெருவாரியான வாக்காளர்கள் நீக்கப்படுவதும், பட்டியல் வெளியிட்ட பின் விடுபட்டவர்களை சேர்க்கும் விதமாக மொத்தமாக விண்ணப்பங்கள் வருவதும் வாடிக்கையாகி விட்டது. இதன் பின்னணியில், உள்ளூர் அரசியல்வாதிகளின் கைங்கர்யம் இருக்கிறது என்பதால், இந்தப் பணியில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
தங்களது ஆதரவாளர்களைச் சேர்ப்பதும், எதிர்ப்பாளர்களை நீக்குவதற்குமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தொகுதியைக் கைப்பற்றலாம் என்பதால், கட்சித் தொண்டர்கள் மூலம் தங்களது வேலையைத் துவக்கிவிட்டனர். இதனால், அரசியல் கட்சியினர் ஒவ்வொருவரும், தங்களது கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு, எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகளை கண்காணிக்கின்றனர். மொத்தமாக பெயர் சேர்ப்பு மற்றும் விடுதல் பிரச்னை குறித்து, இதற்கு முன்னர் கோர்ட் வரை சென்ற அனுபவம் காரணமாக, இந்த முறை தேர்தல் கமிஷன், "சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வர வேண்டும். "மொத்தமாக விண்ணப்பங்களை ஏற்க முடியாது; அவரவர் கையெழுத்து இருக்க வேண்டும்' என்பது போன்ற கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. எனினும், இது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது தேர்தலின் போது தான் தெரியும்.
0 comments:
Post a Comment