அகமதாபாத்: சோராபுதீன் ஷேக் போலி என்கெளன்டர் வழக்கை திசை திருப்பி, அவரை தீவிரவாதி என்பது போல் காட்ட, இரு ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்க குஜராத் அமைச்சர் அமித் ஷா முயன்றதாக சிபிஐ கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கை அமுக்க சோராபுதீன் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் பணம் தரவும் அவர் முயன்றுள்ளார்.
அமித் ஷா மீது சிபிஐ பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்களான சகோதரர்கள் ராமன் படேல், தசரத் படேல் ஆகியோர் தங்கள் தொழிலுக்கு பிரச்சனைகள் வராமல் இருக்க அமைச்சர் அமித் ஷாவுக்கு 2006ம் ஆண்டில் 'protection money' என்ற வகையில் ரூ. 70 லட்சம் தந்துள்ளனர்.
பணப் பரிவர்த்தனைகளுக்காக அமித் ஷா பயன்படுத்தும் அஜய் படேல் என்ற நபரிடம் இந்தப் பணத்தை 3 தவணைகளாக வழங்கினர். இந்த வகையில் அமைச்சருக்கு இவர்கள் பழக்கமானார்கள்.
இதற்கிடையே சோராபுதீன் ஷேக் போலி என்கெளண்டரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷேக் ஒரு தாதா, தீவிரவாதி, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் என்று பொய் வழக்குகள் புனைய முயற்சிகள் நடந்தன.
அந்த வகையில் படேல் சகோதரர்களை அமைச்சர் அமித் ஷா சார்பில் சந்தித்த அப்போதைய குஜராத் டிஐஜி வன்சாரா, உங்களிடம் சோராபுதீன் ஷேக் பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு வாக்குமூலம் தர வேண்டும் என்றார்.
இதையடுத்து உங்கள் மீது சமூக விரோதிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று அமித் ஷா இவர்களை மிரட்டினார்.
மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதையடுத்து சோராபுதீன் ஷேக் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் பணம் தந்து வழக்கை திசை திருப்பவும் அமித் ஷா முயன்றார். அப்போதேய துணை போலீஸ் கமிஷ்னர் அபய் சுடாஸ்மா மூலம் சோராபுதீன் குடும்பத்தினரை அமித் ஷா தொடர்பு கொண்டு இந்தப் பணத்தைத் தர முயன்றார்.
அதை வாங்க அந்தக் குடும்பம் மறுக்கவே, உங்களையும் போட்டுத் தள்ள அமித் ஷா தயங்க மாட்டார் என்று துணை கமிஷ்னர் மிரட்டல் விடுத்தார்.
அதே போல இந்த போலி என்கெளண்டர் குறித்து வழக்குத் தொடர்ந்த ஷாகித் காத்ரி என்பவரையும் அமித் ஷா நேரடியாகவே மிரட்டினார். வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உனக்கும் சோராபுதீ்ன் கதி தான் ஏற்படும் என்று ஷா அவருக்கு மிரட்டல் விடுத்தார்.
இந் நிலையில் இந்த போலி என்கெளண்டர் விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பான அனைத்து விவரங்களையும், போலி என்கெளண்டர் தொடர்பாக குஜராத் போலீசாரிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அழித்துவிடுமாறு அமித் ஷா தனக்கு மிக நம்பி்க்கையான மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் அதைச் செய்து முடித்தனர்.
மேலும் ரியல் எஸ்டேட் அதிபர்களான படேல் சகோதரரர்களை அஜய் படேல் மூலம் மீண்டும் தொடர்பு கொண்ட அமித் ஷா, சோராபுதீன் பணம் கேட்டு மிரட்டியதாக உங்களுக்கு ஒரு எழுத்துப்பூர்வமாக விவரம் தரப்படும். இதையே நீங்கள் சிபிஐயிடம் வாக்குமூலமாகத் தர வேண்டும். தவறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டினார்.
ஆனால், அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்ததோடு சிபிஐ முன் ஆஜராகி நடந்த விவரகங்கள் அனைத்தையும் மறைக்காமல் தெரிவித்துவிட்டனர்.
அவர்கள் தந்த விவரத்தின் அடிப்படையில் அமித் ஷாவின் தொலைபேசி உரையாடல்கள் பட்டியலில் ஆரம்பித்து பலவிதமான சாட்சியங்களை சிபிஐ திரட்டியதில் சோராபுதீன் போலி என்கெளண்டரை ஷாவே தலைமை தாங்கி நடத்தியது உறுதியானது.
மேலும் அவரது மனைவி கெளசர் பீவியை கடத்திச் செனறு கொலை செய்து உடலை எரித்து அவர் காணாமல் போய்விட்டதாக வழக்குப் பதிவு செய்ய வைத்ததும் அமித் ஷா என்பதும் அதற்கு குஜராத் ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் முழு உடந்தை என்பதும் உறுதியானது.
இது தவிர சோராபுதீன் என்கெளண்டரை நேரில் பார்த்துவிட்ட பிரஜாபதியையும் இன்னொரு என்கெளண்டரில் போட்டுத் தள்ளி, அவர் சுட்டுவிட்டு தப்பியோடியாக ஒரு பொய் சம்பவத்தை உருவாக்கியதிலும் ஷாவுக்குத் தொடர்புள்ளது என்று சிபிஐ கூறியுள்ளது.
Home
Uncategories
ஆள்கடத்தல், மிரட்டல், கொலை, உடல் எரிப்பு: அமித் ஷாவின் 'திடுக் பின்னணி' குறித்து சிபிஐ!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment